விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கிய மலரமைக்கும் போட்டி
''மலர்களிலே பல நிறம் கண்டேன் - அதில்
விரிகுடாத் தமிழ்மக்களின் திறம் கண்டேன்''

கண்ணதாசன் உயிரோடிருந்தால், கடந்த பிப்ரவரி 23ஆம் தேதியன்று விரிகுடாப்பகுதியில் நடந்த மலரமைப்புப் போட்டியைப் பற்றி நிச்சயம் இப்படிப் பாடியிருப்பார். ஒவ்வொருவருடமும் ஊட்டியில் நடைபெறும் உலகப் பிரசித்தி பெற்ற மலர்க் கண்காட்சிக்கு இணையாக மிக அற்புதமாக அமைத்திருந்தார்கள்.

மம்ஸ், டாலியாஸ், ஆர்சிட்ஸ், ட்யூலிப்ஸ், மல்லிகை வகைகள், ரோஜா வகைகள், செம்பருத்தி போன்ற பலவித மலர்களைப் பயன்படுத்தி தங்கள் கற்பனைத் திறனை நிரூபித்திருந்தார்கள் போட்டியில் கலந்து கொண்டவர்கள்.

காலத்துக்கேற்றபடி, உலக அமைதியை வலியுறுத்தி, ஏவுகணையிலிருந்து குண்டுகளுக்குப் பதிலாக மலர்கள் பொழிவது போல் அமைத்திருந்த காட்சி மிக அற்புதமாக இருந்தது. மலர்களால் வடிவமைத்த ரங்கோலியின் அழகு மனதைக் கொள்ளை கொண்டு போனது. நடுவர் என்று யாரையும் தனியாக நியமிக்காமல் பார்வையாளர்களையே நடுவர்களாக வைத்து வெற்றி பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்தது வித்தியாசமான முயற்சி.

நான்கு வண்ணத்துப்பூச்சிகளுக்குப் பூக்களால் உயிர் கொடுத்து சிறகடிக்க வைத்திருந்த ராம்கி, வசந்தி குழுவினருக்கு முதல்பரிசும், கள்ளம் கபடம் இல்லாத சிறுமியின் கையில் மலர்க்கொத்து சிரிப்பதுபோல் அமைத்திருந்த சுனந்தா அரசு, காயத்ரி ஞானசிவம் குழுவினருக்கு இரண்டாவது பரிசும், வளைகுடாவையும், தமிழ்நாட்டையும் பூக்களால் இணைத்துப் புரட்சி செய்த கெளரி சேஷாத்ரி, அபிராமி குழுவினருக்கு மூன்றாவது பரிசும் வழங்கினார்கள் பார்வையாளர்கள். வயது வித்தியாசமின்றி சிறுமிகளும் இந்தப் போட்டியில் ஊக்கத்தோடு கலந்து கொண்டது நிச்சயம் பாராட்டுக்குரியது.

மலரமைப்புப் போட்டி ஒரு புறமென்றால், இன்னொரு புறம் பார்வையாளர்களை மகிழ்விக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்துடன் பல்சுவை நிகழ்ச்சி தொடங்கியது. ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா தொகுத்து வழங்கிய 'வாய்விட்டு சிரி' நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதியவர்கள் என்று சகல வயதினரும் கலந்து கொண்டு விதவிதமான நகைச்சுவைகளைச் சொல்லிச் சிரித்து மகிழ்ந்தார்கள். அதைத் தொடர்ந்து, பழைய கர்ணன் படத்தில் இடம்பெற்ற ''மழைகொடுக்கும் குடையும்'' பாடலில் தொடங்கி, சமீபத்தில் வெளியான ''வசீகரா'' பாடல் வரை பல வித்தியாசமான பாடல்களைப் பாடி ஸ்ரீதரன் மைனர் கரயோக்கி நிகழ்ச்சி நடித்தினார்.

கமலஹாசன், ரஜினிகாந்த், பாலையா போன்ற பெரிய நடிகர்கள் கார்த்திகேயனின் மிமிக்ரி மூலம் பார்வையாளர்களுக்குத் தரிசனம் தந்தார்கள். இந்த மிமிக்ரி நிகழ்ச்சியில்,பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் பேசும் வசனத்தை மாற்றி தற்கால H-1 விசாவில் தவிக்கும் கணினிப் பொறியாளர் பேசுவது போல் அமைத்திருந்தது மிகவும் வரவேற்பைப் பெற்றது. மிகவும் தரமான நிகழ்ச்சிகளைத் தமிழ் மக்களை மகிழ்விக்கும் நோக்கோடும் அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து ஊக்கப்படுத்தும் முயற்சியோடும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

லதா ஸ்ரீனிவாசன்

© TamilOnline.com