சிகாகோ புறநகர்ப் பகுதியில் வாழும் இளைய தலைமுறையினருக்குத் தமிழை எளிய முறையில் கற்றுக் கொடுப்பதற்காக ஒரு புதிய வழி முறையைக் கண்டுபிடித்துக் கையாண்டு வருகிறது டேரியன் தமிழ்ப்பள்ளி. 14 வருடங்களுக்கு முன்பு, ''தமிழுக்கென ஒரு அந்திப் பொழுது'' என்ற பெயரில், வடமேற்கு பல்கலைக்கழகத்தில் திரு.அழகப்பா ராம்மோகன் தமிழ்ப்பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற இந்தப் பள்ளிக்கு, 'கெல்லாக் கல்லூரியில் சிறப்புப் பேராசிரியராக இருந்த திரு. பாலா பாலச்சந்திரன் இடம் அளித்து உதவி புரிந்தார். இந்தத் தமிழ்ப்பள்ளியில் மாற்று ஆசிரியர்களாகப் பணிபுரிந்த திரு. சோமஇளங்கோவனும், திரு.வ.ச. பாபுவும் சேர்ந்து தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்ட சில மாதங்களில், டேரியன் தமிழ்ப்பள்ளியை ஆரம்பித்தார்கள்.
சிகாகோ பல்கலைக்கழகப்பேராசிரியர் திரு. ஜேம்ஸ் லிண்டுகோம் அவர்களும், காலஞ்சென்ற தஞ்சைத் தமிழ்ப் பேராசிரியர் திரு.கே. பரமசிவம் அவர்களும் கண்டுபிடித்த டையாகிரிடிக் (diacritic)- குறியீடு முறையில் இந்தப் பள்ளியில் தமிழ் பயிற்றுவிக்கிறார்கள்.
தமிழ் எழுத்துகளை எளிமையாக எழுதக் கற்றுக் கொள்ள மட்டுமில்லாமல் சரியான உச்சரிப்புக்கும் எளிமையான முறைகள் இந்தப் பள்ளியில் பின்பற்றப்படுகின்றன.
திரு.முருகேசன், திரு. சோம.இளங்கோவன், திரு.வ.ச.பாபு, திருமதி கலைச்செல்வி கோபாலன் திருமதி தாரா சந்திரன் ஆகியோர் இந்தப் பள்ளியில் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இளைய தலைமுறைக்கு தமிழ் மொழியை எளிமையான முறையில் பயிற்றுவிக்கும் அதே நேரத்தில் அவர்களது பெற்றோருக்கு தமிழ் இலக்கியச் சுவையை அனுபவிக்கும் வாய்ப்புகளையும் இந்தப் பள்ளி ஏற்படுத்தித் தருகிறது.
சகல பணிகளும் கணிப் பொறிமயமாகிப் போன இன்றைய கால கட்டத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை எளிமையான முறையில் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் இவர்களது பணி நிச்சயம் பாராட்டிற்குரியது. |