சிலிக்கன் வேல்லியின் பரபரப்பான வாழ்க்கையிலும் ஊடுருவியிருக்கிறது ஒரு புதிய புத்தகம். “சோதனையின் கொம்பொடித்துச் சாதனையாக்குவோம்” என்ற மனப்பான்மை கொண்ட மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. போ பிரான்சன் (Po Bronson) எழுதிய “வாழ்வில் எதைச் சாதிக்கப் போகிறேன்?” (What Should I Do With My Life?) என்ற நூல். புத்தனும் போதிமரமும் கற்பிக்காத தத்துவம் எதையும் இவர் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், வாழ்வின் பொருள் என்னவென்று ஆழமாகச் சிந்தித்துத் தம் வாழ்க்கையை மாற்றிக் கொண்ட துணிச்சல்காரர்கள் பலரை நேரில் பார்த்துப் பேசி அவர்களது அனுபவங்களைத் திரட்டிக் கொடுத்திருக்கிறார். இவர்களில் பலருக்குத் திடீரென்று தோன்றிய ஞானோதயத்தின் விளைவு இல்லை இது. எது வாழ்வுக்கு நிறைவு தரும் என்பது அவரவரைப் பொறுத்தது. ஆனால், இந்த நூலின் சில தீர்ப்புகள் வியப்பளிப்பவை.
கனவுகள் நனவாகப் பணம் தேவையில்லை. தேவையான செல்வம் திரட்டி விட்ட பிறகு மனதுக்கு நிறைவு தரும் தொண்டு செய்வோம் என்று எண்ணுபவர்களின் பொருள் ஈட்டும் முயற்சியில் பல கனவுகள் அடிபட்டுப் போகின்றன. புத்திக் கூர்மையும், விடா முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்னும் சிலிகன் வேல்லி நம்பிக்கைக்கும் ஆதாரம் இல்லை என்கிறார். (www.pobronson.com).
ஈராக் போரை நேரடி ஒளிபரப்பில் காட்டுகிறார்கள். மக்கள் நிறைந்திருக்கும் நகரைக் கொடுமையான ஆயுதங்கள் தாக்கும்போது, சங்கடமாய் இருக்கிறது. என்னதான் நுட்பமாகக் குறி வைத்துத் தாக்குவதாகச் சொன்னாலும், குண்டு வீச்சில் அப்பாவி மக்கள் என்ன பாடு படுகிறார்களோ என்று மனம் பரிதவிக்கிறது. போர் நெருங்க நெருங்க, கர்ப்பிணிப் பெண்கள் சிசேரியன் சிகிச்சையில் குழந்தை பெற்றுக் கொள்ள வரிசையில் நின்றார்களாம். தீபாவளிப் பட்டாசு கொளுத்துவது போல், நான்கே நாட்களில் ஆயிரம் ஏவு கணைகளை ஏவியிருக்கிறது அமெரிக்கப் படை. 1991-ல் 43 நாளில் 350 ஏவுகணைகளைத்தான் ஏவினார்களாம். ஒவ்வொரு ஏவுகணையும் 1 மில்லியன் டாலர். எல்லாம் நமது வரிப்பணத்தில் காட்டும் வாணவேடிக்கை.
கணினி வேலைகளெல்லாம் இந்தியாவுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கின்றன. மிகப் பெரும் நிறுவனங்கள் எல்லாம் தங்கள் இந்திய மையத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் வேலை செய்யும் பல இந்தியர்கள் ஊக்க ஊதியத்தோடு இந்திய மையத்துக்குப் போவதா, அல்லது வேலையை விட்டுப் போவதா என்று திணறிக் கொண்டு இருக்கிறார்கள். மென்கல உற்பத்தியில் இந்தியாவின் மலைக்கத் தக்க வளர்ச்சி உலகின் பொறாமையைத் தூண்டி விட்டிருக்கிறது. இந்தோனேசியாவில் இந்திய மென்கலத் தொழிலதிபர் ஒருவரைச் சிறையில் அடைத்தார்கள். கோலாலம்பூரில் வசதியான குடியிருப்பில் இருந்த நூற்றுக் கணக்கான இந்திய மென்கல வல்லுநர்களை (software experts) மலேசியக் காவல்துறையினர் பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்து கீழ்த்தரமாக நடத்தியிருக்கிறார்கள்.
