முதன் முதலாக தமிழ் சினிமாவின் வரலாற்று பரிமாணத்தை வெளிப்படுத்துவதில் ஈடுபட்டவர் தியடோர் பாஸ்கரன். 1977- இல் Jornal of Tamil Studies ஆய்விதழில் வெளியான இவரது Birth of a Medium: Silent cinema in South India கட்டுரை தமிழ் திரை ஆய்வின் முதல் புலமை முயற்சி. தொடர்ந்து இவரது கட்டுரைகளும் நூல்களும், திரையியல் பற்றிய ஆய்வு முயற்சிகளுக்கு புதிய வெளிச்சம் காட்டுபவை.
எது நல்ல சினிமா? நல்ல சினிமாவுக்குச் சில அடிப்படை அளவுகோல்கள் உண்டு. இவற்றைத் தெரிந்து கொண்டால் தான் தரமான படங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இலக்கியத்தைப் போலவே நமது சினிமா அனுபவம் ஆழமாவதற்கு நல்ல சினிமா என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகிறது. எது நல்ல சினிமா என்பதை வரையறுப்பதற்கு முன், எது சினிமா என்ற அடிப்படைக் கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. நினைவில் கொள்ளுங்கள் - திரையில் வருவதெல்லாம் சினிமா அல்ல; அச்சில் வருவ தெல்லாம் இலக்கியம் ஆகாதது போலவே.
சினிமா, திரைப்படமாக்கப்பட்ட நாடகம் அல்ல. இது ஒரு அடிப்படையான வித்தியாசம். நிகழ்ச்சி ஒன்றை அவையோரின் முன் நிகழ்த்திக் காண்பிப்பது நாடகம். சினிமாவின் தன்மையே வேறு. தமிழ்நாட்டில் சினிமா வளராததற்கு ஒரு முக்கிய காரணம், அது நாடகத்திற்கு அடிமைப்பட்டு இருப்பதுதான். இதற்கு வரலாற்று ரீதியான காரணங்களும் உண்டு. பேசும்படத்தின் ஆரம்ப கட்டத்தைப் பார்ப்போம். அன்று (1930களில்) பிரபலமாக இருந்த புராண நாடகங்களே படமாக்கப்பட்டன. நாடகமேடை மாதிரியே செட் போடப்பட்டு, காமிராவை முன்னால் வைத்து நாடகம் நடிக்கப்பட்டு, நாடகம் பார்ப்போரின் கோணத் திலிருந்து அது படமாக்கப்பட்டது. சென்னை யிலிருந்த நாடகக் கம்பெனிகள், கூட்டம் கூட்டமாக கல்கத்தாவுக்கும். பம்பாய்க்கும் சென்று தங்கள் நாடகங்களைப் படமாக்கிக் கொண்டன. அண் மைக் காலம்வரை, இயக்குநர்கள், நடிகர்கள், வசன கர்த்தாக்கள், பாடலாசிரியர்கள் யாவரும் நாடகத் துறையிலிருந்து வந்தவர்கள். நாடகத்தின் இந்த உடும்புப் பிடியிலிருக்கும்வரை ஆரோக்கியமான சினிமா மலர வழியில்லாமல் போயிற்று.
நமது இன்றைய படங்களிலும்கூட நாடகத்தனம் மிகுந்திருப்பதைக் காணலாம். கதாபாத்திரங்கள், சதுரமான திரையின் விளம்பிலிருந்து வருவார்கள், மேடைக்குள் நுழைவதைப்போல. வசனத்தைப் பேசிவிட்டுப் பக்கவாட்டில் சென்று மறைவார்கள். குரலை ஏற்றி இறக்கிப் பேசாமல் கத்திப் பேசுவார்கள். (நாடக அரங்கின் கடைசி வகுப்பில் உட்கார்ந்திருப்பவனுக்கும் கேட்க வேண்டுமே!) பாத்திரங்களை ஏற்று நடிப்பவர்கள் காமிராவைப் பார்த்துப் (பார்க்க வந்திருக்கும் ரசிகர்களைப் பா¡ர்த்து) பேசுவார்கள், பேசிக் கொண்டேயிருப்பார்கள்... பேச்சு... பேச்சு, படம் முழுவதும் பின்னணி இசை ஒலித்துக்கொண்டிருக்கும், நாடகத்தில் மேடையின் கீழமர்ந்திருக்கும் இசைக்குழுவின் இசையைப் போல, இத்தகைய நாடகத்தனம் சினிமாவின் தன்மையைச் சீர்குலைக்கிறது.
