ரேடியோ
நான் படுமோசமான நிலையில் இருந்தேன். என் விரல்முட்டி எரிந்தது. மைஸ் மகேஷ், என்னைப் புழுவைப்போலப் பார்த்தான். இன்னும் நான் கோலியை முட்டியால் உந்தித் தள்ள வேண்டிய தூரம் கொஞ்சம்கூடக் குறையாமல் இருந்தது. தள்ளிய கோலி என் எரிச்சலைப் பொருட்படுத்தாமல் குழியின் திசைக்குக் கோணலாய் எங்கோ போய்க் கொண்டிருந்தது. அப்போதுதான் அப்பா என்னைக் கூப்பிட்டார், வீட்டு வாசலில் நின்றபடி.

அவர் பார்க்கும் தூரத்திலிருந்து கோலி கண்ணில் படுவது கஷ்டம். கோலி விளையாடுவதைப் பார்த்துவிட்டால் தீர்ந்தேன் நான். அவசரமாய் கை மண்ணைத் தட்டிவிட்டு எழுந்தேன். மைஸ் என்னைப் பார்த்துத் "தள்ளுடா" என்றான். "போடா. எங்க அப்பா.." என்று அவன் பதிலுக்குக் காத்திராமல் வீட்டை நோக்கி ஓடினேன். அவன் என் பின்னால் ஏதோ கத்தினான்.

"மண்ணுல என்னடா விளையாட்டு?" என்றார் அப்பா.

''இல்லைப்பா" என்றேன்.

சமையலறையில் எதையோ குடைந்து கொண்டிருந்த அம்மாவிடம் ஓடிப்போய், ''அம்மா!, உன்னை அப்பா கூப்பிட்டாரு''. என்றேன்.

"ஆமா வேற வேலை என்ன" என்று என்னை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் தன் வேலையில் இறங்கிவிட்டாள். அம்மா முதுகு தெரியும் போது எதையாவது அள்ளி வாயில் போட்டுக் கொள்ளலாமென்று, அடுப்பில் ஏதாவது பாத்திரம் திறந்திருக்கிறதா என்று நோட்டமிட்டேன்..

அப்பா சமையலறை வாசலில் நின்றார்.

"சுப்பையா வீட்டுல போய் அவர்கிட்ட இதைக் கொடு" என்று பிரவுன் நிறத்தில் ஒரு கவரை நீட்டினார்.

சந்தோஷத்துடன் தலையாட்டினேன். அவர் வீட்டுக்குப் போகும் வழியில் நிறைய வீடுகள் பாதி கட்டிய நிலையில் இருக்கும். ஒவ்வொரு வீட்டின் முன்னும் மணல் குவிக்கப்பட்டிருக்கும். ஞாயிறன்று சித்தாட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நிம்மதியாக ஸன்ஷேடுகளிலிருந்து மணல் மேல் குதிக்கலாம். மைஸ் வந்தால் இன்னும் நன்றாக விளையாடலாம், என்று எனக்குள்ளேயே எண்ணிக் கொண்டேன்.

ஏதோ முனகிவிட்டு, "மண்ணை அலம்பிண்டு வேற சட்டை போட்டுண்டு போடா" என்றாள் அம்மா.

நான் கிளம்பும் போது அப்பா கவரைக் கொடுத்தார். "அத எடுத்துக் கொடேன் " என்றார் அம்மாவிடம். அம்மா விசுக்கென்று வேகத்துடன் சமையலறையி லிருந்து ரேடியோவை எடுத்துவந்து என் கையில் கொடுத்தாள்.

"பத்திரமா இரண்டயும் சுப்பையா கிட்ட கொடு. வழியில பராக்குப் பாத்துண்டு நிக்காம வந்து சேரு" என்றார். ட்ரான்ஸிஸ்டர் ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

"ரிப்பேரா? காலையில் கூட அம்மா கேட்டுக் கொண்டிருந்தாளே."

"சொல்றத செய்டா" என்றார்.

கவரை சட்டைப் பையில் சொருகிக்கொண்டு ரேடியோவின் கைப்பிடியைப் பிடித்துத் தூக்கினேன். மர்பி ரேடியோ அது. கைக்கடக்கமான எலிப்பொறி அளவில்.

