சென்னை எண்ணூர் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 100 பெண்களிடம் சிறுநீரகம் திருடப்பட்டுள்ள விவகாரத்தை முதல் முறையாக காவல்துறையே ஒப்புக்கொண்டுள்ளது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டதிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் சுனாமி பேரிடர் ஏற்பட்ட நாளிலிருந்தே தன்னார்வ அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் கூறி வந்த எச்சரிக்கைகள் உண்மையாகியுள்ளது. விழிப்புணர்வுள்ள சென்னையிலேயே 100 பெண்கள் சிறுநீரகங்களை இழந்துள்ளார்கள் என்றால், நாகை, கடலூர், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்பதைக் கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. சுனாமி தாக்கப்பட்ட பகுதிகளில் சிறுநீரக வியாபாரிகளும், குழந்தைக் கடத்தல்காரர்களும், விபச்சாரத்துக்கு ஆள் பிடிப்பவர்களும் வலைய வருவதை பல்வேறு அமைப்புகள் அப்போதே சுட்டிக்காட்டின. தமிழகக் கடலோர மாவட்டங்களில் சுனாமி தாக்கியபோது இலட்சக்கணக்கான மீனவர் சமுதாயமக்கள் நிலை குலைந்தனர். ஒரு பக்கம் ஒரே குடும்பத்தில் பலரை இழந்த சோகம். மறுபக்கத்தில் தங்கள் வாழ்வாதாரங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலை. தங்கள் பிள்ளை குட்டிகளை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்று இடிந்து போயிருந்தபோது, இத்தகைய இடைத்தரகர்கள் இரண்டாவது சுனாமியாக அவர்களை முற்றுகையிட்டனர். சுனாமி தாக்குதல் நடைபெற்ற ஓரிரு நாட்களிலேயே துரிதமாக நிவாரண உதவிகளும், இழப்பீடுகளும் வழங்கப்பட்டு விட்டதால் இது போன்ற கடத்தல்கள் கட்டுப்படுத்தப்பட்டது உண்மைதான் என்றாலும், மீனவர்களுக்கு, இழந்த வாழ்வாதாரங்களை மீட்டுத்தருவதில் ஏற்பட்ட காலதாமதம் அவர்களுக்கு மீண்டும் வறுமையைக் கொண்டுவந்தது. இதனால் சிறுநீரக விற்பனை முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உருவாகியிருக்கலாம். சிறுநீரக விறபனை விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. ஆளும் கட்சியோ, எதிர்க் கட்சியோ, சிக்கப்போவது யாரு?
தொகுப்பு: அப்பணசாமி |