சினிமா, காமிராவினால் பதிவுசெய்யப்பட்ட பல்சுவை நிகழ்ச்சியுமல்ல; எந்த ஒரு படத்திலும் இழையோடும் ஒரு மையக்கரு ஒன்று இருக்கும். இந்தக் கருவைச் சாராத எந்தக் காட்சிப் படிமத்திற்கும், ஒலிக்கும் அப்படத்தில் இடமில்லை. அப்படி சம்பந்தமில்லாத காட்சி வந்தால், அது சினிமாவாக இல்லாமல் படமாக்கப்பட்ட பல்சுவை நிகழ்ச்சி ஆகிறது. சினிமா, வாய்ப்பேச்சால், வார்த்தைகளால் சொல்லப்படுவதல்ல, அப்படி இருந்தால் அதற்கு ஒரு திரை தேவையிருக்காது. ஒலி நாடாவிலோ, வானொலியிலோ கேட்டுத் திருப்தியடைய முடியும். சினிமா, படமாக்கப்பட்ட நாடகமல்ல, படமாக்கப்பட்ட பல்சுவை நிகழ்ச்சியுமல்ல, வாய்ப்பேச்சால் சொல்ல முடியாதது. அப்படியானால் சினிமா என்பது என்ன?
ஒவ்வொரு கலைக்கும் அதற்கே உரிய சில அடிப்படைப் பண்புகள் உள்ளன. ஒரு படைப்பாளி இந்தப் பண்புகளைச் சரிவரப் பயன்படுத்தும் போது அந்தக் குறிப்பிட்ட கலை மலர்கிறது. ஓவியத்தைப் பாருங்கள். அது கோடுகளாலும் படிமங்களாலும், வண்ணங்களாலும் ஆனது. 'மலர்' என்ற வார்த்தையை ஒரு பலகையில் எழுதி, இது ஒரு ஓவியம் என்று உங்களை நான் ஏமாற்ற முடியாது. ஓவியத்தின் தனித்துவப் பண்புகள் அங்கில்லை. அதேபோல் இசை, தொனியாலும் லயத்தாலும் ஆனது. நடனம் உடல் அசைவை அடிப்படையாகக் கொண்டது. சினிமாவின் சிறப்பு அம்சம். அதற்குத் தனித்துவத்தை அளிக்கும் அம்சம், சினிமா மொழி எனலாம்.
சினிமா மொழி என்றால் என்ன? இதில் மூன்று அம்சங்கள் உள்ளன. முதலாவது அது காட்சிப் படிமங்களால் ஆனது. பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள் (1979) ளில் ஒரு காட்சித் தொடர். வாய்க்கால் ஒன்றில் சிறுவர்கள் நீந்தி விளையாடுவது, அதிலொருவன் மூழ்கி இறப்பது, கிராமத்து மக்களின் வருத்தம், அதிர்ச்சி, சிறுவனின் ஈமக்கிரியைகள் எல்லாமே அழுத்தமான, அழகான, வரிசையான காட்சிப் படிமங்களால் வெளிப்படுத்தப்படுகின்றன. சினிமா அங்கே தன்னைக் காட்டிக் கொள்கிறது.
இரண்டாவது அம்சம் ஒலி. இது காட்சிப் படிமங்களுக்குத் தாங்களாக வருவது, சினிமாவில் ஒலி பலவிதப்படும். பேசும் வார்த்தைகள், இயல்பான ஒலி (ரயில் ஓடுவது, பறவைகளின் இரைச்சல், ஓடும் நதியின் சலசலப்பு) கடைசியாக இசை (இசையே இல்லாத படங்களும் உண்டு) எங்கே ஒலி முக்கியத்துவம் பெற்று, காட்சிப் படிமங்கள், இரண்டாவது கட்டத்திற்குத் தள்ளப்படுகின்றனவோ, அங்கே சினிமா சீரழிந்து தாழ்ந்து போகிறது. ஒலி, காட்சிப்படிமத்திற்குத் துணைபோவதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் (1980) படத்தில் வண்ணான் ஒருவன் குடித்துவிட்டு ஆடும்போது பின்னணியில் வண்ணான் வந்தானே, வண்ணாரச் சின்னான் வந்தானே'' என்ற கிராமியப் பாடலின் இசை.
