கீதா பென்னெட் பக்கம்
இந்தப் பக்கத்தை எழுதுகிற சமயத்தில் ஆஸ்கார் விழாவைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். நடக்கப் போகிறதா இல்லை தள்ளிப் போடப்படுகிறதா என்பதை நீங்கள் இந்த தென்றல் வருவதற்குள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனாலும் இந்த நிமிடத்தில் நடக்கப் போவது தெரியவில்லை. வருடம் முழுவதும் தங்களுக்குப் போடப்படும் சிவப்பு கம்பளத்திற்காக காத்திருக்கும் நடிகர்கள் நடிகைகள் ஆஸ்கார் தினத்தன்று இல்லாமல் ஏமாற்றம் அடையலாம். ஏன் என்ற நான் உங்களுக்கு காரணம் சொல்ல வேண்டியதில்லை.

ஆஸ்கார் வாங்க வேண்டும் என்றால் அந்தப் படத்தில் என்னென்ன இருக்க வேண்டும் என்று விலாவாரியாக ஆராய்ச்சி பண்ணி எழுதப்பட்டிருந்த சமீபத்தில் படித்த கட்டுரை ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. கொஞ்சம் கேலி கலந்து இருந்தாலும் எடுத்துக் காட்டப்பட்டிருந்த உதாரணப் படங்களைப் பார்த்தால் நிச்சயமாக அந்த கட்டுரையை ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அவை என்னென்ன படம் ரொம்ப காலத்திற்கு முன்னால் நடந்ததாக இருக்க வேண்டும். வேறு நூற்றாண்டாக இருந்தால் இன்னும் விசேஷம். பாருங்களேன்! உதாரணத்திற்கு டைட்டானிக். இங்கிலீஷ் பேஷண்ட். சாக்கோலெட் இவையெல்லாம் ஆஸ்கார் வாங்கியவை. வேறு ஒரு கால கட்டமா? பரிசுகள் வாங்கி குவிக்க வாய்ப்புகள் உள்ளன.

படம் ரொம்பவே நீளமாக இருப்பது ஒரு ப்ளஸ் பாயிண்ட். இரண்டு இடைவேளைகள் கூட இருக்கலாம். ஷின்ட்லர்ஸ் லிஸ்ட், லை·ப் ஈஸ் பியூட்டி ·புல் போன்ற படங்களை நினைத்துப் பாருங்கள். இந்த வகையில் வாங்கிய ஆஸ்கார் படங்களின் லிஸ்டும் நீண்டுக் கொண்டே போகும்.

உச்சரிப்புகள் அதாவது 'ஆக்ஸென்ட்' மாற்றி பேச தெரிந்த கதாநாயகன் படத்திற்குத் தேவை. ரஸ்ஸல் க்ரோவின் திறமை வெளியில் கொண்டு வரப்பட்ட இட் ஈஸ் எ ப்யூட்டி·புல் மைண்ட் ஒரு உதாரணம். லட்டு மாதிரி ஆஸ்கார் வர வாய்ப்புகள் உண்டாம்.

படத்திற்கு ஹீரோ கடைசியில் இறந்துவிட வேண்டும். சோகக் கடலில் ரசிகர்கள் விழ வேண்டும், பால் வடியும் முகத்துடன் நம் உள்ளம் கவர்ந்த இளம் நடிகர் டிகாப்ரியோ கடைசியில் டைட்டானிக் படத்தில் இறந்தது நினைவுக்கு வருகிறது இல்லையா? அது மாதிரி நம்மை தனது நகைச்சுவையினாலும், நடிப்பினாலும் கவர்ந்த - நம்மூர் சந்திரபாபுவை நினைவுக்குக் கொண்டு வரும்- இத்தாலிய நடிகரின் லை·ப் ஈஸ் பியூட்டி·புல் படம் இன்னும் ரொம்ப வருடங்களுக்குப் பேசப்படும். இப்படி கதாநாயகனின் இறப்பும் சோகமான கடைசி காட்சிகளும் ஆஸ்கார் விருது வாங்க ஒரு வழியாம்.

ஆனால் கடைசியாக ஒரு தாரக மந்திரம் இருக்கிறது. மேலே சொன்னவற்றில் எது இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இதை செய்தாக வேண்டும். அது என்னவாக இருக்கும் என்று இதற்குள் ஊகித்து இருப்பீர்கள்.

campaign... campaign... campaign...!!!!

© TamilOnline.com