முன் கதை: Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். சட்ட வழக்கு நிறுவனம் வைத்திருந்த அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண் MBA படித்து பங்கு வர்த்தகம் புரிபவன். ஆனால் துப்பறியும் ஆர்வத்தால் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவழிக்கிறான்! அவனுக்கு மிகப் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட்ரானிக்ஸ்! ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். அவளுக்கு சூர்யாவின் மேல் உள்ள ஒரு தலை நேசத்தைச் சூர்யாவிடம் கூற வேண்டாம் எனத் தன் தம்பி கிரணிடம் கட்டாயமாகக் கூறியிருக்கிறாள். சூர்யாவின் கடந்த கால சோகம் அவர் இதயத்தை இறுக்கியிருப்பதை அவள் அறிவதால், அது இளகும் வரை காத்திருக்க நினைக்கிறாள்.
கிரண் வேலை புரியும் ஹார்வி வில்கின்ஸன் பங்கு வர்த்தக நிறுவனத்தில் கம்ப்யூட்டர்களை வைத்து நடத்தப் பட்ட பல மோசடிகள் கண்டு பிடிக்கப் பட்டன. நிறுவனத்தின் கம்ப்யூட்டர் பாதுகாப்புப் பிரிவினரால் யார் செய்தனர் என்று கண்டு பிடிக்க இயல வில்லை. மோசடி நடத்தியவரைப் பிடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் நிறுவனத்துக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு, கெட்ட பெயர் பரவி விடும். அதனால் நிறுவன அதிபர் ஹார்வி, கிரணைத் துப்பறிய அழைத்தார். கிரண் நிறுவனத்தின் ஸா·ப்ட்வேர் குழுவில் வேலை புரியும் கண்ணன், சுரேஷ் இருவரிடமும் ப்ரோக்ராம் ஸோர்ஸ் கோட் (source code) கேட்டு அதை ஆராய்ந்து விட்டு, தன்னால் கண்டு பிடிக்க இயலாது, சூர்யாவால் தான் இயலும் என்று கூறினான். ஹார்விக்கு வெளி மனிதரை விசாரிப்பில் நுழைக்க விருப்பமில்லை. மேலும் சூர்யாவின் இளமையும் மிடுக்கான தோற்றமும் அவருடைய தயக்கத்தை இன்னும் அதிகப் படுத்தின! கிரணுக்காக சும்மா சில நிமிடம் பேசிவிட்டு ஒதுக்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
ஆனால் ரிக்கைத் தவிர யாருக்கும் தெரியாத அவருடைய பார்க்கின்ஸன்ஸ் நோயைப் பற்றி சூர்யா சில நொடிகளில் அறையில் பார்த்ததை வைத்தே யூகித்து விடவே ரிக் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்து சூர்யாதான் தன் சிக்கலை அவிழ்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார்! கிரண் நிறுவனத்தின் ஸெக்யூரிட்டி பிரிவினர் கண்டு பிடிக்க முடியாத படி எப்படி ப்ரோக்ராம்கள் மாற்றப் பட்டு மோசடி செய்யப் பட்டது என்று விளக்கினான். மூவரும் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் மைக் ஜான்ஸனுடன் பேசச் சென்றனர். அவரை சந்தித்ததும் சூர்யா உதிர்த்த வார்த்தைகள் மைக்கை உலுக்கியே விட்டன!
******
ரிக் மைக்குக்கு சூர்யாவை அறிமுகம் செய்து வைத்ததும், பிரும்மாண்டமான மைக் சூர்யாவின் கையை வெகு உற்காகமாக நசுங்கும் படி நெருக்கிக் குலுக்கி விடவே சூர்யா வலி நீங்க கையை உருவி விட்டுக் கொண்டே குசலம் விசாரித்தார்.
"வெரி ப்ளீஸ்ட் டு மீட் யூ மைக்! உங்க மனைவி ஜென்னி·பரும் உங்க ரெண்டு பொண்ணுங்களும் எப்படி இருக்காங்க? ஈஸ்ட் கோஸ்ட்லேந்து வந்த போன ஆறு மாசத்துல இந்த ஊருக்கு அட்ஜஸ்ட் ஆயிட்டாங்களா? கன்னெடிகட்ல வீடு வித்தாச்சா? இல்ல இன்னும் முயற்சி பண்ணிக்கிட்டிருக் கீங்களா?"
