சந்திப்பு: மேகனா திலீப் எழுத்து: க. காந்திமதி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வரிசையில் மிக வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகர் ஷாம், கடந்த கால நிகழ்வுகளையும், நிகழ்கால நடப்புகளையும், எதிர்காலக் கனவுகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். ப்ளு ஜீன்ஸ¥க்கு மேட்சாக வெள்ளை நிறத்தில் ஷர்ட் அணிந்து வந்து உற்சாகமாகப் பேசத் தொடங்கிய இந்தப் பிரபல கதாநாயகரின் கவர்ச்சியான நீல நிறக் கண்களில் வெற்றியின் ஒளி தெரிகிறது.
உங்கள் சின்ன வயது ஞாபகங்களைக் கொஞ்சம் சொல்லுங்கள்
எனக்கு நிஜமான சொந்த ஊர் மதுரைதான், ஆனா, கடந்த 24 வருஷமா படிச்சது வளர்ந்தது எல்லாம் பெங்களூர்ல. இப்போ ஒரு வருஷமாத்தான் சென்னையில இருக்கேன். பெங்களூர்ல இருக்கிற செயின்ட்.ஜான்ஸ் ஸ்கூல்லதான் படிச்சேன். படிக்கிற காலத்தில எனக்கு விளையாட்டுல ரொம்ப ஆர்பம். அதிலும் குறிப்பா கால்பந்துன்னா உயிர். பி.காம் டிகிரி முடிச்சிருக்கேன். ஆஸ்திரேலியா போய் எம்.பி.ஏ. படிக்கலாம்னு ஒரு எண்ணம் இருந்தது. ஆனா, இந்த ·பீல்டுக்கு வந்ததுக்கப்புறம் மொத்தமா எல்லாமே மாறிப்போயிடுச்சு.
திரைப்பட வாய்ப்பு உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?
இயக்குநர் கதிர் எடுத்த 'காதலர் தினம்' படத்துக்காகத்தான் முதல்ல ஸ்க்ரீன் டெஸ்ட் செஞ்சாங்க. ஆனா, அதுல நான் செலக்ட் ஆகலை. அப்போதான், சினிமாபடங்களை விட விளம்பரப் படங்களுக்கு நான் பொருத்தமா இருப்பேன்னு தோணுச்சு. அதுக்கப்புறம் 'குஷி' படத்துக்கு என்னை டெஸ்ட் செஞ்சப்பவும் அந்த கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமா இல்லைன்னுட்டாங்க. இது நடந்த கொஞ்ச நாள்லயே '12பி' படத்துல முக்கிய கதாபாத்திரத்துல நடிக்கிறதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைச்சது. இந்தப் படத்துக்கப்புறம் 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே' படம்,தொடர்ந்து இப்போ நான் 'லேசா லேசா' படம் வெளிவருவதற்காக காத்துக்கிட்டிருக்கேன்.
இப்போது உங்களுக்குக் கிடைத்திருக்கும் நட்சத்திர அந்தஸ்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நட்சத்திர அந்தஸ்து கிடைச்சிருக்கிறது மிகப் பெரிய விஷயம். தமிழ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளபட்டிருக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த அந்தஸ்துக்கே உரிய சில குறைபாடுகளையும் சந்திக்க வேண்டியிருக்கு. என்னால சுதந்திரமா வெளியே போய் என்னோட சொந்த வேலைகளை என் விருப்பப்படி செய்ய முடியறதில்லை. ஆனா, பெங்களூர், மும்பை இடங்களிலெல்லாம் பொது இடங்களுக்கு என் விருப்பம்போல சுதந்திரமா போயிட்டு வருவேன்.
உங்கள் வெற்றியை குடும்பத்தார் எப்படி பிரதிபலித்தார்கள்?
நான் சினிமாவுல நடிக்கிறேன்னு சொன்னப்போ என் குடும்பத்துல யாருமே நம்பலை. அதிலேயும் ஜோதிகா, சிம்ரன் கூட ஜோடியா இரட்டை வேடத்துல நடிக்கிறேன்னு சொன்னப்போ சுத்தமா நம்பலை. எல்லாரும் கேலி பண்ணி சிரிச்சாங்க. 12பி படத்துல நான்தான் நடிச்சிருக்கேன்ங்கறதை நம்பறதுக்கு என் குடும்பத்தார்களுக்கு ரொம்ப நாளாச்சுது.
ஒவ்வொரு புதுப்படம் வெளியாகும்போதும் ஒரு நடிகரா உங்க மனநிலை எப்படி இருக்கும்?
