உயரும் உலக வெப்பம்
இந்த பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பம் கடந்த நூறு ஆண்டுகளில் ஒரு டிகிரி பாரன்ஹீட் உயர்ந்திருக்கிறது. குறிப்பாக கடந்த முப்பது ஆண்டுகளில், இந்த உயற்சியின் விகிதம், மற்ற ஆண்டுகளை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது. வெப்பத்தை உள்ளிழுக்கும் வாயுக்களும் எரியும் காடுகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்தகைய வாயுக்களை மனிதன் தனது தொழில் நுட்ப வளர்ச்சியில் விளைவுகளையறியாமல் உருவாக்குகிறான் என்பதும், இத்தகைய வாயுக்கள் மனித நடவடிக்கைகளில் உருவாகும் வெப்பத்தையும், சூரிய வெப்பத்தையும் பூமியின் வான் வெளியிலிருந்து வெளியேறவிடாமல், உள்ளிருக்கச் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக பூமியின் வெப்பத்தை உயர்த்திக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறது ஆராய்ச்சிகளின் முடிவு.

இந்த முடிவுகள் இன்னும் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், கலிபோர்னியாவில் ஆரம்பித்த அக்னி காற்று, அட்லாண்டிக் கரைவரை ஏற்படுத்திய சூடு, ஒவ்வொரு மாநிலமாக பழைய வெப்பப் பதிவுகளை அது தகர்த்தவிதம், மத்திய மேற்கு மாநிலங்களில் வெப்பத்தால் மாண்ட மனிதர்களின் அளவு, இவை ஒரு புறமிருக்க மறுபுறம் அளவுக்கு அதிகமான மழை பெறும் இடங்கள் என மாறிவரும் உலக தட்ப வெப்பநிலையை உணரச்செய்ததை மறுக்க முடியாது.

மனிதன் எந்த ஒரு அறிவியல் ஆராய்ச்சியையும் முதலில் பணமாக மாற்றும் திறமை பெற்றவன். இந்த ஆராய்ச்சியிலும் இது நடை பெறுவதில் ஆச்சரியமில்லை. உயரும் உலக வெப்பத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படங்களைத்தான் குறிப்பிடுகிறேன். லாஸ் ஏஞ்சலஸில் சூறைக்காற்றும், புதுடில்லியில் பனிப்புயலும், டோ க்கியோவில் ஆரஞ்சுப் பழ அளவு ஆலங்கட்டியும், நியூயார்க்கில் ஒரே நாளில் மிக அதிக வெப்பமும் உறை பனிக்குளிரும் இத்திரைப்படங்களால் தோற்றுவிக்கப்பட்டவை. மக்களிடம் பொது அறிவை ஏற்படுத்துவதைவிட, விளைவுகளை விரைவாக மிகைப்படுத்தி, பயத்தை தோற்றுவிப்பது மட்டுமே இவற்றின் குறிக்கோளோ எனத் தோன்றச் செய்யுமளவிற்கு இருக்கிறது வியாபர நோக்கம். மரத்தால் செய்யப்பட்ட மாபெரும் பூதச்சிலை அம்மரத்தை மறைத்துவிடும் நிலை நினைவுக்கு வருகிறது இப்படங்களைப் பார்க்கும் போது.

சென்ற மாதம் உலகின் கவனம் ஏறக்குறைய மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் லெபனானில் பதிந்திருந்த சமயம், கலிபோர்னியாவில், மிக முக்கியமான இவ்வுலகைக் காக்கவல்ல தீர்மானம் ஒன்றில் இங்கிலாந்து பிரதம மந்திரி டோ னி ப்ளேயரும், கலிபோர்னியா கவர்னர் ஆர்னால்ட் ஷ்வார்ஸனக்கரும் கருத்தொருமித்தனர். அதன்படி, எரிபொருள்களை எரிக்கும் போது ஏற்படக்கூடிய மாசுக்களைத் தவிர்க்கக்கூடிய முறையில் எரிக்கும் வழிகளை ஆராய்வதில் ஒத்துழைப்பும் அதற்கான சட்டங்களை உருவாக்குவதில் ஒருமித்த சிந்தனையும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இத்தகைய முயற்சியை வரவேற்போம்.

ஆராய்ச்சிகளின் முடிவினாலோ அல்லது திரைப்படங்கள் ஏற்படுத்தும் பயத்தினாலோ மனிதன் தன்னுடைய வாழும் முறையை மாற்றிக் கொள்ளப் போகிறானா? உலக வெப்பத்தை மேலும் மேலும் உயரச்செய்வதற்கு பரிகாரமாக மரங்களை நடுவது பலனளிக்கப் போகிறதா? நிலத் தகராறிலும், மதச்சண்டையிலுமே எண்ணம் பதித்திருக்கும் மானிட வர்க்கத்தை சுற்றுச் சூழல் சட்டங்கள் எழுப்பப்போகின்றனவா? தலைக்கு மேல் போவதற்கு முன் விழிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.

மீண்டும் சந்திக்கும் வரை,
சிவகுமார் நடராஜன்
செப்டம்பர் 2006

© TamilOnline.com