அந்த ஆரம்ப வார்த்தைகள் மைக்கை பாவம் உலுக்கியே விட்டன!
மைக்கின் முகம் வெளிறியது. எதற்கும் அசராத அவர் ஆடியே போய் விட்டார்! சரியாகப் பேசக் கூட முடியாமல் வாய் திக்கியது. "எ... எ... எப்படி உங்களுக்குத் தெரியும்? என்னையே இப்பதானே சந்திச்சீங்க?" திடீரென அவருக்கு ஒன்று தோன்ற, சுதாரித்துக் கொண்டார். "ஓ, ஐ ஸீ?! முதல்லேயே கிரண் சொல்லியிருக்கணும்" என்றார்.
கிரண் புன்னகையுடன், "நோ ஸச் லக், மைக். எனக்கே இந்த விவரம் எல்லாம் இப்ப சூர்யா சொல்லித்தான் தெரியும்! எனக்கும் ஆச்சர்யமாத்தான் இருக்கு." என்றான்.
மைக் ரிக்கின் பக்கம் திரும்பி கேள்விக் குறியுடன் பார்த்தார். அவரும் தலையாட்டி மறுத்து விடவே, மைக் மீண்டும் அதிர்ந்து திக்கும் படலத்துக்குத் திரும்பினார். "ப்...ப்...பின்னே எப்படி ...?!" அவர் குரல் மெதுவாகக் குறைந்து நின்றே போய் விட்டது!
வியந்து போய் நின்றிருந்த ரிக் மெளனத்தைக் கலைத்தார். "மைக், அதெல்லாம் அவர் யூகிச்சிருக்கணும். சூர்யா முதல்ல என்னை சந்திச்சப்பவும் இப்படித்தான் யாருக்குமே தெரியாம நான் மறைச்சு வச்சிருந்த ஒரு மிக மிக அந்தரங்கமான விஷயத்தைச் சில நொடிகளில யூகிச்சு கண்டு பிடிச்சிட்டார். சூர்யா எனக்கும் ஆச்சர்யம் தாங்கலை. ப்ளீஸ் எப்படி யூகிச்சீங்க, சொல்லிடுங்க" என்றார்.
சூர்யா விளக்கினார். "அது ரொம்ப சுலபம், மைக்! எல்லாமே மின்வலையிலயும் உங்க மேஜை மேலயும் இருக்கு! நான் கிரணோட கார்ல வரச்சே இந்த நிறுவனத்தைப் பத்தி என் PDA மின்வலையில படிச்சேன். அதுல ஆறு மாசத்துக்கு முன்னே உங்களை மன்ஹாட்டன் நிதி நிறுவனம் ஒண்ணுலேருந்து இங்க சீ·ப் ஸெக்யூரிட்டி ஆ·பீஸரா நியமிச்ச தாகவும் நீங்க அதுக்கு முன்னால ந்யூயார்க்கிலேயே நிறைய வருஷமா வேலை பாத்ததாகவும் படிச்சிருந் தேன். இங்க உங்க குடும்ப ·போட்டோல மனைவி, ரெண்டு பெண்கள். உங்க மனைவி பேர் இதோ இந்த லெட்டர் கவர் மேல இருக்கு. அதோ பாருங்க கன்னெடிகட் வீட்டை விக்கறத்துக்கான விளம்பரத்தோட காபி. மத்தது ரெண்டும் ரெண்டும் அஞ்சு, அவ்வளவுதான்!"
மைக் அறையே அதிரும் படி அட்டகாசமாகச் சிரித்தார்! "வெல் டன் சூர்யா, வெல் டன்! வெரி வெரி இம்ப்ரஸ்ஸிவ்! நீங்க நிச்சயமா எங்க திருடனைக் கண்டு பிடிச்சிடுவீங்கன்னு நான் இப்ப நம்பறேன்!" என்றார்.