சினிமா மொழியின் மூன்றாவது முக்கிய அம்சம் படத்தொகுப்பு (editing) தனித்தனியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிப் படிமங்களும், ஒலிப்பதிவுகளும், ஒரு அர்த்தமுள்ள கோர்வையாக அமைக்கப் படுவது. இதை சினிமா இலக்கணத்திற்கு அடித்தளம் எனலாம். எப்படி இந்தக் கோர்வை அமைகிறதோ அந்த விதத்திலேயே அந்த நிகழ்ச்சித் தொடரின் அர்த்தமும் மாறும். ஒரு உதாரணம்: வருத்தம் தோய்ந்த ஒரு மனிதனின் முகம் என்ற மூன்று காட்சிப் படிமங்கள். இந்த மூன்று காட்சிப் படிமங்களும், மேற்கூறிய வரிசையில் இணைக்கப்பட்டால் நாம் காண்பது பசியுடனிருக்கும் ஒரு மனிதன் கோழி கிடைப்பதில் மகிழ்ச்சியடைகிறான். வேறு கோர்வையில் இணையுங்கள். மகிழ்ச்சியான முகம், தட்டில் கோழி, வருத்தமான முகம். இப்போது நாம் காண்பது உணவை எதிர்பார்த்திருந்த ஒருவனுக்குக் கோழி வந்ததில் ஏமாற்றம், சைவமோ என்னமோ! காட்சிப் படிமங்களைத் தொடுக்கும் வரிசையைப் பொறுத்து அர்த்தம் மாறுகிறது.
காட்சிப் படிமங்களை இணைப்பதற்குப் பல முறைகள் உண்டு. ஒவ்வொன்றிற்கும் தனியான ஒரு அர்த்தமுண்டு. கண்ணிமைப்பதுபோல் காட்சி மாறுவது கட். இது ஒரு இணைப்புத் தான். ஒரு காட்சி மங்கி, அதே தருணத்தில் அடுத்த காட்சி திரையில் தோன்றுவது மயங்கித் தெளிதல். திரை இருண்டு, பின் மறுகாட்சி வருவது இருண்டு தெளிதல். சினிமா மொழியின் கால் புள்ளி, முற்றுப்புள்ளி, பத்தி என இவற்றைச் சொல்லலாம். சத்யஜித்ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’யில் பருவங்கள் மாறுவதை வரிசையாக சில மயங்கித் தெளிதல்கள்' மூலம் உணர்த்துகிறார். வேறு காலகட்டத்தில் வேறு இடத்தில் நிகழ்பவை என்பதை மயங்கித் தெளிதல் மூலமாகவும் 'இருண்டு தெளிதல்' மூலமாகவும் கூறலாம்.
இந்த சினிமா மொழியை, அதன் தன்மையை, தனித்துவத்தை உணர்ந்து, ஒரு படைப்பாளி அதை அழுத்தமாகக் கையாளும்போது, அங்கே நல்ல சினிமா பிறக்கிறது. இந்த மொழியிலிருந்து மாறுபட்டு வாய்ப்பேச்சினால் கதைசொல்ல முற்பட்டால் அங்கே சினிமா நலிவடைகிறது. பேசும் மொழி போலவே, இந்த மொழியின் நயம் அதைப் பயன்படுத்தும் படைப்பாளியின் திறனை, கற்பனை வளத்தைப் பொறுத்தது. சூரியன் உதயமாவதைக் கண்டால் ஒருவன் 'ஓகோ விடிகிறது' எனலாம். கவிஞன் அதைக் கண்டாலோ 'பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்' என்கிறான்.
இந்த சினிமா மொழிக்கும் இலக்கணம், மரபு எல்லாமே உண்டு. இது வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தொழில் நுணுக்க வளர்ச்சியின் விளைவாகப் புதுப்புது சாதனங்கள் இந்த சினிமா மொழியை வளப்படுத்திய வண்ணமிருக்கின்றன. மேனாடு களில் ஹிட்ச்காக், உடிஆலன் போன்றோரின் படைப்புகளையும் நம் நாட்டில் அடுர் கோபால கிருஷ்ணன், அரவிந்தன், மணி கெளல் போன்றோரின் படைப்புகளையும் காணும்போது இதை உணரலாம்.