"ஒரு நிமிஷம் நில்லு" என்று அப்பா என் கையிலிருந்து ரேடியோவை வாங்கினார். அதைக் கவிழ்த்துப் பின்னாடியிருந்த பாட்டரி கவரைக் கழற்றி உள்ளேயிருந்த நாலு பாட்டரியையும் உருவிக் கொண்டார். பாட்டரிகதவைப் பொருத்தி ரேடியோ வை மீண்டும் என் கையில் கொடுத்தார். இப்போது ரேடியோ அத்தனை கனக்கவில்லை. "ஜாக்கிரத" என்றார். அம்மா சமையலறை வாசலில் நின்று என்னைச் சிரிக்காமல் பார்த்தாள்.

வெளியே வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. கிருஸ்ணாயில் கிருஸ்ணாயில் என்று கத்தலுடன் பாரல் வண்டி தெருவில் போனது. அதன் வாலுடன் ஒட்டிக்கொண்டே கொஞ்ச தூரம் ஓடினேன். கையில் ரேடியோ சிறிது இடக்காகவே இருந்தது. வண்டி பஜார் போகும் வழியில் அதிலிருந்து விலகினேன். அந்த சமயம் எதிரே சைக்கிளில் வந்த ஒருவன் என் மேலே மோத இருந்தான். நல்லவேளையாகக் கடைசி நிமிஷத்தில் ஹாண்டில்பாரை ஒடித்துத் திருப்பினான். கொஞ்சம் விட்டிருந்தால் ரேடியோவும் நானும் கீழே விழுந்து சிதறியிருப்போம்.

பெரியார் நகர் போகும் வழியில் பிள்ளையார் கோவில் இருந்தது. பிள்ளையார் சன்னதியில் பச்சை நிறத்தில் திரைபோடப்பட்டிருந்தது. நாலைந்து மாமிகள் நவக்கிரகத்தைச் சுற்றிக் கொண்டிருந் தார்கள். திரைக்குப் பின்னால் வாசன் குருக்களின் அசையும் பாதங்கள் தெரிந்தன. இப்போது மட்டும் இந்த வேலை இல்லாமலிருந்தால் உள்ளே நுழைந்துவிடலாம். வாசனுக்கு நன்றாக ஐஸ் போட்டு வைத்திருக்கிறேன். பிள்ளையாரைக் குளிப்பாட்டும் வேலை ஒரு தடவை எனக்குத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவருக்கு அதை அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டி இருக்கிறது. பல பேருக்கு என் விஷயம் ஞாபகத்தில் இருப்பதில்லை. தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னாலிருந்து அப்பாவிடம் ஆயிரம் தடவை ஞாபகப்படுத்தினால் கூட ஒவ்வொரு முறையும் எனக்கு வேண்டிய பட்டாசுகளை வாங்காமல் விட்டுவிடுகிறார். அவரைவிட அம்மா எவ்வளவோ தேவலை.

