திருட்டு வி.சி.டி.க்கு தீர்வு என்ன?
தமிழ் சினிமாவை அச்சுறுத்தி வரும் திருட்டு வி.சி.டி.க்களை எப்படி ஒழித்துக் கட்டவது என்ற சிந்தனையில் இப்போது சினிமா சார்ந்த அனைத்து சங்கங்களுமே ரொம்பவும் மும்முரமாக உள்ளன. முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து திருட்டு வி.சி.டி. திருடர்களுக்குக் கடும் தண்டனைகள் கொடுக்க வேண்டி வலியுறுத்த அத்தனை சங்கங்களும் முனைப்பாக இருக்கிறார்கள்.

இதற்கிடையே சங்கத்திற்கென்று தனியாக ஒரு சேனலைத் துவக்கலாம் என்பது தயாரிப்பாளர் சங்கத்தின் புது முயற்சி. இனிமேல் வரப்போகும் புதுப்படங்களை தங்களது சேனலிலேயே ஒளிபரப்பிக் கொள்வதுதான் தயாரிப்பாளர்களுடைய இந்த முயற்சியின் நோக்கம். அத்தோடு படம் ரிலீஸ் ஆகும்போதே அதன் வி.சி.டி. உரிமையையும் தந்துவிடலாம் என்றும், இதன் மூலம் கிடைக்கும் பணத்தைச் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு வழங்குவது என்றும் அதிரடி முடிவை தயாரிப்பாளர் சங்கத்தில் எடுத்திருக்கிறார்கள். இந்த முடிவினால் திருட்டு வி.சி.டி.க்கள் தடுக்கப்படும் என்றாலும், தியேட்டர் முதலாளிகள் மற்றும் விநியோகஸ்தர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். இதனால் இந்த முடிவை மறுபரிசீலணை செய்யும்படி விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

நிலைமை என்னவாகும்? சினிமாத்துறையில் உருவாகியிருக்கும் சண்டை எவ்வளவு தூரம் செல்லும்? பிரச்சனை எப்படித் தீர்க்கப்படும்? எல்லாமே வெறும் கேள்விக்குறியோடுதான் இருக்கிறது.

தொகுப்பு:யாமினி

© TamilOnline.com