தமிழ்நாடு அறக்கட்டளை என்றொரு அகல்விளக்கு!
என்றோ கால்களில் வாங்கிக் கொண்ட நீருக்காக விழிகளின் மூலம் கோடிகோடியாய் நன்றி சொல்லுகிறதே தென்னையும் வாழையும் அந்தத் தென்னையையும் வாழையையும் ஒத்ததே தமிழ்நாடு அறக்கட்டளையும் அதன் தீர்க்க தரிசனமான திட்டங்களும். தமிழ் மண்ணில் நாமெல்லாம் வேராய் இருந்த நாளில் நீருண்டோம், உரமும் பெற்றோம்... இன்று இம் மண்ணில் இதுபோலும் வேற்று மண்ணில் கிளைகளாய், விழுதுகளாய்ப் படர்ந்து கனி தரும் நிலையிலிருக்கும் நாம், நம்மை வளர்த்து ஆளாக்கிய தமிழ் மண்ணுக்கு நம்மால் ஆனது ஏதேனும் செய்திட வேண்டும் என்னும் ஓர் நீண்ட தொலை நோக்கோடு இன்றைக்கு ஓர் கால் நூற்றாண்டுக்கு முன்னர் ஒரு சில நன்னெஞ்சங்களிலிருந்து உதித்ததே தமிழ்நாடு அறக்கட்டளை.
இதனுடைய ஒப்புயர்வற்ற நோக்கங்களில் முதன்மையானது ''வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை'' என்பதாகும். தமிழ் நாட்டில் ஏழை, எளிய மாணவர்களின் உயர் கல்விக்கு சொல்லும், செயலும், பொருளும் வழங்கி ஊக்குவித்தல், மன வளர்ச்சி குன்றியோர், உடல் ஊனமுற்றோர் மற்றும் ''கோரிக்கையற்றுக் கிடக்கும்'' எத்தனையோ விதவைப் பெண்டிருக்கு உதவுதல். தமிழுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தன் இன்னுயிரை ஈர்ந்துவக்கும் இலட்சியவாதிகளை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுதல், சேதி ஏதும் சொல்லாமலே தமிழகத்தில் வந்து நிற்கும் புயல், வெள்ளம், வறட்சி, பஞ்சம் இன்ன பிற துயர்களினாலே வரும் வேதனைக் கண்ணீரை ஓரளவேனும் துடைத்தல், பல துறைகளில் சிறந்து விளங்கும் இளையதலைமுறைக்கு இன்னும் உயர்ந்து செல்ல வழி காட்டல். திக்கெட்டும் சென்று பெற்ற சீர்மிகு அறிவினை, மருத்துவம் , பொறியியல் மற்றும் கணிப்பொறி நுட்பங்களை தமிழுக்கு இறக்குமதி செய்தல்... என்று இது போலும் எண்ணிறந்த இலட்சிய தாகங்களோடு செயல்பட்டு வருவது தமிழ்நாடு அறக்கட்டளை.
அறக்கட்டளை பெரும் மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நேரமிது. சென்னையில் அறக் கட்டளையின் சார்பில் இயங்கிவரும் Technology Centerன் வியப்புறத் தக்க வளர்ச்சி, இங்கு தமிழ் மக்களிடையே அறக்கட்டளை பற்றிய விழிப்புணர்ச்சி... இதுபோலும் காரணங்களால் பீடு நடைபோடும் இவ்வியக்கம் தன்னுடய குறிக் கோள்களிலிருந்து விலகிவிடாமல் வளரவேண்டிய தருணமிது. அதில் அறக்கட்டளையின் செயற்குழு ஆற்றிட வேண்டிய பணிகள் பல.
இங்கு வரப்பு மேட்டில், குடையைப் பிடித்துக் கொண்டு மணியம் செய்வதற்கும், குறைகளைச் சொல்லிச் சொல்லி குட்டு போட்டுக் கொண்டிருப்பதற்கும் ஆட்கள் தேவையில்லை. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, வயலில் இறங்கி, வெயிலென்றும் மழையென்றும் பாராது உழைத்திட உறுதி கொண்டோர் வருக.
அன்று பாரதி சொன்னான்...
''நீதி நெறியில் நின்று பிறர்க்குதவும் நேர்மையில் மேலோர்'' நீவீர் வருக!
பாரதி வழியில் இன்று டாக்டர் வா.செ. குழந்தைசாமி சொல்லும் வரிகள் இதோ..