தாஸ் டிம்பர் கடையிலிருந்து இழுப்புளி ஓசை வந்து கொண்டே இருந்தது. எதிர்ப்பக்கத்தில் இருந்த புளுஸ்டார் சலூன் கண்ணில் பட்டது. முதல் தடவை அப்பா கூட்டி வந்தார். அதன் பிறகிலிருந்து நானே வர ஆரம்பித்துவிட்டேன். முதல் முறை அப்பாவின் பேச்சை மீறமுடியாது மிகவும் நெருக்கமாக வெட்டிக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. அடுத்த தடவையிலிருந்து லேசாக வெட்டுங்க என்று சொல்லக் கற்றுக் கொண்டுவிட்டேன். சரி தம்பி என்று சிரிக்கும் சலூன்காரர் ஒரு நாள் பக்கத்துச்சேரில் வயதானவருக்கு வெட்டிக் கொண்டிருந்த பையனை பளீரென்று அறைந்தார். எனக்கு ஒன்றும் புரிய வில்லை. அந்தப் பையனுக்கு என் வயது தான் இருக்கும். என்னால் முடிவெட்டி விட முடியுமா என்று யோசித்துப்பார்த்தால் நிறைய தப்புசெய்வேன் என்று தோன்றியது. நிறைய நாள் தரை முடிக்கற்றைகளைக் கூட்டிப் பெருக்கித் தள்ளும் வேலைதான் அவனுக்கு. அவன் கத்தரி எடுப்பது இது தான் முதல் முறையோ என்று நினைத்தேன். அவன் கண்ணில் நீர் தளும்பிவிட்டது. வயதானவர் "பரவாயில்ல மணி, விடுங்க சின்னப்பய தானே" என்று காதில் கையை இறுக்கமாக வைத்துக்கொண்டு சொன்னார். எனக்கு அன்றிலிருந்து அந்தக் கடைக்கு வரவே பிடிக்கவில்லை. ஆனால் பஜார் அருகே போனால் தான் வேறு கடை. அவ்வளவு தூரம் என்னைத் தனியாக அனுப்ப மாட்டாள் அம்மா. தவிர இந்த சலூன்காரார் என் முன் தலையை அவருக்கு வாகாக வைத்துக்கொள்ள என் கன்னத்தைப்பிடித்து மேல் நிமிர்த்துவார். அப்போது அவர் விரலில் வரும் வாசனை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

இந்தக் கடை வாசலில் தான் ஒரு நாள் டிம்பர் கடை தாஸ் அரிவாளோடு நின்றான். அவனுக்கு எதிரே பிள்ளையார் கோவில் ஆஃபிசர் வெங்கிடாச்சலம் மாமா வேட்டியை மடித்துக்கட்டிட்டு நின்றார். "போடுடா, போடுடா!" என்றார். தாஸ் அவர் தோளில் அரிவாளைப் போட்டுவிடுவான் என்று தான் தோன்றியது. மாமா வேட்டியை மடித்துக்கட்டின தோரணையே தாஸை அடித்துப் போட்டுவிட்டது என்றான் மைஸ். என்ன தகராறு என்று எனக்குப் புரியவில்லை. ஏதோ பண விவகாரம் என்றார்கள். அதெல்லாம் கிடையாது எல்லாம் தாஸோட பொண்டாட்டியால தான் என்றான் மைஸ். அவனுக்கு மட்டும் இந்த வம்புகள் எல்லாம் எப்படியோ தெரிந்துவிடுகின்றன. டிம்பர் கடை வாசலில் தகராறு என்றவுடன் பறந்து வந்தேன். ஆனால் பார்க்கக் கிடைத்தது என்னவோ கலையும் கும்பலின் சலசலப்பும் ஜீப்பருகே சிகரெட் ஊதியபடி வெங்கிடாச்சலத்துடன் பேசிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டரும் தான். ஆனால் மைஸ் ஆரம்பத்திலேயே அங்கே ஆஜராகியிருந்தான். அவனுக்கு எப்படியோ மூக்கில் வேர்த்துவிடுகிறது. அதற்குப் பிறகு அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் எங்கேயாவது அரிவாளோடு தாஸ் நிற்கிறானா என்று உற்றுப் பார்த்துக்கொண்டே போவேன்.

கிரவுண்டுக்குப் போகும் தெருவில் புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த வீட்டிற்கு முன்னால் குவிந்திருந்த மணலில் ஜான் உட்கார்ந்திருந்தான். கையில் பெரிய ஓணாங்குச்சி பிடித்து மண்ணை நோண்டிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்தவுடன் "அய்யரே வாடா " என்றான்.

"போடா ஜான் பான் பீன் பன் பூன்..!" என்று கத்தினேன்.

