நிச்சயம் ஒரு மாற்றம்
என் கணவர் 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். Green Card வைத்திருந்தோம். என் பையன் என்னை இங்கேயே நிரந்தரமாக அழைத்து வந்துவிட்டான். மருமகள் நல்ல மாதிரி தான். இருந்தாலும் என்னை ஒரு விருந்தாளி போல பாவிக்கிறாள். அளவோடு தான் பேசுவாள். அவர்கள் எங்கே போகிறார்கள், என்ன திட்டம் போடுகிறார்கள் என்று எனக்குத் தெரிவதில்லை. சில சமயம் என் பேரக்குழந்தைகள் மூலம் தான் தெரியவரும். இரண்டு மூன்று வாரத்துக்கு ஒருமுறை ஏதாவது பார்ட்டிக்குக் கூட்டிக் கொண்டு போவார்கள். அங்கேயும் நான் ஏதோ பொம்மை மாதிரி உட்கார்ந்து கொண்டு அவர்கள் தங்களுக்குள் பேசி, சிரித்துக் கொண்டு இருப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு வருவேன். அதில் ரசிக்க முடியவில்லை. இப்போது அதையும் நிறுத்தி விட்டேன். எவ்வளவு நாள் தான் டிவி பர்த்துக் கொண்டிருப்பது? என் கணவரின் ஞாபகம் அடிக்கடி வருகிறது. மனிதர்களுக்காக ஏங்குகிறேன். இந்தியாவுக்கு திரும்பிப் போய்விடலாமா என்று யோசிக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

அன்புள்ள,

மனிதர்களுக்காக ஏங்கினால் இந்தியா உங்கள் சொர்க்கம். மகனுக்காக ஏங்கினால் இதுதான் உங்கள் சொர்க்கம். பெரும்பாலும், வாழ்க்கையில் ஒன்றை அடைய ஆசைப்பட்டால் இன்னொன்றை இழக்க நேரிடும்.

உங்கள் மகனும், மருமகளும் தங்கள் செய்கையில் பொறுப்பாகத்தான் இருந்திருக்கிறார்கள். உங்கள் தனிமையைத் தவிர்த்து, தங்களுடன் நிரந்தரமாகத் தங்க வசதி செய்திருக்கிறார்கள். உங்களுக்கு உள்ளத்தில் ஏற்பட்டிருக்கும் வெறுமையையும் தனிமையையும் நீக்க நீங்கள் தான் செயல் படவேண்டும்.

3 மாதம் நான் சொல்லும் சில வழிகளைக் கடைப்பிடித்துப் பாருங்கள். அதற்குப்பிறகும் இங்கே இருப்பது முள் மேல் இருப்பது போல் இருந்தால், 1 வருடம் இந்தியாவில் இருந்துவிட்டு வர முடிவு செய்யுங்கள்.

  • ஒரு நாளின் 10 மணிநேரத்தை 10 பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு மணி நேரத்தையும், ஒவ்வொரு செயலுக்காக ஒதுக்கி, அந்த நேரக் கணக்குப்படி, அந்தந்த செயல்களில் ஈடுபடுங்கள். உதாரணத்திற்கு 7-8, காலைக்கடன்கள், 8-9 தியானம், 9-10 தோட்ட வேலை, 12-1 உணவு, 1-2 உறக்கம் என்று உங்கள் வசதிப்படி செய்து கொண்டு வாருங்கள்.


  • அந்த 10 செயல்களில் ஒன்று அல்லது இரண்டு செயல்கள் உங்கள் மகனுக்கோ, மரு மகளுக்கோ, பேரக்குழந்தைகளுக்கோ உதவியான முறையில் இருக்க வேண்டும்.


  • உங்களுக்குப் பிடித்த செயல்களை - சமையல், பாட்டு, தோட்டக்கலை போன்றவற்றை வேறு முறையில் செய்ய முயற்சி செய்யுங்கள்.


  • தெரிந்த நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ வாரம் ஒருமுறை அவர்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு உணவைத் தயாரித்துக் கொடுங்கள்.


  • தினமும் 5 நிமிடம் உங்களுக்குள் ஏற்பட்ட வெறுமையை நினைத்துக் கொண்டே இருங்கள். பிறகு உங்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு பாடலை உரக்கப்பாடுங்கள்.


  • உங்களுக்கு எழுதும் பழக்கம் இருந்தால், தினமும் உங்கள் உணர்ச்சிகளைக் கொட்டி எழுதிக் கொண்டு வாருங்கள். மேலே குறிப்பிட்டவற்றை தொடர்ந்து செய்து வர, வர உங்களுக்குள் நிச்சயம் ஒரு மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.


3 மாதம் முடிந்த பிறகு, அமெரிக்காவில் இருக்கிறீர்களா, இந்தியாவுக்குச் சென்று விட்டீர்களா என்று முடிந்தால் எனக்குத் தெரிவிக்கவும்.

வாழ்த்துக்கள்

சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com