''நிதம் மேற்செல்லும் பயணம் விழைகின்றார் வருக! இவன் வீண் சமைபோர் வருக!''
இக்கருத்தினை நெஞ்சில் கொண்டு தமிழ் நாடு அறக்கட்டளை இந்த அமெரிக்க மண்ணின் தென் கோடியில் நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற ஓர்லாண்டோ மாநகரில் வருகின்ற ஜூலை நாலாம் நாள் தொடங்கி ஆறாம்நாள் வரை ஏற்ற மிகு தமிழ் விழாவினைக் கொண்டாடுவதில் பெருமையுருகிறது. இவ்விழாவின் போது சாகித்ய விருது பெற்றிட்ட சிந்தனை எழுத்தாளர் திரு.சு. சமுத்திரம், அகில இலங்கை கம்பன் கழகத்தை தோற்றுவித்த திரு இலங்கை ஜெயராஜ் போன்றோரின் இனிய தமிழுரை உண்டு.
திரு.சோ.சோ.மீ.சுந்தரம் அவர்களின் தலைமையில் கவியரங்குண்டு. திருமதி. சரசுவதி இராமநாதன் அவர்கள் தலைமையிலான பட்டி மன்றமுண்டு. " இனி வருங்காலம் இளைஞர் கையில்" என எடுத்துரைத்திட சோமலெ.சோம சுந்தரம் வழங்கிடும் குழந்தைகளுக்கான புதுமைப் பட்டிமன்றமுண்டு.
திருச்சி கலைக் காவிரி கல்லூரி மாணவியரின் நாட்டிய நாடகமுண்டு. திரைப்பட நடிகை செல்வி மீனா அவர்கள் தொகுத்து வழங்கிட 'மின்னலே..!' திரைப்படப் புகழ் செல்வி மதுமிதா மணி செல்வி சாருலதா மணி ஆகியோரின் இன்னிசை விருந்துண்டு.
இன்னும் அறக்கட்டளையின் தலைவரும் தொழில் வல்லுநருமான திரு. ராம் துக்காராம் வழங்கிடும் கருத்தரங்கு, திருமதி வள்ளி சுப்ரமணியம் அவர்கள் தலைமையில் மருத்துவத் தொழிற் பட்டறை (CME Workshop), திரு. லேனா கண்ணப்பன் குழந்தைகளுக்கென வழங்கிடும் கணினி வகுப்பு இன்ன பிற எண்ணற்ற சிறப்புகளும் அங்குண்டு.
கண்டு மகிழ ஓர்லாண்டோ ஊருண்டு. பல நாளாய்ப் பார்த்திடாத எத்தனையோ பேருண்டு. அவரோடு அளவளாவிட, உண்டு, உண்டு மகிழ உணவுண்டு. உங்கள் உள்ளம் மகிழப் பணி புரிவோருண்டு.
தமிழ் நாடு அறக்கட்டளை - தமிழ் விழா-2003 குறித்த விளக்கங்களுக்கு www.tco2003.com வலைத் தளத்தில் வலை விரித்திடுக!
மேலும் விபரங்கள் வேண்டுமெனில் விழாக் குழுத் தலைவர் டாக்டர் சொக்கலிங்கம் MD அவர்களை தொலைபேசி எண் 863-385-5538 அல்லது tnfconvention2003@hotmail.com எனும் மின்னஞ்சல் வழியாகவோ அணுகிடுக!
முனைவர் திருமதி பரிமளா நாதன் அவர்களை vsp1947@aol.com எனும் மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளுக!
கண்டு, கேட்டு, உய்த்து, உண்டு மகிழ்ந்திட அறக்கட்டளை வழங்கிடும் தமிழ் திருவிழா-2003 அரியதோர் வாய்ப்பு. என்றாலும், இவ்விழாவின் ஒப்பரிய நோக்கம் - தமிழ்த் திரு நாடுதன்னில் எண்ணற்ற ஏழையர் கல்விக் கண்ணற்ற சேய் போல் கலங்கிடாதிருக்க..., திசை தெரியாது திகைத்து நிற்கும் விதவைப் பெண்டிருக்கு வழி காட்டிட...., இன்னபிற நற்காரியங்களுக்கான பொருள் ஈட்டுவதேயாகும்.
டாக்டர் சொக்கலிங்கம் அவர்களின் இயக்கத்தில் அறக்கட்டளை எடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேள்விக்கு "கை கோர்ப்போம், கை கொடுப்போம்!" |