நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் நவகிரகங்களில் சுக்கிரனுக்கு உரிய தலமாகவும் போற்றப்படுவது தென்திருப்பேரை. தென்திருப்பேரை என்று அழைக்கப்படக் காரணம் சோழ நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கருகில் திருப்பேர்நகர் என்றொரு தலம் இருப்பதனால் அதனின்றும் வேறுபடுத்திக் காட்டத்தான் இது தென்திருப்பேரை என்று அழைக்கப்படுகிறது.
நின்றகோலம், வீற்றிருக்கும் கோலம் என்றெல்லாம் காட்சி தரும் பெருமாள் இத்தலத்தில் இடது காலை மடித்து வைத்துக்கொண்டு வீராசனமாக வீற்றிருக்கும் கோலத்தில் காட்சி அளிக்கின்றார். இங்குள்ள இறைவன் 'மகர நெடுங்குழைக்காதர்' என்று அழைக்கப்படுகின்றார். இப் பெயருக்குப் பின்னால் சுவையான வரலாறு ஒன்றிருக்கின்றது.
பெருமாள் பூமிதேவியுடன் இணைந்து அன்போடிருப்பது கண்டு ஏங்கிய ஸ்ரீதேவி தன்னிடம் அவ்வாறு இல்லையே என்று வருந்தி துர்வாச முனிவரிடம் தன் குறையைக் கூற, அவரும் அன்னைக்கு உதவும் பொருட்டுத் திருமாலிடம் சென்றார். அந்த நேரத்தில் பூமிதேவி முனிவரைப் பொருட்படுத்தாது இருந்தது கண்டு சினம் கொண்ட முனிவர் "நீயும் ஸ்ரீதேவி போலவே பெருமாளை நினைந்து ஏங்குவாயாக" என்று சாபமிட்டார். சாபவிமோசனமாக பெருமாளைக் குறித்துத் தவமியற்ற பூமிதேவி தென் திருப்பேரை வந்தடைந்தார். தவமியற்றிக் கொண்டிருந்த பூமிதேவி பங்குனி மாதத்தில் பௌர்ணமியன்று சுக்கிர புஷ்கரிணியில் நீராடிக்கொண்டிருந்தாள். சுக்கிரனுக்கு உகந்த தலம் என்பதால் இங்குள்ள தீர்த்தம் சுக்கிர புஷ்கரிணி என்றழைக்கப்படுகிறது. நீராடிக் கொண்டிருந்தபோது மீன் வடிவில் இரண்டு பொற்குண்டலங்கள் பூமிதேவியின் கைகளில் அகப்பட்டன.பெருமாளின் காதுகளில் அவற்றை அணிவித்துப் பார்க்க விருப்பங்கொண்ட பூமிதேவி தன் விருப்பத்தைப் பெருமாளிடம் முறையிட்டுப் பிரார்த்திக்க பெருமாளும் அவற்றை அணிந்து கொண்டது மட்டுமல்லாது அவளுக்கு சாபவிமோசனமும் அளித்தார். அன்று முதலாக இத்திருத்தலத்துப் பெருமாள் 'மகர நெடுங்குழைக்காதர்' என்றே அழைக்கப்படுகின்றார்.
'நிகரில்முகில்வண்ணன்' என்பது இத்தலத்து உற்சவமூர்த்திக்குப் பெயர். விதர்ப்பதேசம் ஒருகாலத்தில் மழை பொய்த்துப்போனதால் வறட்சியுற்று மக்கள் பஞ்சத்தால் வருந்த நேரிட்டது. அந்நாட்டரசன் செய்வதறியாது தன் குருவை நாடிச்சென்று நிலமையை விளக்கிக் கூறினான். அவர் ஒரு வரலாற்றைக் கூறினார். அதாவது ஒரு சமயம் வருணனுக்கும் அசுரர்களுக்கும் நடைபெற்ற போரில் வருணன் பாசாங்குசம் என்ற தன் ஆயுதத்தையும் தன் நாட்டையும் இழந்தான். இதனால் செய்வதறியாது தன் குருவாகிய வியாழ பகவானை வேண்ட அவரது ஆணைப்படி வருணன் திருப்பேரையில் வந்து தங்கி கடுந்தவத்தை மேற்கொள்ள இறைவன் கரத்திலிருந்து கீழே விழுந்த தீர்த்தம் அவனுடைய பழைய பாசங்குச மாயிற்று. இழந்த நாட்டையும் திரும்பப்பெற்றான். இந்த வரலாற்றைக் கூறி வருணபகவான் வரம் பெற்ற திருப்பேரை என்ற தலத்திற்குச் சென்று அங்குள்ள நிகரில்முகில்வண்ணனை வழிபடுமாறு மன்னனுக்கு அவனது குரு அறிவுரை கூறினார். குருவின் அறிவுரைப்படி மன்னனும் சுக்கிர தீர்த்தத்தில் நீராடி நிகரில்முகில் வண்ணனை வழிபட விதர்ப்ப நாட்டுப் பஞ்சமும் நீங்கிற்று. நாளடைவில் இப்பெருமானின் பெயர் நீ£ர்முகில்வண்ணன் என்று மருவியுள்ளது.