பொதுவா நான் எப்பவுமே ஏதாவது வேலை செய்துக்கிட்டே இருக்கணும்னு நினைக்கிறது என்னோட குணம். அதுவுமில்லாம நான் செய்ற எல்லா வேலைகளையும் ரசிச்சு சந்தோஷமா செய்வேன். அதனால எனக்கு அந்த வேலையோட பளுவே தெரியாது. நம்ம அனுவபம் வளர வளர, நம் ரசிகர்களோட எதிர்பார்ப்பும் வளருது. அதனால புதுமுகமா இருந்தப்போ செய்த சில தவறுகளைத் திரும்பத் திரும்ப செய்ய முடியாது. அதனால ஒவ்வொரு புதுப்படம் வெளியாகும்போதும் அந்தப் படத்துக்குக் கூடுதலா உழைக்கணும்ங்கறது என்னோட பாலிசி.
யாரோடு ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்று பிரியப்படுகிறீர்கள்?
அப்படி யாரையும் குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை. ஆனால், ஜோதிகா மற்றும் சிம்ரனோடு நடித்த அனுபவம் மறக்கவே முடியாதது. இரண்டு பேருமே இந்தத் துறையில கைதேர்ந்தவங்களா இருக்காங்க. ஒத்திகையே இல்லாமல் நேரடியா கேமரா முன்னாலே அற்புதமா நடிக்கிறாங்க.
எந்தமாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க நீங்கள் விரும்புகிறீர்கள்?
'ரங்கீலா' படத்தில் அமீர்கான் நடித்த கதாபாத்திரமும், 'சத்யா' படத்தில் மனோஜ் பாஜ்பாய் நடித்த கதாபாத்திரமும் எனக்கு ரொம்ப பிடிச்சது. இந்தமாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சதுன்னா மறுப்பு சொல்லாம உடனே ஒத்துக்குவேன். என்னைப் பொறுத்தவரைக்கும் பணம் பெரிசில்லை. மனசுக்குப்பிடிச்ச கதாபாத்திரத்தை முழுமனசோட ஒன்றி நடிக்கணும்ங்கறதுதான் என்னோட விருப்பம்.
இந்தக் காலத்துல சினிமாத்துறையில் இருக்கக் கூடிய ட்ரெண்ட் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இது ரொம்பவும் அற்புதமான விஷயம். புதுப்புது எண்ணங்கள், கற்பனைகள், எல்லாமே இந்தத் துறைக்கு வரவேற்கத்தக்கதா இருக்கு. இப்போதைய படங்களில் இருக்கும் இயல்பான விஷயங்கள், ரசிகர்களுக்கு விதவிதமான பொழுதுபோக்கா அமையுது. இதுமாதிரி வித்தியாசமான கதைகளில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சதுன்னா நிச்சயமா அதை நான் ரொம்பவே விரும்பறேன்.
தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பதில் ரசிகர்களுக்கு என்ன தொந்தரவு என்று நினைக்கிறீர்கள்?
இந்த நாட்களில் மக்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மிகவும் உணர்வுள்ளவர்களாக இருக்கிறார்கள். கொடுக்கும் பணத்திற்கு சரியான பொழுதுபோக்கை எதிர்பார்க்கிறார்கள். திருட்டு சி.டி.க்கள் மட்டும்தான் மக்கள் தியேட்டருக்கு வராததற்குக் காரணம்னு சொல்லிட முடியாது. நல்ல திரைப்படங்களுக்குப் பஞ்சம் இருப்பதால்தான் மக்கள் தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பதை விரும்புவதில்லைன்னு நான் நினைக்கிறேன்.
உங்களுடைய அடுத்தடுத்த படங்கள் என்னென்ன?
ப்ரியதர்ஷன் இயக்கும் 'லேசா லேசா' படத்தில் த்ரிஷாவோடு ஜோடி சேர்ந்து நடிக்கிறேன். குடும்பப் பொழுதுபோக்குத்திரைப்படம் 'அன்பே அன்பே' மற்றும் ஜீவா இயக்கத்தில் 'பெப்சி' ஆகிய படங்களில் நடிக்கிறேன். 2004ல் பாலிவுட்டில் அறிமுகமா வேன்னு நினைக்கிறேன். ஒட்டுமொத்தமா இதுவரைக்கும் எல்லாமே நல்லதா நடந்திட்டிருக்கு.
கடைசி கேள்வி... உங்க கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?
ரொம்பப் பிரம்மாதமா இருக்கு. முக்கியமா, நீண்ட நாட்களா உங்களுக்கு உண்மையான தோழியா, உங்களை விடவும் உங்களை நல்லா புரிஞ்சுவைச்சிருக்குற ஒருத்தரோட வாழறது நிஜமாவே சந்தோஷமாத்தான் இருக்கும் இல்லியா!
சந்திப்பு: மேகனா திலீப் எழுத்து: க. காந்திமதி |