என் அருகில் வந்து என் கையைப்பிடித்து இழுத்தான். கையிலிருந்த ரேடியோவை பிடுங்கிக் கொண்டான். "அய்யர் வீட்டு ரேடியோ மந்திரம் மட்டும் தான் சொல்லுமா" என்றான். இந்த ஜான் எப்பவும் இப்படித்தான். என் பேரைச்சொல்லி அவன் கூப்பிடவே மாட்டான். வெகுநாளாய் அவனையும் இதே மாதிரி கூப்பிட சரியான பெயரை யோசித்துக்கொண்டிருக்கிறேன். பின்னாடி வீட்டு மேரியக்கா, மோசஸ் அண்ணன் , மரியதாஸ் அங்கிள் ஆண்ட்டி இவர்கள் எல்லோருக்கும் என் பெயரைச் சரியாகச் சொல்லிக் கூப்பிட வருகிறது. அவர்களும் இவனைப் போலக் கிறிஸ்தவர்கள் தான். இத்தனைக் கும் எனக்கு ஒரு அழகான கிறிஸ்டியன் பெண்ணைத் தான் கல்யாணம் பண்ணி வைக்கப் போவதாக மேரி அக்கா சொல்லிக் கொண்டிருக்கிறாள். அம்மாவிடம் கூட சொல்லு கிறாள். அப்போதெல்லாம் கிறிஸ்டியன் பெண்களின் பெயர்கள் அழகானவை என்று நினைத்துக் கொள்வேன்.

"ஏ! ஓணாங்குச்சி ஃபைட் வர்ரியா?" என்றான்

அவசரமாக "டேய் நான் போகணும். ரேடியோவக் கொடு" என்றேன்.

"டேய் வாடா. இந்தா இது ஒன் கத்தி. எனக்கு இது. வா", என்று மணலுக்குப் பின்னாலிருந்த ஓணாங் குச்சியை நீட்டினான்.

"ஜெயிச்சா உன்னோட ரேடியோவ தர்ரேன்" மணல்மேல் ரேடியோவை வைத்தான்.

என் முகத்தருகில் வந்து குச்சியால் வீசிக் காட்டினான். நான் என் குச்சியை எடுத்துக் கொண்டேன்.

"வா அய்யரே வா அய்யரே .." என்று பாடிக் கொண்டே என் முன்னால் குச்சியை வீசினான்

என்றாவது ஒரு நாள் ஒரு கெட்ட வார்த்தை சொல்லி அவனைத் திட்டிவிட வேண்டும் என்று நினைத்தேன். நானும் அவனுடன் சண்டை போட ஆரம்பித்தேன். கையில் ஓணாங்குச்சி வழுக்கியது. பால் லேசாக கையில் பரவுவது போலிருந்தது. பளீர் பளீரென்று ஓணாங்குச்சி சத்தமெழுப்பியது. ஒரு சந்தர்ப்பத்தில் என் மூக்கருகில் அவன் வீசினான். முக்கு நுனி எரிந்தது.

"தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டா இவ்வளவு தான்" என்றான்.

நான் சற்று நகர்ந்து குனிந்து அவன் எதிர் பாராத சமயத்தில் அவனு டைய காலில் குச்சியால் அடித்தேன். அவன் துள்ளி விழுந்தான். அவனுடைய குச்சி தரையில் குத்தி மடங்கிப்போனது. எதிர் பாரா வெற்றியின் மயக்கத் தில் நான் செய்வதறியாது நிற்கும் போது அவன் ரேடியோவை கையில் எடுத்துக்கொண்டு ஓடினான். துரத்திக்கொண்டே நானும் ஓடினேன். கத்திக்கொண்டே அவனை விரட்டினேன். அவன் வளைந்து நெளிந்து ஓடினான். நல்லவேளை எதிரே ஜான் அப்பா வந்தார். அவரைப் பார்த்ததும் ரேடியோவை கீழே போட்டுவிட்டு அவன் ஓடினான். அவர் ஒன்றும் புரியாமல் அவனைத் துரத்தினார்.

ரேடியோவைக் கையில் எடுத்தபிறகு தான் எனக்கு நிம்மதி வந்தது. "கடங்காரன்" என்று வாய்விட்டு திட்டிக்கொண்டேன். மைஸ் மகேஷ் சொல்லிக் கொடுத்த ஒரு கெட்ட வார்த்தையையும் மனசுக்குள் சேர்த்துக்கொண்டேன். ஆனால் சண்டையில் அவனைத் தோற்கடித்துவிட்டது எனக்கு சந்தோஷ மாகவே இருந்தது. மைஸ்ஸிடம் சொன்னால் நம்பமாட்டான். ரேடியோவை அவனிடம் தொலைத்து விட்டிருந்தால்! என்னால் நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. அம்மா என்ன பண்ணுவாள் பாவம்.