வழக்கமாக வெளிநாடுகளில் இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டு ஏழை இந்தியர்கள் சவுக்கடி வாங்கும்போது சுரணை யில்லாமல் பல்லிளித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசு, இப்போது எப்படியோ கொதித்து எழுந் திருக்கிறது. மலேசியாவுடன் உள்ள பொருளாதார உறவுகள் இந்த நிகழ்ச்சியால் பாதிக்கப் படும் என்று எச்சரித்தது மட்டுமல்லாமல், மலேசிய ஹாக்கிப் போட்டியில் கலந்து கொள்ளச் செல்லவிருந்த இந்திய அணிக்கும் மலேசியா செல்ல அனுமதி மறுத்து விட்டது. காலில் கொதிநீர் கொட்டியது போல் இந்திய அரசு அலுவலர்கள் குதித்ததாலோ அல்லது பொதுப்பணித் துறையின் சாலைகள் அமைக்கும் ஒப்பந்தங்கள் ஊசலாடுவதாலோ, மலேசிய அதிகாரிகள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். மலேசியர்களை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அலட்சியப் படுத்திய போது அவர்களுக்குப் பாடம் கற்பித்த மலேசியா, இனி மேலாவது இந்தியர்களையும் மதித்து நடந்து கொள்ளும் என்று எதிர்பார்ப்போம்.
அதிகார அத்து மீறலில் மலேசிய அதிகாரிகளுக்கு இந்தியர்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்லர். டாட்டா கன்சல்டன்சியில் வேலை செய்யும் திருமதி கற்பகம் கலியபெருமாளை மும்பை விமான நிலையக் குடியேற்ற அதிகாரிகள் (immigration officers) அனாவசியமாக அலைக்கழித்திருக்கிறார்கள். சென்னையிலிருந்து மும்பை வழியாக அமெரிக்கா திரும்பிக் கொண்டிருந்த இவரிடம் இந்தியில் கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். தங்களுக்கு இந்தி தெரியாது, அதனால் ஆங்கிலத்தில் கேளுங்கள் என்று அவரும் அவர் கணவர் சாமிநாதனும் கேட்டுக் கொண்டபோதும், எரிச்சலுற்ற அதிகாரிகள் அவர்களை மேலதிகாரிகளிடம் கொண்டு போயிருக்கிறார்கள். அங்கேயும் தேவையற்ற பல கேள்விகள் தொடர்ந்திருக்கின்றன. இந்தி தெரியாததால் அலைக்கழிக்கிறீர்களா என்று கேட்ட சாமிநாதனிடம், இந்தி இந்தியாவின் தேசிய மொழி, இந்தியர் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய மொழி, இந்தி தெரிந்திருப்பதுதான் இந்தியன் என்பதற்கு அடையாளம் என்றெல்லாம் போதித்திருக் கிறார்கள். அப்படி இந்தி தெரியாவிட்டால், சென்னையிலேயே குடியேற்ற அலுவல்களை முடித்துக் கொள்வதுதானே என்றும் சொல்லியிருக்கிறார்கள். பெண் என்றும் பார்க்காமல் திருமதி கற்பகத்தை துருவித் துருவிக் கேள்விகள் கேட்டு நோகடித்திருக்கிறார்கள். கணவர் அருகில் இருந்தும் இதைத் தடுக்க முடியவில்லை. மலேசிய அதிகாரிகளின் அத்துமீறல் நடவடிக்கைகளைக் கண்டித்தது போல், இந்திய அரசு மும்பை விமான நிலைய அதிகாரிகளின் அத்து மீறல்களையும் கட்டுக்குக் கொண்டு வரவேண்டும். அதுவரை இந்தி தெரியாதவர்கள் மும்பை வழியாகப் பறப்பதைத் தவிர்க்க வேண்டியிருக்கும்.
கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போல கிரிக்கெட் திருவிழாவையும் இரவு முழுவதும் கண்விழித்துக் கொண்டாடுகிறார்கள் பல அமெரிக்க இந்தியர்கள். ‘காந்திநகர்’ என்று செல்லமாக அழைக்கப்படும் கலி·போர்னியாவின் சன்னிவேல் குடியிருப்புகளின் சமூக மையங்களில் கிரிக்கெட் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஈராக் போரைப் பற்றிக் கவலைப்படுகிறார்களோ இல்லையோ, கிரிக்கெட் ஸ்கோரைப் பற்றிக் கவலைப் படுகிறார்கள். உலகத்தின் தலைசிறந்த பேட்ஸ்மன் டெண்டுல்கர் துணையிருப்பதால் கோப்பையை வெல்ல முடியுமென்று இந்தியா நம்புகிறது. அவர்கள் கனவு நனவாகட்டும். ஈராக் போரிலும் நல்லோர் பிழைத்துத் தீயவர் மட்டுமே அவதிப்படட்டும். எல்லோருக்கும் எங்கள் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
மணி மு. மணிவண்ணன் |