சூர்யா, "ரொம்ப நன்றி மைக். எனக்கு இந்த ஸெக்யூரிட்டி ஸிஸ்டம் பத்தி கொஞ்சம் தெரியணுமே? சாதாரணமா என்ன செய்யறீங்க, இந்த மோசடியை ஆராய என்ன செஞ்சீங்க?"
மைக் தன் கம்ப்யூட்டர் பாதுகாப்பு உலகை அவர்களுக்கு விவரிக்க ஆரம்பித்தார்.
"பெரும்பாலான நிறுவனங்களில, ஒரு Firewall போட்டுட்டா மின்வலை பாதுகாப்பு முடிஞ்சதுன்னு நினைச்சிட்டிருக்காங்க. ஆனா அது அங்கதான் ஆரம்பிக்குது! அந்த எல்லையைத் தாண்டி கம்ப்யூட்டர்கள் பரிமாறிக்கற அப்ளிகேஷன் ட்ரான்ஸேக்ஷன்களில நிறைய அபாயங்கள் இருக்கு. பாக்கப் போனா இப்ப நாம தேடிக்கிட்டிருக்கிற மோசடியே சாட்சி. அது வெளியிலிருந்து கூட வரலை. உள்ளேருந்தே செஞ்சிருக்காங்க! அதுனாலதான் இந்த பெரிய கன்ட்ரோல் ரூம், இவ்வளவு பேர் கம்யூட்டர் திரையைப் பாத்து கிட்டிருக்காங்க, இவ்வளவு அமர்க்களம்!"
கிரண் ரொம்ப ஆவலுடன், "இதெல்லாம் பார்க்க ரொம்ப வியப்பா இருக்கு. என்ன மாதிரி அபாயங்களை, எப்படி சமாளிக்கறீங்க சொல்லுங்க!" என்றான்.
மைக் உற்சாகத்துடன், "நிறைய இருக்கே, எங்கேருந்து ஆரம்பிக்கறதுன்னு பாக்கறேன்" என்றவுடன், கிரண் சூர்யாவிடம் தமிழில் கிசிகிசுத்தான். "சூர்யா, இதைக் கேட்டா, எங்க அப்பா இப்ப சமீபத்துல போட்ட திருவிளையாடல் படம் ஞாபகம் வருது. அதுல பார்வதி, அந்த பாட்டி கிட்ட 'அன்னையே, இறைவனை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப் படுத்திப் பாடுன்னு' சொல்வாங்களே அப்படி இவர் கிட்ட கேட்கலாம்னு தோணுது!" என்றான்.
மைக் பேசுவதை நிறுத்தி விட்டு அவர்கள் இருவரையும் தீர்க்கமாகப் பார்க்கவே, சூர்யா கிரணை உஷ் என்று காட்டி அடக்கி விட்டு, "வெரி சாரி, மைக். இது சம்பந்தமில்லாத விஷயம். மேல சொல்லுங்க!" என்றார்.
மைக் தன் வேலையைப் பற்றி பேசுவதால், மிக்க உற்சாகத்துடன் விவரிக்க ஆரம்பித்தார்.
"ஒரு காலத்துல கம்ப்யூட்டர் பாதுகாப்பு ரொம்ப சுலபமா இருந்திச்சு. கம்ப்யூட்டர் நெட்வொர்க் குன்னா அது கம்பனிக்குள்ள மட்டுந்தான். வெளியிலேருந்து வரணும்னா கூட டயல்-அப் பண்ணி மெயின்·ப்ரேம் டெர்மினல் இல்லைன்னா தெரிஞ்ச க்ளையன்ட் ப்ரோக்ராம் மூலமாத்தான் வர முடியும். ஆனா இப்போ? இன்டெர்நெட் வந்திடுச்சே? யார் வேணா, உலகத்துல எந்த மூலை முடுக்குலேந்து வேணா கம்பனி நெட்வொர்க்குக்கு தொடர்பு வச்சு ட்ரேன்ஸேக்ட் பண்ணலாம். அது ரொம்ப புது மாதிரி அபாயங்களை ஏற்படுத்திடுச்சு."