அம்மா தினசரி காலையில் எழுந்த உடனே முணுமுணுப்பாக ரேடியோவை சமையலறையில் வைத்து விடுவாள். அதனுடன் சேர்ந்து பாதி நேரம் அடிக்குரலில் பாடியபடியே இருப்பாள். காலையில் எனக்குப் பிடித்த சினிமாப் பாட்டு நேரமும் அம்மா கச்சேரி கேட்கும் நேரமும் முட்டி மோதிக்கொள்ளும். அம்மாவை அரித்துக்கொண்டே இருப்பேன். என்னிடம் தா அம்மா என்று. அம்மா என்றாவது சுமாரான கச்சேரி என்றால் மட்டுமே என்னிடம் கொடுப்பாள். ஆனால் அப்பா வீட்டில் இருக்கும் மற்ற சமயங்களில் அவளால் ரேடியோ கேட்கவே முடியாது. அப்பா முழு நேரமும் அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார். அப்போது நான் ரேடியோவை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு ஓடிவிடுவேன். அப்பா மாடிப்படி கட்டவில்லை. ஸன்ஷேடு வழியாக மேலே கடகடவென்று ஏறிவிடுவேன். ரேடியோவை கவனமாக எடுத்துப் போவேன். அம்மாவின் விஷயங்களில் எப்பொழுதுமே எனக்குக் கவனம் அதிகம். அதில் போட்டிருக்கும் சின்னக் குழந்தையின் படம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அப்பா எப்பொழுதாவது இரவு ஷார்ட் வேவ்வில் எதையாவது கரகரவென்று இங்கிலீஷில் வைப்பார். ஆனால் முக்கால்வாசி நேரம் ஒன்றையும் கேட்காமல் ஸ்டேஷனை மாற்றிக்கொண்டே இருப்பார். மைஸ் மகேஷ் வீட்டில் டேப்ரிக்கார்டர் எல்லாம் கூட இருக்கிறது. அவனாலேயே அதை உபயோகப்படுத்த முடிகிறது.

அவன் அப்பாவும் என் அப்பாவும் ஒரே ஆபிசுக்குத் தான் போகிறார்கள். அவன் அப்பா சின்னதாக ஒரு மோபெட் கூட வாங்கிவிட்டார். என் அப்பா கொஞ்ச நாள் வரைக்கும் சைக்கிள் வைத்திருந்தார். இப்போதெல்லாம் அதைக்கூடக் காணோம்.

அப்பா ரேடியோவில் பாட்டரியைக் கழற்றாமல் இருந்தால் போகும் வழியில் எதையாவது கேட்டுக்கொண்டாவது போகலாம். அப்பா ஏன், தான் வராமல் என்னை அனுப்புகிறார் என்று யோசித்தேன். சுப்பையா எப்பொழுதாவது தான் வீட்டுக்கு வருவார். புல்லட் வண்டியில். புல்லட் முன்பக்கம் பாலு உட்கார்ந்திருப்பான். அவன் அதிலிருந்து இறங்கவே மாட்டான். அங்கே உட்கார்ந்துகொண்டே என்னைப் பார்ப்பான். அப்பாவும் சுப்பையாவும் வீட்டு வாசலில் முணுமுணுவென்று ஏதாவது பேசுவார்கள். நான் பாலுவுடன் ஏதாவது பேசப்பார்ப்பேன். அவன் வேறு ஏதோ ஸ்கூலுக்குப் போகிறான்.அங்கே இங்கிலீஷில் நிறைய சொல்லித்தருகிறார்கள். அதனால் அவனுக்கும் எனக்கும் பொதுவாகப் பேச அவ்வளவாக ஏதும் இருக்காது. எப்போதும் நான் புல்லட் வண்டி பற்றித்தான் கேட்பேன். அதன் வேகம் மற்ற எல்லா வண்டிகளையும் தோற்கடித்துவிடும் என்பான். அதில் வரும் சத்தம் போல வேறெதிலும் வராது என்பான். அவன் தொடைகள் பெட்ரோல் டாங்கை இறுகப் பற்றிக்கொள்ளும். ஆனால் வீட்டிலிருந்து கிளம்பும்போது சுப்பையா அப்பாவிடம் ஏதாவது உரத்து வேகமாகச் சொல்லிவிட்டுத்தான் கிளம்புவார். அப்பா குழைந்தபடி அதற்கு பதிலளிக்கும் சத்தம் புல்லட் கிளம்பும் சத்தத்தில் கேட்கவே கேட்காது. ஒரு நாள் கூட அம்மா சுப்பையாவை வீட்டுக்குள் வரச்சொன்னதில்லை. மளிகைக்கடை பாக்கியை கேட்டு வீட்டுக்கு வந்து சத்தம்போடும் நாடாரைக் கூட அம்மா உள்ளே அழைத்து மோர் கொடுத்திருக்கிறாள்.

