மறுபக்கம்
மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் வீட்டுக்கு வெளியே காலெடுத்து வைக்கிறேன். கூண்டிலிருந்து விடுபட்ட பறவையைப் போல ஒரு சுதந்திர உணர்வு. ஒரு சின்னவிபத்து - அலுவலகத்திலிருந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பும்போது சாலையில் கொட்டியிருந்த மணல் சறுக்கி நானும் ஸ்கூட்டரும் கீழே விழ காலில் எலும்பு முறிவு. டாக்டர் மூன்று மாதத்திற்கு அசையக்கூடாது என்று கட்டளையிட்டு விட்டார். இப்போதுதான் எக்ஸ்ரே எடுத்து விட்டுக் கொஞ்சம் நடக்க அனுமதி கொடுத்து இருக்கிறார்.

இந்த மூன்று மாதங்களில்தான் எத்தனை விசாரணைகள்? எத்தனை பரிவு? காய்கறி விற்பவள், வேலைக்காரி, பால்காரன், அலுவலகத்தில் உடன் பணி செய்பவர்கள், தெருவாசிகள், உறவினர்கள் என்று அத்தனை பேரும் என் மேல் பாசத்தைப் பொழிய, பரிவு காட்ட நெகிழ்ந்து போனேன்.

இன்றுதான் காலாற தெருக்கோடியிலுள்ள பிள்ளையார் கோவில் வரை சென்று வரலாம் என்று கிளம்பியிருக்கிறேன். கோவில் பிரகாரத்தைச் சுற்றி வந்து, குருக்களின் விசாரணைக்குப் பதில் சொல்லி விபூதி பிரசாதம் பெற்றுக் கொண்டு திரும்பினேன்.

வழியில் சுந்தரம் எதிர்பட்டார். இவர் எங்கள் வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டில் இருப்பவர் - விபத்து ஏற்பட்டு நான் வீட்டில் இருந்தபோது என்னை வந்து பார்க்காத ஒரே மனிதர்.

‘சே! என்ன மனிதர் இவர்! பக்கத்து வீட்டில் ஒருவன் படுத்துக்கிடக்கும்போது போய் பார்க்க வேண்டும் என்று கூடத் தோன்றவில்லையே’ என்று என் மனம் வெறுப்படைந்தது. பார்க்காதது போல போக நினைத்தேன். ஆனால் அந்த மனிதர் விடுவதாக இல்லை.

“என்ன, பத்மநாபன் சார், செளக்கியமா? கால் இப்போ சரியாயிடுத்தா?”

ஏதோ ரொம்ப அக்கறை உள்ளவர் மாதிரி விசாரித்தார்.

நானும் முகத்தில் சிரிப்பை வலிய வரவழைத்துக் கொண்டு, “ஹி ஹி .. இப்போ பரவாயில்லை” என்றேன்.

“உடம்பை சரியா பாத்துக்கோங்கோ, ரொம்ப அலையாதேள்! ஆபீசுக்குக் கொஞ்ச நாள் ஆட்டோலேயே போங்கோ! ஹ¤ம் , என்னாலதான் உங்களை வந்து பாக்க முடியலே” என்று கூறி பெருமூச்சு விட்டார்.

‘ஆமாம், பெரிய வெட்டி முறிக்கற வேலை’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே “ரொம்ப தாங்க்ஸ்” என்றேன்.

வீட்டுக்குள் வந்ததும் என் மனைவியிடம் முதலில் சுந்தரத்தைப் பார்த்ததைச் சொன்னேன்.

“சுந்தரத்தைப் பார்த்தீங்களா? அப்போ அவர்கிட்ட விசாரிச்சீங்களா?” என்று கேட்டாள்.

“அவர் கிட்ட நான் விசாரிக்க என்ன இருக்கு? அந்த மனுஷனுக்குத்தான், ஏதுடா, ஒரு ஆள் பக்கத்து வீட்டிலே உடம்பு சரியில்லாம படுத்திருக் கானே, போய் பார்ப்போம்னுகூடத் தோணலை.” பொரிந்து தள்ளினேன்.

“என்னங்க, உங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆன நேரத்திலேதானே அவருக்கு, ஹார்ட் அட்டாக் , பை பாஸ் ஆபரேஷன் செய்யப் போறாங்கன்னு சொன்னேன். அவரை விசாரிக்காம வந்திருக் கீங்களே?”

ஒரு நிமிடம் திகைத்துப் போனேன்.

என்னைப் பற்றியும் என் கஷ்டங்களைப் பற்றியுமே நினைத்த எனக்கு அவரைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று கூடத் தோன்றவில்லையே! ஆனால், அந்த சுந்தரம் கொஞ்சம்கூடப் பொருட் படுத்தாமல் என்னை விசாரித்தாரே! யாரோ மண்டையில் ஓங்கி அடித்தாற் போல் இருந்தது.

பத்மநாபன்

© TamilOnline.com