சூர்யா வினாவினார். "எனக்கு பழைய மாதிரி அபாயங்களே என்னன்னு தெரியாது! என்ன மாதிரி அபாயங்கள்? பழசு, புதுசு ரெண்டு பத்தியும் சொல்லுங்க!"
மைக் தொடர்ந்தார். "அந்த மாதிரி வெளி மின்வலையிலேருந்து வற்றதுக்கு முன்னாடி, மொத்தமா சொல்லப் போனா இப்ப குடாய்ஞ்சுகிட்டிருக்கோமே, உள்மோசடி - அந்த மாதிரி. இல்லைன்னா, அனுமதியில்லாம பாக்கக் கூடாத விவரத்தைப் பாக்கறது. அது ரெண்டுதான் இருந்தது. மின்வலை வந்தப்புறம், இன்னும் என்னென்னவோ மாதிரி அபாயங்கள் ஆரம்பிச்சுது!"
கிரண் புகுந்தான். "எனக்கு அதான் வேணும். இந்த மோசடி விஷயம் ரொம்ப மோசம், ஆனா சுத்த போரடிக்குது! மின்வலை விஷயம் சுவாரசியமா இருக்கும் போலிருக்கு ..."என்று ஆரம்பித்தவன், ரிக், சூர்யா இருவரும் முறைக்கவே கப்பென்று வாயை மூடிக் கொண்டு, "... உம், ஓகே, சொல்லுங்க!" என்றான்!
மைக், "கிரண் சொல்றதும் சரிதான். மின்வலை தாக்குதல்கள் ரொம்ப சுவாரஸ்யமாவும், இன்னும் அபாயகரமாவும் இருக்கு. உதாரணம் சொல்றேன். உள்ளேருந்து தாக்கறவங்க விஷயத்தை பாக்கத்தான் முயற்சிக்கறாங்க. வெளியிலேருந்து தாக்கறவங்க பாக்கறது மட்டுமில்லாமா, அழிக்கறத்துக்கே போயிடறாங்க. முக்கியமா ரெண்டு விதமான தாக்குதல் இருக்கு. ஒண்ணு 'டினையல் ஆ·ப் ஸர்வீஸ்', இன்னொண்ணு 'இன்ட்ரூஷன்'.
"முதல் ரகம் நம்ம ஸர்வீஸை நம்ம நிஜமான வாடிக்கையாளர்கள் பயன் படுத்த முடியாத படி மிக அதிகமான அளவு போலியான மின்வலை ட்ரா·பிக் அனுப்பி ஸர்வீஸையே கவிழ்க்கறது. ஒண்ணு, பளு தாங்காம நம்ம ஸர்வர் கருவிகள் விழுந்துடும். அப்படி விழலைன்னாலும், அந்த போலி ட்ரேன்ஸேக்ஷன்களே நிறைய வரதுனால, ஸர்வர்கள் நிரம்பிப் போய், உண்மையான வேலை எதுவும் நடத்த பயனில்லாம போயிடும்!"
சூர்யா, "ஆனா உங்க கிட்ட நிறைய சர்வர்கள் இருக்குமே? எப்படி அந்த மாதிரி நிரப்ப முடியும்? ஒரு தாக்குதல் அவ்வளவு வேலை குடுக்குமா?" என்றார்.
மைக் சோகமாக முறுவலித்தார்! "நல்ல கேள்வி! அதெல்லாம் இப்ப ரொம்ப சுலபமாயிடுச்சு. தாக்கற வங்க ஒரு கம்ப்யூட்டர்லேந்து தாக்கறது கிடையாது! நூறு, ஏன், ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர் களிலிருந்து தாக்க முடியும். சில கம்பனிங்க தாக்குதல் வரப்போ இவ்வளவுதான் வர முடியும்னு தடை போட்டு சமாளிக்கப் பாப்பாங்க. அது பயனில்லை. ஏன்னா, உள்ளே விடற அளவுக்கு வர்றதெல்லாம் போலியா இருக்கலாமே?! அதுனால, அதிலிருந்து தப்பிச்சு, நம்ம பிஸினஸ் தடையில்லாம தொடரணும்னா ஒரே வழிதான். தாக்குதல் நடக்கறப்போ யாரு உண்மையா பயன் படுத்தறாங்க, எது போலின்னு பிரிச்சு உண்மையான ட்ரேன்ஸேக்ஷன்களை மட்டும் உள்ளே விடணும். அது அவ்வளவு சுலபமில்லை. ஏன்னா வரும் போது எல்லாமே ஒரே மாதிரி தான் தெரியும்."
