பெண்ணெனும் பூமிதனில்....
மகாத்மா காந்தி:

பெண்கள் கோழைகள் அல்ல...

பெண்கள் விஷயத்தில் மட்டும் பொதுவாக 'பலவீனமான', 'கோழைத்தனமான' என்ற அடைமொழிகள் உபயோகிக்கப்படுகின்றன. இவைகளை நீங்கள் பொய்யாக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எல்லாப் பெண்களுக்குமே இந்த அடைமொழிகள் பொருந்தமாட்டா.

மேற்கு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இன்று எல்லாக் காரியங்களிலுமே பங்கெடுத்துக் கொள்கிறார்கள். அவர்களை அப்படியே பின்பற்ற வேண்டுமென்று நான் சொல்லவில்லை. ஆனால், குறைந்த பட்சம் அவர்கள் ஆண்களுடைய பல யூகிப்புகளைப் பொய்யாக்கியிருக்கிறார்களே? ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நீக்ரோ பெண்கள் கோழைகளே அல்ல. அவர்களுடைய மொழியில் பெண்களுக்கு இந்த அடைமொழியே கிடையாது.

பாரதியார்:

ஸ்திரீகள் தமக்கிஷ்டமான பேரை விவாகம் செய்து கொள்ளலாம். விவாகம் செய்து கொண்ட புருஷனுக்கு ஸ்திரீ அடிமையில்லை. உயிர்த்துணை. வாழ்க்கைக்கு ஊன்றுகோல். ஜீவனிலே ஒரு பகுதி. சிவனும் பார்வதியும் போலே, விஷ்ணுவும் லக்ஷ்மியும் போலே. விஷ்ணுவும் சிவனும் பரஸ்பரம் உதைத்துக் கொண்டதாகக் கதை சொல்லும் பொய்ப் புராணங்களிலே லக்ஷ்மியை அடித்தாரென்றாவது கதைகள் கிடையா. சிவன் ஸ்திரீயை உடம்பிலே பாதியாகத் தரித்துக் கொண்டார். விஷ்ணு மார்பில் மேலே இருத்தினார். பிரம்மா நாக்குக்குள்ளேயே மனைவியைத் தாங்கி நின்றார். ஜகத்திற்கு ஆதாரமாகிய பெரும் கடவுள் ஆண் பெண் என இரண்டு கலைகளுடன் விளங்குகிறது. இரண்டும் பரிபூர்ணமான சமானம். பெண்ணை அணுவளவு உயர்வாகக் கூறுதலும் பொருந்தும்.

எனவே இன்று தமிழ்நாட்டில் மாத்திரமேயல்லாது பூமண்டல முழுவதிலும், பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன்பங்க ளுக்கெல்லாம் அஸ்திவாரம். அநீதிகளுக்கெல்லாம் கோட்டை. கலியுகத்திற்குப் பிறப்பிடம்.

1848 பெண்கள் பிரகடனம்:

"பெண்களுக்கு வாக்குரிமை வழங்காததுடன் அவ்வுரிமையை அவள் செயல்படுத்துவதை ஆண்கள் அனுமதிப்பதில்லை.

அவளுடைய கருத்துகள் இடம் பெறாத சட்டங்களுக்கு ஆண்கள் அவளைப் பணிய வைத்துள்ளனர்.

அவளுக்குத் திருமணம் ஆகி விட்டால் சட்டத்தின் கண்களில் அவளுக்கென்று உரிமைகள் ஏதும் கிடையாது. குடிமையுரிமைகளைப் பொறுத்த வரையில், அவள் வெறும் சடலம் தான், உயிருள்ள பிறவியல்ல. அவளிடமிருந்து , அவள் ஈட்டும் தொகை உட்பட அனைத்துச் சொத்துகளையும் அனுபவிக்கும் உரிமையை ஆண் பறித்துக் கொண்டு விட்டான்.

ஆண் அவளை நல்லது என்ன , கெட்டது என்ன என்று தெரியாத அளவுக்கு அறவியல் நோக்கைப் பெற்றிராத ஒருத்தியாக ஆக்கி விட்டான். அவள் தனது கணவனின் முன்னிலையில் எந்தக் குற்றம் வேண்டுமானாலும் புரியலாம்.

திருமணம் என்ற பிணைப்பைப் பொறுத்த வரை கணவனுக்கு அடிபணிந்து போவதாக அவள் சத்தியம் செய்து கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளாள். அவளுடைய விடுதலையை அவளிடமிருந்து பறித்துக் கொள்ளவும், அவளுக்குத் தண்டனை வழங்கவும் சட்டம் அவனுக்கு இடமளித்துள்ளது.

விவாகரத்து என்று வரும் போது அதற்கான காரணங்கள், கணவனும் மனைவியும் பிரிய நேர்ந்தால், குழந்தைகள் யாருடைய பாதுகாப்புக்கு ஒப்படைக்கப்படவேண்டும் என்பன போன்ற முடிவுகள் பெண்களின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு வகுக்கப்படுவதில்லை...

