மனம் கவர்ந்த மாது
வாழ்க்கையில் எதிர்நீச்சல்போட்டு ஏதாவது விதத்தில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் சராசரிப் பெண்களைப் பற்றி எழுத எண்ணியதுமே திருமதி. சந்திரா சுப்பராமன் அவர்கள்தான் என் நினைவுக்கு வந்தார். என் மனம் கவர்ந்த மாது அவர். 'செய்யும் தொழிலே தெய்வம்' என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சந்திரா சுப்பராமனுக்கோ பொழுது போக்குதான் தெய்வம். இவரது ஆன்மீகம், சராசரி பிரார்த்தனை பூஜை இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. சிறிது நேரம் கிடைத்தால் போதும்; உடனே தெய்வப்படங்களாக வரைந்து அடுக்குகிறார்.

72 வயதாகும் இவர் கடந்த 18 வருடங்களாக சிகாகோவில் தன் மகள் வீட்டில் இருக்கிறார். இவரது மகள் மருத்துவராகத் தொழில் செய்கிறார். வரைவது மட்டுமல்ல இவர் பாடினால் குரலில் தேன் ஒழுகும். இவர் செய்யும் விதவிதமான சமையலைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். எத்தனையோ திறமைகள் இவரிடத்தில் இருந்தும் என்னைக் கவர்ந்தது இவரிடம் இருக்கும் சித்திரக் கலைதான்.

சந்திரா மாமி, தன் ஓவியங்களுக்கு கான்வாஸ் (Canvas), பெயின்ட், தூரிகை, Art Paper இவை எதையுமே பயன்படுத்துவதில்லை. தன் பேரக் குழந்தைகள் உபயோகித்துத் தூக்கிப்போட்ட கலர் பென்சில்கள், க்ரேயான் (Crayons), markers, பள்ளிக்கூடக் காகிதங்கள் இவற்றைக் கொண்டுதான் அழகழகான தெய்வ உருவங்களை வரைகிறார்.

''மாமா 1990ல் இறந்த பிறகு குருட்டு யோசனை பண்ற மனசுக்கு ஒரு மாற்றாகத்தான் இப்படி வரைய ஆரம்பிச்சேன். என் மனசு இதுலேயே நிலைக்க ஆரம்பிச்சுட்டுது. நான் முதல்ல வரைஞ்ச படங்களெல்லாம் எனக்கே அவ்வளவு திருப்தியா படலை; அதனால அதை யார்கிட்டேயும் காட்டறதில்லை. பல நாட்களா வரையற பயிற்சியால இப்போ நான் நல்லாவே வரையறேன்'' என்கிறார் சந்திரா மாமி.

''கண்ணுலதான் தெய்வ கடாட்சமே இருக்கு. நான் வரைஞ்ச சில பழைய படங்களில் கண்ணை மட்டும் திருத்தி வரைஞ்சு அழகாக்கவும் செய்றேன்'' என்று சொல்லும் மாமியின் விடாமுயற்சியையும், செய்வன திருந்தச் செய்யும் நோக்கையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இவர் சாமி படங்களை வரைவதைக் கேள்விப்பட்ட இவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள், தங்களுக்குக் கிடைக்கும் வித்தியாசமான சாமி படங்களை மாமியிடம் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். அந்தப் படத்தைப்பார்த்து அப்படியே மாமியும் வரைந்து விடுகிறார். தான் வரையும் ஒவ்வொரு சித்திரத்தையும் தெய்வத்திற்கே அர்ப்பணமாக்கி வரைகிறார்.

பெயருக்காகவோ, புகழுக்காகவோ, பணத்திற்காகவோ இல்லாமல் தன் ஆத்மதிருப்திக்காக மட்டுமே படங்கள் வரைந்து அதை ஒரு தெய்வீக ஆராதனையாகவே கருதுகிறார்.

தெய்வ உருவங்கள் அல்லாது இவர் வரைந்த ஒரே ஒரு உருவம் அவரது ஆல்பத்தின் கடைசி பக்கத்தில் இருந்தது. அது, அவரது கணவருக்கு முன்பாகவே 39ஆவது வயதிலேயே இறந்து போன அவர் மகனுடைய உருவம். துன்பச் சுமையைக் கொடுத்த கடவுள் நிம்மதி பெறும் வழியையும் காட்டியிருக்கிறார் போலும்!

கோமதி ஸ்ரீனிவாசன்

© TamilOnline.com