கிரண் இடையில் குதித்து, "ஹை! இது என்டர் த ட்ராகன் படத்துல கடைசி சண்டைல ப்ரூஸ் லீ கண்ணாடிகளில நிறைய ஹானைப் பாத்துட்டு எது உண்மையான ஹானுன்னு கண்டு பிடிக்கறா மாதிரி இருக்கே?!" என்றான்.
மைக் அட்டகாசமாக சிரித்தார். "கிட்டத் தட்ட அப்படித்தான். ஆனா நேர் எதிர்மாதிரின்னு கூட சொல்லலாம். அந்தப் படத்துல ப்ரூஸ் லீ கண்ணாடியை உடைச்சு எது பிம்பம், எது உண்மையான உருவம்னு கண்டு பிடிக்கறார் இல்லையா?! அதுல உடைஞ்சு தெரியறது போலி, பிம்பம்னு லீ கண்டு பிடிச்சார். நாங்க எது உண்மைன்னு கண்டு பிடிச்சு, மீதியை கண்டுக்காம விட்டிடுறோம். தாக்குதல் வரப்போ நாங்க ட்ரேன்ஸேக்ஷன்களுக்கு ஒரு கேள்வி அனுப்புவோம். அதை போலி தாக்குதல் ப்ரோக்ராம்கள் எதிர் பார்க்கறதில்லை, பதில் அனுப்பறதும் ரொம்ப கஷ்டம். அதுனால சரியான பதிலோட வர ட்ரேன்ஸேக்ஷன் தான் உண்மையான ட்ரேன்ஸேக்ஷன். அதுனால, நாங்க எது உண்மையான ப்ரூஸ் லீன்னு கண்டு பிடிக்கறோம்னு சொல்லிக்கலாம்!"
சூர்யா, "இது ரொம்பவே சுவாரஸ்யமாத்தான் இருக்கு. அப்புறம் என்ன மாதிரி புது அபாயங்களை சமாளிக்கறீங்க?" என்றார்.
மைக் தொடர்ந்தார். "வெளி மின்வலையில எங்க வாடிக்கையாளர்களுடைய அந்தரங்கமான விஷயங்கள் போறதுனால அந்த விஷயங்களை மத்தவங்க காபி பண்ணி தகாத முறையில பயன் படுத்த முடியாம செய்யணுமே? அதுனால மொத்த டேட்டாவுக்கும் ரொம்ப பலமான என்க்ரிப்ஷன் பயன் படுத்தறோம். ஆனா ரொம்ப கவலை குடுக்கற விஷயங்கள்னா நான் சொன்ன இன்ட்ரூஷன் தாக்குதல் அதான். அதுவும் ஹேக்கிங், அப்புறம் வைரஸ்னு ரெண்டு விதமா இருக்கு. அது ரெண்டையும் சமாளிக்கறதுதான் பிரம்மப் பிரயத்தனமா இருக்கு!"
கிரண், "ஆமாம், இருக்காதா பின்னே?! வைரஸ் வந்தா ஹேக்கிங் இருமல் வரத்தானே செய்யும்?! எனக்கு ஒவ்வொரு கோல்ட் ஸீஸன்லயும் வந்துடுதுப்பா. அந்த சனியனைத் துரத்துறத்துக் குள்ள படாத பாடு படறேன்!" என்றான். மைக்கின் முகம் போன போக்கைப் பார்த்து விட்டு, "சாரி, ஒரு கடி ஜோக் அடிக்க சான்ஸ் கிடைச்சுட்டா சும்மா விட மாட்டேன். அதான். நீங்க மேல போங்க!" என்றான்.
