பல்லவி சித்தார்த் கச்சேரி
கச்சேரியில் பாடுவதென்பது இசைத்துறையில் நான் தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று உலகுக்கு அறிவிக்கும் கோஷம் என்று நீங்கள் எண்ணியிருந்தால் அந்த எண்ணத்தை இன்றோடு மாற்றிக் கொள்ளுங்கள். இசைப் பணியில் நாங்கள் காலடி எடுத்து வைத்துள்ளோம். இப்பயணத்தில் பங்கெடுக்க ஆர்வம் இருந்தால் வாருங்கள், நாம் கைகோர்த்து செல்லலாம் என்ற அடக்கமான அழைப்பின் வெளிப்பாடுதான் கச்சேரி!

கடந்த பிப்ரவரி 22ஆம்தேதி, சனிக்கிழமை மாலை ஸாண்டா க்ளாரா கன்வென்ஷன் சென்டரில் நடந்த பல்லவி ஸ்ரீராம், சித்தார்த் ஸ்ரீராமின் கர்நாடக இசைக் கச்சேரியின் போது மேலே சொல்லியிருக்கும் உணர்வுதான் எல்லாரிடத்திலும் பரவியது.

15 வயதே ஆகும் பல்லவியும், 12 வயதே ஆகும் சித்தார்த்தும், ஸ்ரீராம்-லதா தம்பதியினரின் குழந்தைகள். இவர்களது குடும்பமே இசைக் குடும்பம்தான். இந்தச் சின்னக் குழந்தைகளின் கச்சேரியை ரசிக்க அரங்கமே நிரம்பி வழிந்தது. பல்லவி, சித்தார்த் இருவருமே, இவர்களது அம்மா லதா நடத்தும் லலிதகான வித்யாலயா நிகழ்ச்சிகள், க்ளிஸ்லேன்டில் நடந்த தியாகராஜ ஆராதனை விழா, சென்னையில் நடக்கும் டிசம்பர் கச்சேரி என்று பல நிகழ்ச்சிகள் மூலம் கர்நாடக இசைப் பிரியர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் தான்.

காஞ்சி மாமுனிவர் திரு சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் பற்றி, ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸவாமிகள் அருளிய ''ஸ்ருதி ஸ்ருதி'' என்ற ஸ்லோகத்தோடு நிகழ்ச்சி ஆரம்பித்தது. கர்நாடக இசை முறைப்படி பேஹாக் ராகத்தில் வர்ணம் அடுத்து பாடப்பட்டது. அதையடுத்து 'பரிபாஹி' என்று தொடங்கிய ஸ்வாதித்திருநாளின் விநாயகர் மீதான ஸாவேரி ராகக் க்ருதி காவேரியாகப் பெருக்கெடுத்து ஓடியது.

பாடல்களும், ராகங்களும் தேர்ந்தெடுத்த பாங்கும், அவற்றை வரிசைப் படுத்திய விதமும் கட்டாயம் பாராட்டப்பட வேண்டியவை. 'தினமணி' என்ற மத்யமகால (வேகமான) ஹரிகாம்போஜி க்ருதி; உடனடியாக ஆனந்த பைரவியில் ''ஓ ஜகதாம்பா'' என்ற செளககால (நிதானமான) க்ருதி; அடுத்து ''ஸரஸ ஸாம தான'' என்ற காபி நாராயணி ராகத்தில் அமைந்த தியாகராஜர் க்ருதி; இப்படி கச்சேரி சலிப்பூட்டாத வகையில் அற்புதமாக அமைக்கப்பட்டு இருந்தது.

சித்தார்த்தின் காம்போஜி ராக ஆலாபனையும், பல்லவியின் பந்துவராளி ராக ஆலாபனையும் கச்சேரியின் மிகச் சிறப்பான அம்சங்கள். இவர்கள் இருவரின் குரலில் இருந்த நிதானமும், அலட்டிக் கொள்ளாமல் பாடும் பாங்கும், பாடுவதில் இருந்த தன்னம்பிக்கையும், ராகத்தைக் கையாளும் திறனும் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தன.

பல புகழ்பெற்ற வித்வான்களுக்கு பக்கவாத்தியம் இசைத்திருக்கும் திரு நாராயணனும், திருமதி சாந்தியும் துளி கர்வம் கூட இல்லாமல் இந்தக் குழந்தைகளுக்கு ஈடுகொடுத்து கச்சேரியில் பக்க வாத்தியம் செய்த விதம் மிக அருமை.

இரண்டு மணி நேரம் போனதே தெரியாத வண்ணம் விறுவிறுப்பாக நடந்த இந்த இசைக் கச்சேரி, வேதங்களின் ராகமான ரேவதி ராகத்தில் ஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் இயற்றிய ''போ சம்போ'' என்ற பாட்டோடு முடிவுக்கு வந்தது.

இசை விருந்து அளித்த பல்லவியும் சித்தார்த்தும் இசையில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்கள் அல்ல. பல்லவியின் நடன அரங்கேற்றம் செப்டம்பர் மாதம் நடக்கப் போகிறது. பல்லவி, சித்தார்த் இருவரின் வரைகலைக் கண்காட்சி இன்னும் சில மாதங்களில் நடக்கப்போகிறது. சித்தார்த் கூடைப்பந்து மற்றும் கால்பந்து இரண்டு விளையாட்டுகளிலும் தேர்ச்சி பெற்றவன். இவ்விருவரும் விடுமுறை நாட்களில் ஏழு மணி நேர வாய்ப்பாட்டுப் பயிற்சியும், பள்ளி நாட்களில் சுமார் இரண்டு மணி நேரப் பயிற்சியும் செய்கிறார்கள்.

© TamilOnline.com