(1848 - ல் செனக்கா ·பால்ஸ் என்னும் இடத்தில் நடந்த' பெண்கள் மாநாட்டில் படிக்கப்பட்ட அறிக்கையிலிருந்து.)

பெண்களைப் பற்றி நேரு:

திருமணம் என்பது பெண்ணுக்குப் பொருளாதாரப் புகலிடம் என்பது மாறினால்தான் பெண் விடுதலை சாத்தியம். கணவனையே சார்ந்து வாழுகிறவர்கள் ஒரு போதும் சுதந்திரமானவர்கள் அல்லர். முழுமையான சுதந்திரம் என்ற அடிப்படையில் உருவாகும் ஆண் - பெண் உறவுதான் தோழமை உடையதாக இருக்கமுடியும்.

சமூகத்துறையில் பெண்களின் பணி மிகச் சிக்கலானது. தங்களுக்குத் தடையாக உள்ள வலுவான சமூகத் தடைகளிலிருந்து தங்களை விடுவித்தும் அவர்கள் பழைய சம்பிரதாயங்கள், ஆண்களின் ஆதிக்க உணர்வு ஆகியவற்றையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மாதர் இயக்கம் மேலெழுந்த வாரியான பிரச்சனைகளிலும் மேல்தட்டு பெண்கள் நலத்திலும் மட்டுமே அக்கறை காட்டியது. அவர்களின் பெண் விடுதலைக்கான போராட்டம் மற்ற பெண்களிடை யேயும் பரவும்போது தான் அவ்வியக்கம் வலுப்பெறும்.

விபச்சாரம் பற்றி பெரியார்

விபச்சாரம் என்னும் வார்த்தையானது அநேகமாய் ஆண் பெண் சேர்க்கை சம்பந்தப்பட்டதற்கே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் முக்கியமாக அதாவது ஒரு பெண் தனக்குக் கணவன் என்றோ, தன்னை வைத்துக் கொண்டிருக்கின்றவன் என்றோ வேசித் தொழிலிருப்பவளானாலும் யாராவது ஒரு புருஷனிடம் தற்கால சாந்தியாய்த் தன்னைக் குத்தகையாய் அனுபவிப்பவன் என்றோ சொல்லப்படும் படியான அந்தக் குறிப்பிட்ட ஆண்மகனைத் தவிர மற்றொருவரிடமோ, பலபேர்களிடமோ சேர்க்கை வைத்துக் கொண்டு இருப்பதற்கே, கணவனாலும், வைப்புக்காரனாலும், குத்தகைக்காரனாலும் மற்றும் பொது ஜனங்களாலும் சொல்லப்படுகின்ற, அதாவது ஒரு பெரிய குற்றம் சாட்டுவதற்கும் பழி சுமத்துவதற்கும் உபயோகிக்கும் சொல்லாகும். ஆனால் அதே பெண்ணை அந்தக் கணவனோ, வைப்புக்காரனோ மற்றொருவருக்குத் தன் சம்மதத்தின் பேரில் கூட்டிவிடுவனானால் அதை அவர்கள் விபச்சாரம் என்று சொல்லுவதில்லை. இந்த சங்கதி பொது ஜனங்களுக்குத் தெரிந்தாலும் கணவனைத் தான் அவர்களும் வசை கூறி குற்றம் சொல்லுவதே தவிர பெண்ணை விசேஷமாக முன் சொல்லப்பட்ட விபச்சாரியென்கின்ற முறையில் அநேகமாக குற்றம் சொல்லுவதில்லை. அன்றியும், இம்மாதிரி குற்றம் சாட்டுதலும், வசவுக்கும், பழிப்புக்கும் உபயோகப்படுத்துதலும் ஆண்களுக்குக் கிடையாது. அன்றியும் ஆண்களை விபச்சாரன் என்று வைகின்ற வழக்கம் கிடையாது. அப்படிச் சொல்லப்படுவதற்காக எந்த ஆணும் கோபித்துக் கொள்ளுவதும் கிடையாது.

ஆகவே விபச்சாரம் என்னும் வார்த்தையின் அநுபவ தத்துவத்தைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் 'விபச்சாரம்' என்பது பெண்கள் அடிமைகள் என்பதைக் காட்டும் ஒரு குறிப்பு வார்த்தை என்று தான் சொல்லவேண்டுமே ஒழிய வேறல்ல. ஏனெனில், விபச்சார தோஷம் என்பதும் விபச்சாரம் செய்வதால் ஏற்படும் ஒழுக்கக்குறைவு என்பதும் இப்பொழுது வழக்கத்தில் பெண்களுக்கே தான் உண்டேயொழிய ஆண்களுக்கு அந்த மாதிரி கிடையேவே கிடையாது.

© TamilOnline.com