மைக் விறைப்பாகத் தலையாட்டி விட்டு விளக்கினார். "நான் ஈ-மெயில் வைரஸ் சொல்றேன். ஹேக்கிங்குங்கறது தாக்கறவங்க எங்களுக்குத் தெரியாம உள்ள புகுந்து எங்க கம்ப்யூட்டர்களில விவரங்களைப் பாக்கறது, அழிக்கறது, இல்லைன்னா எதிர்கால தாக்குதல் களுக்காக, தங்களோட ப்ரோக்ராம்களைப் போட்டு வைக்கறது. வைரஸ் அல்லது வோர்ம்ங்கறது ஈ-மெயில் அல்லது வெப் மூலமா தானே பரவற தாக்குதல்."
சூர்யா, "புரியுது. எனக்கும் ஈ-மெயில்ல வைரஸ் வந்திருக்கு. அதை எப்படி தடுக்கறீங்க?!" என்றார்.
மைக் மிக்க சோகத்துடன் தலையாட்டினார். "தடுத்துடறோம்னு சொல்லிக்க ரொம்ப ஆசைதான் சூர்யா. ஆனா உண்மையா சொல்லணும்னா தடுக்க முயற்சிக்கறோம்னுதான் சொல்லணும். இது வந்து சூப்பர் பவர் ஆயுதப் பந்தயம் மாதிரி. நாங்க செய்யற ஒவ்வொரு முயற்சிக்கும், தாக்கறவங்க வேற மாதிரி புதுப் புது விதமான தாக்குதல்களைக் கண்டு பிடிச்சு முறியடிக்கறாங்க."
கிரண் சூர்யாவிடம், "எங்க அப்பா கூட ஒரு தமிழ் வாக்கியம் சொல்வாரு. நான் தட்டில பாய்ஞ்சா நீ கோலத்துல பாயறேன்னு. அந்த மாதிரி போல இருக்கு?!" என்று மெல்ல சொல்ல சூர்யா மீண்டும் அவனை அடக்கி விட்டு மைக்கை மேலே பேசுமாறு தூண்டினார்.
மைக், "அதுனால, இது வரைக்கும் தெரிஞ்ச ஈ-மெயில் வைரஸ்கள், அப்புறம் ஹேக்கிங் தாக்குதல்கள் எப்படி இருக்கும்னு பாத்து ·பில்டர் பண்றத்துக்கு ஸிஸ்டம் இருக்கு. ஆனா புதுசா ஒரு தாக்குதல் வந்துட்டா ஒண்ணும் செய்ய முடியாது. முதல்ல அது நடந்திருக்குன்னு கண்டு பிடிக்கணும். அது வைரஸ்களுக்கு வழக்கமா சுலபம், ஏன்னா அது ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுடுது. அதை தவிர்க்கறது எப்படின்னும் உடனே சொல்லிடறாங்க. ஆனா தெரியாத மாதிரி புது மாதிரி ஹேக்கிங் நடக்கலாம். அப்படி கண்டு பிடிச்சப்பறம், அது என்ன பாதிப்பை ஏற்படுத் தியிருக்குன்னு ஆராய்ஞ்சு நிவர்த்திக்க வேண்டியிருக்கு."
கிரண், "ஹும்! இந்த ஹேக்கிங் விஷயம்தான் ஜேம்ஸ் பாண்ட் மாதிரி இருக்கு. அதை எப்படி சமாளிக்கறீங்க சொல்லுங்க!" என்றான்.
மைக் முறுவலுடன் கண் சிமிட்டினார்! "ஜேம்ஸ் பாண்ட்! அந்த இமேஜ் எனக்கு பிடிக்குது! சொல்றேன். ஹேக்கிங்கை சமாளிக்க ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு தெரிஞ்ச தாக்குதல்களைத் தவிர்க்கறது. அதுக்கு ·பையர்வால், ப்ராக்ஸி மாதிரி ஸிஸ்டம்கள் இருக்கு. இன்னொண்ணு, வர, போற நெட் வொர்க் பாக்கெட்களை யெல்லாம் பாத்து, ஏதோ வழக்கத்தை விட வித்தியாசமா நடக்குதுன்னு காட்டற ஸிஸ்டம் இருக்கு. அதையும் பயன் படுத்தறோம். அந்த மாதிரி எச்சரிக்கைகள் தான் இதோ விமான ட்ரா·பிக் கன்ட்ரோல் டிஸ்ப்ளே மாதிரி பெரிய திரைகளில் வர்ண வர்ணமா மினுக்கிக் கிட்டிருக்கே அது. ஒவ்வொரு எச்சரிக்கையையும் என்னன்னு நோண்டிப் பாக்கணும். வழக்கமா அது தாக்குதலா இருக்காது, கொஞ்சம் வித்தியாச மான நடவடிக்கையாத்தான் இருக்கும். ஆனா எப்பவாவது நிஜமான தாக்குதல்களையும் காட்டியிருக்கு."