சுப்பையா வீட்டின் கதவைத் தட்டிய போது கொஞ்சம் பதட்டமாக இருந்தது. நான் சுப்பையாவிடம் அத்தனை பேசியதில்லை. அப்பா என்ன சொன்னார் என்பது எனக்குக் குழம்பியது. சுப்பையா ஆஜானுபாகுவாக இருந்தார். அவரது கம்பீரமான மீசை எனக்குப் பிடிக்கும். கட்டம் போட்ட லுங்கி கட்டிக்கொண்டு வெராந்தாவில் நடந்தபடியே சுருட்டுப் பிடித்துக்கொண்டிருந்தார். வாசலில் புல்லட் ஓய்வெடுக்கும் சிங்கம் போல படுத்திருந்தது. வெராந்தாவின் ஒரு ஓரத்தில் பாலு சின்ன டேபிள் போட்டுக்கொண்டு வரி வரியாய் நோட்புக்கில் எழுதிக் கொண்டிருந்தான். பாலுவின் அம்மா கதவைத் திறந்து என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

"என்னலே" என்றார் சுப்பையா

"அப்பா இதக் கொடுக்கச்சொன்னா" என்றேன் கூச்சத்துடன். பாலு குறுகுறுவென்று என்னையும் ரேடியோவையும் பார்த்தான்.

"உக்காரு" என்றார் சுப்பையா. சுப்பையாவின் பற்களுக்கிடையில் சுருட்டுத் துண்டுகள் ஒட்டி யிருந்தன. புகை மிகவும் மெல்லிசாய் வழிந்தது. எனக்கு இருமல் வந்தது. தொண்டையை கைகளால் பிடித்துக்கொண்டேன். சுப்பையா அதைக்கவனித்து விட்டு கண்களை உருட்டினார்.

"அப்பா வரல?"

"இல்லை. என்னைத் தான் அனுப்பிச்சாங்க"

தானாக அப்பாவிற்கு மரியாதை கொடுத்ததை அவர் கவனிக்கவில்லை.

"பரவாயில்லியே நீயே இதத் தூக்கிட்டு வந்துட்ட"

எனக்குக் கொஞ்சம் பெருமையாக இருந்தது. வரும் வழியில் ஜானிடம் வீரப்போரிட்டு அல்லவா காப்பாற்றி வந்திருக்கிறேன். பாலுவாக இருந்தால் கண்டிப்பாக தோற்றுப்போயிருப்பான் என்று நினைத்துக்கொண்டேன்.

சுப்பையா அப்பா கொடுத்த கவரிலிருந்து காகிதம் ஒன்றை எடுத்துப் படித்தார். பாதியாய் மடக்கி டேபிள் மேல் வைத்தார். ரேடியோவை மேலும் கீழுமாய்த் திருப்பிப் பார்த்தார். அதன் பித்தான்களை சுழற்றினார்.

"என்னலே இது பாடாதா" என்றார்.

நான் வாய்மூடி இருந்தேன்.

