சமுதாயத்தோடு முட்டி மோதி எதையாவது சாதிக்கணும்! - துர்கா பாய்
சந்திப்பு: க. காந்திமதி
படங்கள்: எஸ். அசோகன்

பஞ்சுபோல் நரைத்து பாப் வெட்டிய தலை, கணீர் குரல், தளர்வில்லா உடல், நிமிர்ந்த நடை, யாருக்கும் அஞ்சாத நேர்கொண்ட பார்வை... துர்காபாயைப் பார்த்தால் 72 வயதென்று யாராலும் சொல்ல முடியாது. இந்திய இராணுவத்தில் துணிச்சலாகப் பணிபுரிந்த முதல் தமிழ் பெண் பிரிகேடியர்.

அரைநூற்றாண்டுக்கு முன்பே இந்திய இராணு வத்தில் பிரிகேடியர் பதவி வகித்த முதல் பெண், அதிலும் தமிழ்ப்பெண். இடைவிடாத வெடிகுண்டு மழையும், இரத்தச் சகதியும் நிறைந்த போர்க் களங்களில் மருத்துவ முகாமிட்ட இந்தியாவின் நைட்டிங்கேல்...

'எனக்குச் சொந்த ஊர் திண்டிவனம்தான். ஆனா, நான் பிறந்தது கோலார் தங்கவயல் பகுதியில். என் அப்பா அங்கே ஒரு பிரிட்டிஷ் ஸ்கூல்ல தலைமை ஆசிரியரா இருந்தார். 1942 ஆகஸ்டு புரட்சியில என் சித்தப்பா திண்டிவனத்துல கைதாயிட்டதால, திண்டிவனத்துல இருக்கிற எங்க சொத்தை யெல்லாம் மேற்பார்வை பார்த்துக்கறதுக்காக என் அப்பா அந்த வேலையை ராஜினாமா பண்ணிட்டு, எங்களைக் குடும்பத்தோட திண்டிவனத்துக்குக் கூட்டிட்டு வந்துட்டார். அப்போ எனக்குப் பன்னிரெண்டு வயசு' கண்கள் படபடக்க தன் வாழ்க்கையில் பின்னோக்கிப் பயணிக்கிறார்.

'திண்டிவனத்துல ஒரு ஸ்கூல்ல சேர்ந்து நான் படிச்சுக்கிட்டிருந்த சமயம் அந்த ஊர்ல திடீர்னு நிறைய பேருக்கு காலரா வியாதி பரவுச்சு. அந்த வியாதி என்னையும் விட்டுவைக்கலை. அந்த வயசுல அதைத் தாங்கிக்க தெம்பு இல்லாம ஐந்து நாட்கள் மயக்க நிலையில ஹாஸ்பிடல்லேயே இருந்தேன். அப்போ டாக்டர். வயலட் ஜோசப் தான் என்னை ஸ்பெஷலா கவனிச்சு என்னைக் காப்பாற்றினாங்க. அன்னைக்குத்தான் ஒரு வியாதியோட கொடூரத்தை யும், நோயாளியோட அவஸ்தையையும், அவங்களைக் காப்பாத்தறதுல ஒரு டாக்டருக்கு இருக்கற பொறுப்பையும் நான் உணர்ந்தேன்.

டாக்டர் வயலட் ஜோசப் மாதிரியே நானும் டாக்டராகணும்னு நினைச்சேன். ஆனா, அன்றைய சூழ்நிலையில என் குடும்பத்தோட பொருளாதார நிலைமை, அதுக்குப் போதுமானதா இல்லை. அதனால, நாலு வருஷம் ஜெனரல் நர்சிங் டிரெயினிங் எடுத்துகிட்டேன். என் விருப்பத்துக்குப் படிச்சு யாரோட உதவியையும் எதிர்பார்க்காம சொந்தக் கால்ல நிக்கணும்னு என்னை ஊக்கப்படுத்தினது என் அம்மாதான்.

டிரெயினிங் முடிச்சதுக்கப்புறம், சென்னை எக்மோரிலுள்ள அரசாங்க மகப்பேறு மருத்துவ மனையில நர்ஸா வேலை பார்த்துக்கிட்டிருந்தப் போதான் இராணுவத்துல நர்ஸ் வேலைக்கு ஆளெடுக்கறதா பேப்பர்ல விளம்பரம் பார்த்து அதற்கு விண்ணப்பித்தேன். என்கூட வேலைசெய்தவங்களும் நிறைய பேர் இதுக்கு விண்ணப்பித்தாங்க. என்ன காரணமோ தெரியலை, நான் மட்டும்தான் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வானேன். அதுலயும் தேர்வான வுடனே 1953ல் பெங்களூருக்கு வந்து வேலையில சேரும்படி உத்தரவு வந்துச்சு. என் வீட்ல எல்லாருக்கும் சம்மதம்தான். ஆனா, உறவுக்காரங்க தான் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினாங்க. 'இராணுவத்துக்குப்போனா கெட்டழிஞ்சு போயிடு வே'ன்னு பல மாதிரி பேசினாங்க. என் அம்மாவும், என்கூட எக்மோர் ஹாஸ்பிடல்ல வேலைபார்த்த சீனியர் சிஸ்டர் ஒருத்தரும் கொடுத்த தைரியத் தாலயும், ஊக்கத்தாலயும் இராணுவ வேலையில சேர்ந்துட்டேன். என்னோட இந்த 35 வருஷ இராணுவ வாழ்க்கையில சுத்தமான சைவச் சாப்பாடு மட்டும்தான் சாப்பிட்டிருக்கேன்'' என்று பெருமிதத்தோடு சொல்கிறார்.

பெங்களூர் இராணுவ மருத்துவமனையில் சேர்ந்த போது ஆரம்பத்துல இராணுவ ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கறது கஷ்டமா இருந்தது. எல்லாரும் ஒரே மாதிரி உட்காரவேண்டும், எழுந்திரிக்க வேண்டும், ஸ்பூன்·போர்க் பிடித்து சாப்பிடவேண்டும், மிக முக்கியமாக எனக்கு இந்தி தெரியாது என்பது வேறு, எல்லாமாகச் சேர்ந்து கொண்டு இராணுவப் பணியில் எப்படி இருக்கப்போகிறோம் என்ற சந்தேகத்தைக் கொடுத்தது. ஆனா, அங்கே இருந்த பல பேருக்கு இதே மாதிரியான பிரச்சினைகள் இருந்ததால என்னை நானே தைரியப்படுத்திக்கிட்டு ஒவ்வொரு விஷயங்களையும் தேடித்தேடிக் கத்துக்க ஆரம்பிச்சேன்.

பூனேக்குப் பக்கத்துல இருக்கற 'கர்கி'ங்கற இடத்துலதான் என்னோட முதல் போஸ்டிங். அதுக்கப்புறம் பூனே, டில்லி, பெங்களூர்னு பல இடங்களுக்கு மாற்றிக்கிட்டே இருந்தாங்க. ஒவ்வொரு மாற்றலின் போதும் தனிஆளாக நான்கைந்து ரயில்கள் ஏறி இறங்கிப் பயணம் செய்ய ரொம்பவும் சிரமப்பட்டிருக்கேன். ஒவ்வொரு அனுபவமும் ஏதோ ஒரு வகையில எனக்குப் பாடமா அமைஞ்சது. சேவை செய்யணும்ங்கற எண்ணம் இருந்ததால திருமணத்தைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை.

ராணுவத்தில் நான் சேர்ந்த நேரத்துல, 'ராணுவத்துல வேலை செய்ற பெண்கள் கல்யாணம் செய்துக்கக் கூடாது. அப்படி அவங்க செய்துக்க விரும்பினா, வேலையை ராஜினாமா பண்ணிடனும்னு' ஒரு விதிமுறை இருந்துச்சு. புருஷன், குடும்பம்னு செட்டில் ஆகறதைவிட மருத்துவ சேவை செய்றதுதான் எனக்குப் பிடிச்சிருந்தது. ஆனா, இராணுவத்துல வேலை செய்த பெண்கள் எல்லாருமா ஒண்ணு சேர்ந்து போராடி, 1968ல் அந்த விதிமுறையை ஓரளவுக்குத் தளர்த்தினோம்.

1962ல் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் ஒரு அங்கமாக இந்தியாவிலிருந்து தேர்ந் தெடுக்கப் பட்டு ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோ விற்கு மருத்துவ உதவிக்காகப் போனேன். காங்கோவில் பாலியல் நோயினால் பாதிக்கப் பட்டவர்கள்தான் அதிகம். ஏன்னா, காங்கோலியர்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாதவர்கள். அந்த இடத்தில் எங்களை மிகவும் முகம் சுளிக்க வைத்த ஒரே விஷயம் அவர்களின் வியர்வை நாற்றம்தான். ஒரு கட்டத்திற்கு மேல் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் கையில் ஆளுக்கொரு 'ஏர்·பிரஷ்னரோடு'தான் அந்த இடத்திற்குள் வலம்வந்தோம்.

1965ல் முதல்முறையாக 24 மணிநேரமும் போர்க் களத்தில் மருத்துவ சிகிச்சை கொடுத்தது என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத அனுபவம். கண்ணை மூடித்திறப்பதற்குள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் காயம்பட்டவர்களைக் கொண்டு வந்து மருத்துவ முகாமில் போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒரு சிலரோட கோரமான நிலையைப் பார்க்கும்போது தொண்டையை அடைச்சுக்கிட்டு அழுகை வரும். ஆனா, நாங்க அந்த இடத்துல அழக்கூடாதுங்கறதால, மனசைக் கல்லாக்கிக்கிட்டு காயம்பட்டவங்களை எப்படியாவது காப்பாற்றியே ஆகணும்ங்கற ஒரே நோக்கத்தோட அவங்களுக்கு சிகிச்சை கொடுப்போம்.

ஒருமுறை காயம்பட்டு இரத்தம் சொட்டச்சொட்ட முகாமுக்கு ஒரு வீரரைத்தூக்கிட்டு வந்தாங்க. அவருக்கு சிகிச்சை செய்துகிட்டிருக்கும்போதே திடீர்னு அவர் 'குடிக்க, கொஞ்சம் ரசம் கிடைக்குமா'ன்னு கேட்டாரு. அவசர அவசரமா நான்தான் அவருக்கு ரசம் வைச்சுக் கொடுத்தேன்.

உண்ணாமல் உறங்காமல் மாதக் கணக்கில் என்னை வேதனைப் படுத்திய அதிர்ச்சியான அனுபவமும் இராணுவத்தில் கிடைத்திருக்கிறது. இந்திய இராணுவத்திடம் பிடிபட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சவரம் செய்யும் தொழிலாளி கொடுத்த தகவலின் படி 'அந்தக்'குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றோம். அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தால் சுமார் 60 பேர், கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் சுடப்பட்டு இறந்து அழுகி நாற்றெமெடுத்து பாதி எலும்புக் கூடுகளாகத் தொங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பிணவாடையில் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. அடுத்த சில மாதங்களுக்கு நான் போகுமிடமெல்லாம் அந்தப் பிணவாடை என்னைப் பின்தொடர்ந்து வருவதுபோன்ற ஒரு பிரமை என்னைப் பாடாய்ப் படுத்தியது. அதிலிருந்து மீண்டு வர ரொம்பவே சிரமப்பட்டேன்.

இதுமாதிரி பல வகையான கஷ்டங்கள் இந்த வேலையில இருந்தாலும், இரவு பகலா இருபத்தினான்கு மணி நேரமும் மருத்துவ சேவை ஒண்ணுதான் குறிக்கோள்னு நான் இருந்ததாலதான் பிரிகேடியர் பதவி வரைக்கும் என்னால உயர முடிஞ்சது. முக்கியமா பெண்கள்கிட்ட தன்னம்பிக்கை அதிகமா இருக்கணும், பயம் துளிகூட இருக்கக் கூடாது. உழைச்சு சம்பாதிச்சு தனக்குன்னு ஒரு சேமிப்பை ஒவ்வொரு பெண்ணுமே வைச்சிருக் கணும். வீடு, குடும்பம், குழந்தை, புருஷன்னு சின்ன வட்டத்துக்குள்ளேயே சிக்கிக்காம சமுதாயத்தோட முட்டி மோதி எதையாவது சாதிக்கணும்ங்கற உயர்வான எண்ணம் எல்லா பெண்களிடத்திலேயும் இருக்கணும்.'என்று தன் அனுபவத்தைப் பாடமாக்கி உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறார் துர்கா பாய்.

சந்திப்பு: க. காந்திமதி
படங்கள்: எஸ். அசோகன்

© TamilOnline.com