கிரண், "மாயாஜால் ஜிகினா டிஸ்ப்ளே! நாஸா ராக்கெட் மையம் மாதிரி ரொம்ப பிரமாதமாத்தான் இருக்கு! ஆனா சிகப்பு, மஞ்சள், பச்சையா நிறைய மினுக்குதே, எதைன்னு பார்ப்பீங்க?" என்றான்.
மைக் தலையாட்டிக் கொண்டு சிரித்தார். "ஆமா கலர் கலரா ரொம்ப விஷயங்கள் காட்டுது. அத்தனையையும் சேத்துப் பாத்தா தலை கிர்ருன்னு சுத்தும் அவ்வளவுதான்! ஆனா ரொம்ப முக்கியமானது இங்க கீழே ரொம்ப சிம்பிளா வெறும் எழுத்துல இருக்கு பாருங்க அதான். எதாவது பாதுகாப்பு சம்பந்தமான, மேற்கொண்டு ஆராய்ஞ்சு பார்க்க வேண்டிய சம்பவம் ஏற்பட்டா அதுல ஒரு செய்தி வந்துடும். அதை க்ளிக் பண்ணா பார்க்க வேண்டிய விஷயத்தை திரைக்குக் கொண்டு வந்துடும், அது என்னன்னு நோண்டிப் பாத்துடலாம். என்ன, புலி வருது, புலி வருதுன்னு கொஞ்சம் நிறைய பொய் எச்சரிக்கை வருது! ஆனா எப்பவாவது நிஜமாவே புலி வந்துடுது! அதுனாலதான் இவ்வளவு பேர் பாத்துகிட்டே இருக்காங்க. இந்த போலி செய்திகளைக் குறைக்கறத்துக்கு சில புது ஸிஸ்டம் வந்துகிட்டிருக்கு. சிலதை சோதிச்சுக் கிட்டிருக் கேன். உதவுமான்னு பாக்கலாம்."
கிரண் ஆர்வத்துடன், "இந்த திரைல என்னென்ன காட்டுது?" என்று கேட்டான்.
மைக் பெருமையாக திரையின் வெவ்வேறு பாகங்களைச் சுட்டிக் காட்டினார். "இங்க பாருங்க - இந்தப் பக்கம் இன்ட்ரூஷன் எச்சரிக்கைகள். அங்க டினையல் ஆ·ப் சர்வீஸ் கண்டு புடிச்ச அறிக்கைகள். இந்த பக்கம் அனுமதி இல்லாத விஷயத்தை தொடப் பாத்த செய்திகள் ... ஆங் இங்க பாருங்க நாம இப்ப தேடிகிட்டிருக்கற விஷயம் - கோஸ்ட் ட்ரேன்ஸேக்ஷன்கள்! அதுக்காகவே தனிப்பட்ட ·பில்டர் வச்சு பிரிச்சு தனிப் பகுதிலேயே காட்டியிருக்கோம்!"
கிரணுக்கு அந்த பாதுகாப்புத் திரை மிக்க பிரமிப்பையும் மேலும் மேலும் தெரிந்து கொள்ளும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. அவனுக்கு எற்கனவே கம்ப்யூட்டர்கள் மேலேயே மிக்க ஆர்வமுண்டு. ஆனாலும் இதற்கு முன் பாதுகாப்பு உளவுத் துறையில் பரிச்சயம் இல்லாததால் இப்போது மைக் விவரித்தது மிகவும் சுவையாக இருந்தது.