பாட்டரிக்கதவைத் திறந்துப்பார்த்தார்.

"உங்கப்பா பாட்டரி கூட போடாம பாட்டுக் கேப்பாங்களோ?"

அப்பா பாட்டு கேட்டு நான் பார்த்ததில்லை. இது அம்மாவின் ரேடியோ என்று சொல்ல நினைத்தேன். எனக்குத் திடீரென்று அவர் கையிலிருந்து ரேடியோவைப் பிடுங்கிக்கொண்டு விட வேண்டும் போலிருந்தது.

கீழே அலட்சியமாக அதை வைத்தார்.

பாலுவிடம் "அடுத்த வோர்ட் என்ன? " என்றார்.

பாலு மெல்லிய குரலில் "கான்ஃ கான்ஃபிடன்..." என்று முனகினான்.

"கொடுடா அதை" என்று நோட்டை எடுத்தார். என்னிடம் கொடுத்தார். இந்த வார்த்தையப் படி என்றார்.

எனக்கு நோட்டுப்புத்தகத்தைப் பிடிக்கும்போது விரல்கள் நடுங்கின. அழகான காக்கி அட்டைபோட்டு நீலநிற லேபிள் ஒட்டியிருந்தது நோட்டுப் புத்தகத்தில். வரி வரியாய் வார்த்தைகள்.

"கான்..கான்.." எனக்குக் குரல் உள்ளுக்குள் தொலைந்து போனது. குழறியது.

பாலு களுக் என்றான்.

"சரி அடுத்த வார்த்தய படி"

நான் திருதிருவென்று முழித்தேன்.

சுப்பையா என்னைப் பார்த்து "என்னலே இப்படி படிக்க " என்றார்.

எனக்கு வெறுப்பாக இருந்தது. நோட்டுப்புத்தகம் மறுபடியும் பாலுவிடமே போனது. அவன் கடகடவென்று இரண்டு மூன்று வார்த்தைகளைப் படித்துவிட்டு என்னை வெற்றியுடன் பார்த்தான். சுப்பையாவிற்கு கொஞ்சம் திருப்தியானது போலிருந்தது.

"கான்ஃபிடன்ஸ்" என்றார் என்னைப் பார்த்து.

நான் வெறுமனே அவரைப் பார்த்தேன்.

"சொல்லு பார்ப்போம்"

"கான்ஃபிடன்ஸ்" என்றேன்

"அப்படின்னா என்ன?"

"தெரியாது"

அப்பாவிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று அவரைப் பார்த்துக் கத்தவேண்டும் போலிருந்தது. கோபமாக இருந்தது.

"எப்போ கத்துக்கப் போற?" என்றார்.

"அப்பா சொல்லித் தருவாங்க" என்றேன் மெதுவாக.

"அது சரிதான்" என்றார் கேலியுடன்.

அதன் பிறகு வெகுநேரம் அவர் என்னைக் கண்டு கொள்ளவில்லை. பாலுவிற்கு டிக்டேஷன் கொடுத்தார். அவன் கடகடவென்று கஷ்டமான வார்த்தைகளையெல்லாம் எழுதினான். அதில் பாதிக்குப் பாதியைக் கூட நான் கேட்டதில்லை. எப்போது அங்கிருந்து கிளம்புவோம் என்றிருந்தது.

சுப்பையா உள்ளே போய்விட்டு வந்தார். அப்பா கொடுத்த கவரை என்னிடம் கொடுத்தார். இதக் கொண்டு உங்கப்பா கிட்டக் கொடு என்றார். ஓரமாக அந்தக்கவரில் ஏதேனும் தென்படுகிறதா என்று பார்த்தேன். ஏதோ இருப்பது போலத் தோன்றியது. சட்டென்று எதையோ விட்டுவிட்டுப் போகிறோம் என்று உணர்ந்தேன்.

"ரேடியோ?" அவசரத்துடன் கேட்டேன்.

"ரேடியோவா?" என்றார் திகைப்புடன்.

"போய் உங்கப்பாவக் கேளு."

"அவர் கிட்டக் கொடுத்திருவீங்களா?"