கருடபகவானின் தனித்தன்மை:
சிதம்பரத்தில் மூலவர் சந்நிதிக்கு எதிரே நந்திபகவான் சற்றுத் தள்ளி இருப்பது போலவே இங்கும் மூலவருக்கு எதிரே கருடபகவான் சற்றுத் தள்ளியே காணப்படுகின்றார். இக்கோயிலில் இருக்கும் பூமிதேவித் தாயார் 'குழைக்காதுவல்லித்தாயார்' என்றும் ஸ்ரீதேவித்தாயார் 'திருப்பேரைத்தாயார்' என்றும் அழைக்கப்படுகின்றனர். இவ்விருவருக்கும் தனித்தனியே சந்நிதிகள் உள்ளன.
'மகரநெடுங்குழைக்காதர் பாமாலை':
நாராயண தீட்சிதர் என்பவர் இவ்வூரைச் சேர்ந்தவர். இவர் தம்முடைய நிலத்திற்குரிய தீர்வையைச் செலுத்தத் தவறியதால் இவருக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. உடனே இவர் மகர நெடுங்குழைக்காதரைத் துதித்து 'பாமாலை' ஒன்று பாடினார். அப்போது தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னரின் பிரதிநிதியாக திருநெல்வேலியை ஆண்டு வந்த வடமலையப்பருக்கு இச்செய்தி எட்டிற்று. அவர் நாராயண தீட்சிதரை விடுதலை செய்ததோடு அவர் இயற்றிய பாமாலையைப் பாராட்டி சன்மானமும் அளித்துப் பெருமைப் படுத்தினார். அறத்தின் மீதிருந்த பற்றையும் தமிழ் மொழியின் மீதிருந்த காதலையும் புலவர்களிடத்தே இருந்த மதிப்பையும் இச்சம்பவம் புலப்படுத்துகின்றது.
தமிழ் அறிஞர் பி.ஸ்ரீ. அவர்களின் சொந்த ஊர் தென்திருப்பேரை. அவர் சித்தப்பா அனந்த கிருஷ்ண ஐயங்கார் 1911ல் நடந்த ஜார்ஜ் சக்கரவர்த்தியின் முடிசூட்டு விழாவின்போது 'மகுட தாரண வைபவ வெண்பா' ஒன்று பாடினார். மன்னர் அவரைப் பாராட்டி எலிசபெத் அரசியாரின் உருவம் பொறிக்கப் பெற்ற பொற்சங்கிலியைப் பரிசாக அளித்தார். அவரது வெண்பாவைப் பாராட்டிப் பரிசளிக்க மன்னரிடம் சிபாரிசு செய்தவர் ஜி.யு. போப் அவர்கள். தென்திருப்பேரைக்குக் கிடைத்த பெருமை அல்லவா இது!!
திருப்பேரைத் தலத்தை நாயகி பாவத்தில் பாடிப் பரவிய நம்மாழ்வார் கூறுவதைக் கேளுங்கள்
நகரமும்நாடும் பிறவும்தேர்வேன் நாணெனக்கில்லைஎன்தோழிமீர்காள் சிகரமணிநெடுமாடநீடு தென்திருப்பேரையில் வீற்றிருந்த மகரநெடுங்குழைக்காதன்மாயன் நூற்றுவரைஅன்றுமங்கநூற்ற நிகரில்முகில்வண்ணன்நேமியான் என்நெஞ்சம்கவர்ந்துஎனையூழியானே?
தாமிரபரணியின் வடகரைக் கோயில்களின் தரிசனம் வரும் திங்களில் தொடரும்.
டாக்டர். அலர்மேலு ரிஷி |