அதனால் கிரண், "உம் ... ரொம்பப் பிரமாதம். அந்த போலி எச்சரிக்கைகளைத் தவிர்க்க எதோ இருக்குன்னு சொன்னீங்களே, அதை பத்தி இன்னும் ..." என்று ஆரம்பித்தான்.
சூர்யா இடை மறித்தார். "ஏய் கிரண்! எர்த் காலிங் கிரண்! எர்த் காலிங் கிரண்! உன்னை விட்டா, இந்த தொழில் நுட்பத்திலேயே மூழ்கிடுவே. கொஞ்சம் மேலே எழுந்து வா! மைக் நீங்க கடைசியா காட்டினீங்களே, இப்ப விசாரிக்கப் படற விஷயம். அதுக்குப் போகலாம். இது வரைக்கும் என்ன கண்டு பிடிச்சிருக்கீங்க?!"
கிரண் சின்ன குழந்தை போல் சிணுங்கினான்! "ஆங் ... போங்க பாஸ், நீங்க சரியான பார்ட்டி பூப்பர்!" பெருமூச்சு விட்டான்! "ஹும்! சரி, நான் அப்புறம் உங்க தொல்லை இல்லாம தனியா மைக்கை புடிச்சு கேட்டுக்கறேன்!"
மைக்கின் முகம் இருண்டு, தொய்ந்துவிட்டிருந்தது! சோகப் பெருமூச்சுடன் தொடர்ந்தார். "ஹும்! கண்டு புடிச்சிட்டதா சொல்றத்துக்கு அவ்வளவு ஒண்ணுமில்லை. அந்த மாதிரி ட்ரேன்ஸேக்ஷன்கள் நடக்கறச்சே, உடனே எங்களுக்குத் தெரியுது அவ்வளவுதான்!" என்றார்.
சூர்யா பரபரப்புடன் வினாவினார். "அதை எப்படி மேல ஆராய்ஞ்சு பாக்கறீங்க?"
கிரண் தனக்குள் முணு முணுத்துக் கொண்டான்! "உக்கும். இவர் மட்டும் மேல கேட்டுத் தெரிஞ்சுக் கலாமாக்கும்?!" ஆனால் மைக்கின் பதிலைக் கேட்க அவனுக்கும் மிக்க ஆர்வமிருந்ததால் அதைக் கவனிக்கலானான்.
மைக், "அது ரொம்ப இன்ட்ரெஸ்டிங்குன்னுதான் சொல்லணும். இந்தப் போலி ட்ரேன்ஸேக்ஷன்களில ப்ரோக்கர் நடக்கறச்சே அந்தப் ப்ரோக்ராம்க ளிலிருந்து ஒரு எச்சரிக்கை வர மாதிரி பண்ணியிருக்கோம்."
கிரண் ஆவலுடன், "எவ்வளவோ ட்ரேன்ஸேக்ஷன் நடக்குதே, அதுல எது போலின்னு எப்படி கண்டு பிடிக்கறீங்க?" என்றான்.
சூர்யா, "ஆமாம், அதுவும் தெரியணும், அப்புறம் இது வரைக்கும் அதை யார் செய்யறாங்கன்னு கண்டு பிடிக்க என்னென்ன முயற்சிகள் செஞ்சு அதுல என்ன தெரிஞ்சதுன்னும் சொல்லணும்" என்றார்.
மைக் அவை இரண்டையும் பற்றி மேலும் விவரிப்பதைக் கேட்கையில் சூர்யாவின் முகத்தில் ஒரு விதமான பரபரப்பு ஒளி பிறந்து பிரகாசிக்க ஆரம்பித்தது! கிரண் மட்டுமே அதைக் கவனித்து அவருக்கு ஏதோ யூகமோ அல்லது கண்டு பிடிக்க உதவக் கூடிய யுக்தியோ தோன்றியிருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான்.
மைக்கின் ஆராய்ச்சியைக் கேட்டு விட்டு சூர்யா கூறிய விஷயம் மைக்கை வியப்பின் உச்சத்துக்கே உயர்த்தியது!
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |