பொங்கல் விழா
தி கிரேட்டர் அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் (GATS) கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி பொங்கல் விழா, க்விநெட் பகுதியில் உள்ள மெடெளக்ரீக் பள்ளியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழா தொடக்கத்தில், சமீபத்தில் கொலம்பியா விண்வெளிக் கலம் எரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பாரம்பரியமிக்க பரதநாட்டியத்தோடு அட்லாண்டா அசோசியேஷன் ஃபார் பரதநாட்டியக் கலைஞர்கள் விழாவின் கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைத்தனர். ஆர்வத்தோடு குழந்தைகள் நிகழ்த்திக் காட்டிய தேசபக்திப் பாடல்களும்,நகைச்சுவைக் குறு நாடகங்களும், ஃபாஷன் ஷோவும் நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டின.

GATS உறுப்பினர்கள் நடத்திய வில்லுப்பாட்டு நிகழ்ச்சி கேட்பவரை மெய்மறக்கச் செய்தது.

வில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக GATS உறுப்பினர்களும், அவர்களின் குழந்தைகளும் பொங்கல் தொடர்பான பாரம்பரிய நிகழ்வுகளை வித்தியாசமான பாடல்களாலும் நடனங்களாலும் அற்புதமாகக் கண்முன்னே நிறுத்தினார்கள். பொங்கல் விழா பற்றி மட்டுமின்றி, சிவராத்திரி, கிருஷ்ணஜெயந்தி, ஈத் பண்டிகை, கிறிஸ்துமஸ், போன்ற பண்டிகைகளைப் பற்றியும் அவர்களது பாடல்களிலும், நடனங்களிலும் வெளிப்படுத்தினார்கள். அதனால், வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு விழாவாக இது அமைந்திருந்தது. விழாவின் முடிவில், இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்டவர்களுக்குக் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கார்கியா பகுதியில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வதற்குப் பல வகைகளில் வாய்ப்பு அளிக்கும் கிரேட்டர் அட்லாண்டா தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா மூலமாக இந்த வாய்ப்பையும் அவர்களுக்கு மிகச் சரியாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

© TamilOnline.com