அவர் என்னை ஏறிட்டு ஒரு கணம் பார்த்தார்.

"ஜாக்கிரதையா கவர எடுத்துக்கிட்டுப் போ"

வெளியே வந்தேன். எல்லாரும் என்னை எதைச் செய்யச்சொன்னாலும் ஜாக்கிரதையாகச் செய் என்கிறார்கள். எனக்குத் தெரியாதா என்ன? ஜானை விரட்டியடித்து விட்டு ரேடியோவைக் கொண்டு போய்ச் சேர்க்கவில்லையா. இப்போது இந்தக் கவர் என்ன பெரிய விஷயமா என்று தோன்றியது.

சுப்பையா ரேடியோவை வைத்துக்கொண்டு என்ன பண்ணுவார் என யோசித்தபடி வந்தேன். அவர்கள் வீட்டில் நிச்சயமாக பெரிய பெரிய ரேடியோ, டேப் ரிக்கார்டர் எல்லாம் இருக்கவேண்டும். அவைகளுக் கிடையில் குட்டிப்பூனை மாதிரி மர்பி ரேடியோ எந்த மூலை. மிகப்பெரிய ரேடியோ ஒன்றின் மீது உட்கார்ந்தபடி அலட்சியமாக மர்ஃபி ரேடியோவை பாலு பார்ப்பதாக நினைத்துக்கொண்டேன்.

வீட்டில் அப்பா வாசலில் பக்கத்துவீட்டுக்காரரின் இங்கிலீஷ் பேப்பரைப் படித்துக்கொண்டு உட்கார்ந் திருந்தார். கவரை அவரிடம் நீட்டினேன். பரபரப்புடன் அவர் முகத்தை பார்த்தேன். சரியா இருக்கா அப்பா? என்றேன். கவரை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார்.

"ரேடியோவ எப்ப எடுத்துண்டு வரணும் அப்பா?"

"தொண தொணக்காத.. போ!" என்றார்.

நான் உள்ளறைக்குப் போய் அங்கிருந்து பார்த் தேன். கவரை எடுத்து ஒரு விரலால் உள்ளிருப் பதை நிரடிப்பார்த்தார். உதட்டை ஒரு கணம் பிதுக்கிக் கொண்டார். பிறகு கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே போய்விட்டார். அப்பாவிடம் கான்ஃபிடன்ஸ் என்றால் என்ன என்று கேட்காமல் விட்டது ஞாபகத்துக்கு வந்தது.

நான் சமையலறைக்குள் போனேன். அம்மா சமையல் மேடைக்கு கீழே சும்மா உட்கார்ந் திருந்தாள். என்னைப் பார்த்து ரேடியோ பற்றி ஏதேனும் கேட்பாள் என்று நினைத்தேன். ஆனால் அவள் ஒன்றும் கேட்கவில்லை. எனக்கு அவளைப் பார்க்கவே ஒரு மாதிரியாக இருந்தது. ஜானிடமிருந்து ரேடியோவைக் காப்பாற்றியது பற்றிச் சொல்ல நினைத்தேன்.

"ரேடியோவ சுப்பையாகிட்ட பத்திரமா கொடுத்தாச்சு அம்மா"

"போடா! நம்ப ரெண்டுபேரையும்கூட சேர்த்து அவன் கிட்ட விட்டுவிடச் சொல்லு, உங்க அப்பாவை. மிஞ்சப்போறது வேறென்ன!" அம்மா கத்தியது எனக்கு பிடிக்கவில்லை. அப்பாவிடம் பேசும் தோரணையிலேயே என்னிடமும் ஏன் பேசுகிறாள்!

எதிர் வீட்டில் மைஸ் மகேஷ் இன்னமும் எனக்காகக் காத்திருந்தான்.

"டேய் பாதி முட்டி போட்டுட்டு ஓடிட்ட! ரேடியோவ தூக்கிட்டு எங்கடா போன?" என்றான்

"சுப்பையா வீட்டுக்கு"

"எதுக்கு?"

"ரேடியோ ரிப்பேர்" என்றேன்.

கோகுலகண்ணன்

© TamilOnline.com