முதிய, புதிய தலைமுறை. தமிழ்ப் புத்தாண்டில் பாலம் அமைப்போம்
(சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் முயற்சி) தலைமுறைக்குத் தலைமுறை எண்ணங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் வேறுபடுகின்றன. நடை, உடை, உணவு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் எல்லாமே மாறுகின்றன. எதைச் செய்யக்கூடாதென்று முதியவர்கள் சொல்கிறார் களோ அதைச் செய்வது இளைய தலைமுறைக்கு வழக்கமாகிவிட்டது. ஒரு வகையில் இளைய இரத்தங்கள் முதிய தலைமுறையின் மூடத்தனத்தை எதிர்த்ததால் பெண் விடுதலை, விதவை மறுமணம், தீண்டாமை ஒழிப்பு என்று பல புரட்சிகள் தோன்றியிருக்கின்றன. நம் பெற்றோர்கள் நம்மைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஏக்கம் ஒருபுறம்; நம் பிள்ளைகள் நாம் சொல்வதைக் கேட்க மறுக்கிறார்களே என்ற வருத்தம் இன்னொரு புறம்.

சனிக்கிழமை உடுப்பி ஹோட்டல், ஞாயிற்றுக் கிழமை லிவர்மூர் கோவில் என்று பெற்றோர் போக விரும்பினால், வீக் எண்டில் ஸ்லீப் ஓவர், சாப்பிட சீஸ் சலூப்பா, காதில் எப்போதும் டெலிபோன் அல்லது சி.டி. பிளேயர்...இப்படி விரும்புகிறது இளைய தலைமுறை. நம் குழந்தைகள் தமிழ் பேசவில்லையே என்று சிலர் ஏங்கித் தவிக்கிறோம். பாட்டு, பரதம், தமிழ், ஸ்லோகம் என்று குழந்தைகள் மேல் திணிக்கின்றோம்.

வீட்டில் இந்தியக் கலாச்சாரம், பள்ளியில் அமெரிக்கக் கலாச்சாரம் என்று பிள்ளைகள் குழம்புகின்றனரா? நம்மைப் பற்றியும், நமது தமிழ் கலாச்சாரத்தைப் பற்றியும் இளைய தலைமுறையின் எண்ணங்கள் என்ன? ஹிப் ஹாப் தெரியாத நாமும், இளையராஜா தெரியாத அவர்களும் எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது? இந்தத் தலைமுறை இடைவெளிப்போராட்டத்திற்குத் தீர்வு என்ன?

இக்கருவைக் கருத்தில் கொண்டு சான்·பிரான்சிஸ்கோ தமிழ் மன்றம் தமிழ்ப் புத்தாண்டு விழாவை வசந்த விழாவாகக் கொண்டாடவிருக்கிறது. நடனம், பாடல்கள், ஓரங்க நாடகம் என்று இளைய தலைமுறை தங்கள் திறமைகளைக் காட்டி அசத்த இருக்கிறார்கள். தலைமுறைப் பிளவைப் பற்றி முதிய தலைமுறையும், புதிய தலைமுறையும் சுடச்சுட விவாதிக்கப் போகிறார்கள். தமிழ் மன்ற உறுப்பினர்களின் பாட்லக் மதிய உணவுடன் ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சி, இளைய தலைமுறையைக் கவரும் டி.ஜே. இசையுடன் நிறைவு பெறும்.

யூனியன் சிட்டியில் உள்ள ஜேம்ஸ் லோகன் உயர் நிலைப் பள்ளியில், ஏப்ரல் 19ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்நிகழ்ச்சி துவங்கும். முதிய தலைமுறையும், இளைய தலைமுறையும் இணைந்து பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சி இது. இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள, மற்ற தலைமுறையைப் புரிந்து கொள்ள இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

ஜேம்ஸ் லோகன் உயர் நிலைப் பள்ளியின் விலாசம்: 1800 எச் ஸ்ட்ரீட், யூனியன் சிட்டி, கலிபோர்னியா 94587. தொலைபேசி: 510-471-2520.

இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளவோ, மேலும் விவரம் தெரிந்து கொள்ளவோ விருப்பம் உள்ளவர்கள் president@bayareatamilmanram.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். நிகழ்ச்சி பற்றிய விவரங்களை, www.bayareatamilmanram.org என்ற வலைத்தளத்தில் காணலாம்.

சிவா சேஷப்பன்

© TamilOnline.com