காட்சிப் படிமங்களின் மூலம் மட்டுமே பொறாமை, எரிச்சல், அதிருப்தி, பொறுமையின்மை எனும் மனித மனத்தின் வெவ்வேறு நிலைகளை ஹிட்ச்காக் காட்டினார். காட்சிப் படிமங்கள் மூலம் சொல்லக் கூடிய ஒன்றை வார்த்தைகள் மூலம் கூற முயன்றால் அங்கே சினிமா சீரழிகிறது என்றார் ஹிட்ச்காக். தமிழ் சினிமாவில், காட்சிப் படிமங்களால் கதைசொல்லும் முறை சரியாக வளரவில்லை. இது இந்தி சினிமாவுக்கும் பொருந்தும். பேசும் படம் பிறந்த நாளிலிருந்து, பேசும் பேச்சால் கதைசொல்லும் வழக்கம் வேரூன்றி, அது ஒரு பாரம்பரியமாகவே ஆகிவிட்டது. எப்படி? மெளனப் பட நாட்களில், புராணக் கதைகளே பட மாக்கப்பட்டன. இவை மக்களுக்கு நன்கு தெரிந்திருந்த கதைகள். ஆகவே, காட்சிப் படிமங்கள் மூலம் கதையை உணர்த்த வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. பேசும் படம் வந்தவுடன், பேச்சுக்கும், அதைவிட பாட்டுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. (காட்சி படிமமுறைதான் வளரவில்லையே) பிறகு 1950களில் வசனகர்த்தாக்கள் நட்சத்திர அந்தஸ்தை அடைந்ததற்கும், இப்படி ஒலிக்கு (பேச்சு) கொடுத்த அதீத முக்கியத்துவமே காரணம். 50களில் திரையில் பேசிக் கொண்டேயிருக்கும் மனிதர்களையே அதிகம் கண்டோம். சினிமா வறண்டு, நலிந்து, படுத்தே விட்டது.
சினிமா மொழியைப் பலமுறைகளில் வளமடையச் செய்யலாம். குறியீடுகள் மூலம் மையக் கருத்தை வலியுறுத்துவது ஒருமுறை. மகேந்திரனின் உதிரிப்பூக்களில் சூல்கொண்ட கருமேகம் அன்பிற்கு ஏங்கும் ஒரு பெண்ணின் நம்பிக்கையின் குறியீடாகக் காட்டப்படுகிறது. பெர்க்மன் wild strawberies (1957) என்ற படத்தில் அன்பு சிறிதளவும் இல்லாத தம்பதியரைச் சித்தரிக்கிறார். அவர்கள் செல்லும் கார் வழியில் பழுதடைந்திருக்கிறது. இருவரும் அதைத் தள்ள முயற்சிக்கிறார்கள். அங்கே அந்த அவர்களது மணவாழ்க்கையின் குறியீடாக அமைகிறது.
இசை, நாடகம், நடனம் போன்றல்லாமல், சினிமா முழுக்கமுழுக்க, தொழில் நுணுக்க வளர்ச்சியின் படைப்பு. காமிரா, லென்ஸ், ஒளிவிளக்குகள், ஒலிப்பதிவு நாடா, ஒளியெறிதல் ஆகியவற்றின் உதவியால் தயாரிக்கப்படுவது. ஆகவே, சினிமாவைப் பற்றிப் பேசும் போது, அதன் தனிப்பண்புகளை மனதில் வைத்தே பேச வேண்டும்.
அது சினிமாவாக இருக்கிறதா என்று. அதை ஒரு கதையாகவோ (இலக்கியம்) அல்லது நாடக மாகவோ பார்த்துக் கணிக்க முடியாது. சினிமாவை உணர, அனுபவிக்க வேறு வழி இல்லை. இசையை, நடனத்தை ஆழமாக அறிய, அலசப் பாடங்கள் படிக்கும் நாம் சினிமாவுக்கு இந்த மாதிரி உழைப்பும், பயிற்சியும் அவசியமில்லை என்று நினைக்கிறோம். திரைப்பட ரசனைக்கு முயற்சி தேவையே இல்லை என்றே எண்ணுகிறோம்.
இப்போது சினிமா மொழி நமக்குப் பரிச்சயமில்லாத ஒன்றாக இருக்கிறது. மற்ற நாடுகளில் இம்மொழி வளர்ந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து வரும் நல்ல சினிமாவை நாம் அனுபவிக்க முடியாததற்கு நம் பரிச்சயமின்மைதான் காரணம். சினிமா மொழி, மொழி பெயர்க்க முடியாத ஒன்று. அது மனித குலத்திற்கே பொதுவானது. அதுதான் சினிமாவின் சக்தியும்கூட, சினிமாவைப் பற்றி இந்த விழிப்பு ஏற்படாத வரை... நாம் சினிமாவைப் புலனளவில் மட்டுமே அணுகுவோம். அறிவுப்பூர்வமாகவும் அணுக வேண்டும், அந்த அனுபவம் ஆழமானதொன்றாக அமைய வேண்டுமானால்...
தியடோர் பாஸ்கரன் |