இசைத்தட்டுக்களை வாங்கிச் சேர்க்கும் பழக்கம் உள்ள வர்களுக்கு 'ஸீ.டி. ஸாம்ப்ளர்' என்ற விஷயம் பரிச்சயமாகி இருக்கும். பல்வேறு இசைக் கலைஞர்கள் அல்லது குழுக்களின் (சிறந்த) பாடல்களைக் குழுவுக்கு ஒன்றாகத் தேர்ந்தெடுத்துத் தொகுத்த 'மாதிரி இசைத்தட்டு'தான் அது. இந்தத் தொகுப்பு எல்லா இசையையும், மாதிரி பார்க்கவும் அவற்றிலிருந்து பிடித்த பாடல்களைத் தேர்ந் தெடுத்து, அந்தக் குழுவின் பிரத்யேக இசைத்தட்டை வாங்கவும் உதவும். இந்திய மண்ணில் நாம் அன்றாடம் கடந்து போகும் தெருவோர லாலாக்கடைகள் கூட எல்லா இனிப்பு/காரவகைகளின் மாதிரியைத் தொகுத்து விற்பதுண்டு. தமிழில் 1960-லிருந்து 1995 வரையில் எழுதப்பட்ட சிறந்த (நவீன) சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று கிடைத்தால், தமிழ் இலக்கிய உலகின் கால் நூற்றாண்டை மாதிரி பார்த்தது போல் இருக்கும் இல்லையா? சில ஆண்டுகள் கழித்து இந்தத் தொகுப்பே அவ்வாண்டுகளின் இலக்கியப் பிரிதிநிதியாகவும் ஆகலாம். அத்தகைய ஒன்றுதான், இந்திய சாஹித்ய அகாதெமி நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட இந்த "நவீன தமிழ்ச் சிறுகதைகள்" தொகுப்பு.
நவீன தமிழ்ச்சிறுகதைகளைத் தொகுத்தவர் திரு.சா.கந்தசாமி அவர்கள். சாயாவனம், தொலைந்து போனவர்கள், (தொலைகாட்சித் தொடராக வெளிவந்து பிரபலமானது) மற்றும் விசாரணை கமிஷன் (சாஹித்திய அகாதெமி விருது பெற்றது) போன்ற நாவல்களைத் தந்தவர்.
முதலில் இந்தத் தொகுப்பின் இரண்டு சிறப்பு அம்சங்களைச் சொல்லவேண்டும்.
1. இதில் மொத்தம் 35 சிறுகதைகள் உள்ளன. அப்படியென்றால் 35 கதாசிரியர்களின் படைப்புகள். வாசகர்கள் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.
2. புத்தக முடிவில் எல்லா எழுத்தாளர்களைப் பற்றிய சிறிய அறிமுகக் குறிப்புகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. இதனால், ஓர் எழுத்தாளரின் கதை பிடித்திருந்தால், அவரின் பிற படைப்புகளை விரிவாகப் படிப்பதற்கான தகவல்கள் கிடைக்கின்றன. வெறும் கதைகளை மட்டுமே வரிசைப்படுத்திக் கொடுத்துவிட்டு முடிந்துவிடும் தொகுப்புகளுக்கு இடையே இது வித்தியாசப்படுகிறது.
தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகளில் சில, வெகுஜன பத்திரிகைகளில் எழுதும் சுஜாதா, ஜெயகாந்தன், அசோகமித்திரன், வாஸந்தி, பிரபஞ்சன், திலகவதி போன்ற பிரபலமான கதாசிரியர்களுடையவை. இன்னும் சில, இலக்கிய வட்டாரங்களில் மிகவும் மதிக்கப்படும் சுந்தர ராமசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், ஜெயமோகன், பாவண்ணன், சா. கந்தசாமி, அம்பை, நாஞ்சில் நாடன் போன்றோரின் கதைகள். இதைத் தவிர, சிறு பத்திரிகைகளில் மட்டும் எழுதிவரும் எழுத்தாளர்களான நகுலன், ஆ. மாதவன், நீல. பத்மனாபன், விட்டல் ராவ், திலீப்குமார், சோ. தர்மன், எஸ். ராமகிருஷ்ணன், கிருஷ்ணன் நம்பி, ந.முத்துசாமி, பா. ஜெயப்பிரகாசம், மா. அரங்கநாதன், ஐராவதம், கந்தர்வன், கோணங்கி, தோப்பில் முஹம்மது மீரான், சுப்ரபாரதி மணியன் போன்றோரின் கதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
ஒவ்வொரு எழுத்தாளருக்கும் திரு. கந்தசாமி தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள கதைதான் அந்த எழுத்தாளருடைய மிகச்சிறந்த அல்லது நவீனமான கதை என்பதில், நிறைய வாசித்தவர்களுக்குள் நிச்சயம் கருத்து வேறுபாடுகள் வரலாம். ஒன்றை நவீனம் என்றோ சிறந்த படைப்பு என்றோ சொல்வது அவரவர் அளவுகோல்களைப் பொறுத்தது (Subjective). ஆனாலும் அனுபவத்தாலும் நிறைய வாசிப்பினாலும், பெரும்பான்மையான மக்களால் பொதுவான அளவுகோல்களைப் புரிந்துகொள்ள முடியும். திரு. கந்தசாமியால் ஓரளவு அது முடிந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
நவீன கதைகள் என்றால், புரியவே புரியாத கதைகள் என்று அர்த்தம் கொண்டு வாசகர்கள் பயப்பட வேண்டாம். நிறைய கதைகள் மிகச்சாதாரணமான மனிதர்களைப் பற்றியது. நாம் அன்றாடம் பார்த்துப் பழகிய மனிதர்களையும், அவர்களின் குணாதிசயங்களையும், சம்பவங்களையும் நாம் கவனிக்கத் தவறிய நுண்ணிய விஷயங்களுடன், உணர்வுகளுடன், ஒரு சிறு ஆச்சர்யத்தையோ, அதிர்ச்சியையோ, நம்பிக்கையையோ குறைந்த அளவு ஒரு புன்னகையையோ நம்மில் பிறக்கச் செய்யுமாறு கதை சொல்லிவிட்டுப் போகின்றன இவை. இங்கே என்னைக் கவர்ந்த சில கதைகளைப் பற்றி எழுதப்போகிறேன்.
பெரியவர்கள் செயற்கையாக தம்மைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு, அதிகாரத் தோரணையிலும், மனதில் உள்ள வாஞ்சையை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாத மிடுக்கிலும் இருக்க, இதை அப்பாவின் அன்புக்காக ஏங்கும் குழந்தை ஒன்றின் பார்வையில் நம்மை தரிசிக்கவைக்கிறது திரு.சுந்தர ராமசாமியின் 'பக்கத்தில் வந்த அப்பா' சிறுகதை. சமயத்தில் பெரியவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தை மாதிரி வெகுளியாய் விழிப்பதும், அந்த நேரத்தில் வெகுளியான குழந்தைகள் தம் அவதானிப்புகளை வைத்து (observations) பெரிய மனிதர்கள் போல் நடந்து சமாளிப்பதும், பின் அதே பெரியவர்கள் குழந்தை காப்பாற்றியதை மறைத்து தாமே சமாளித்ததாக பிரஸ்தாபிப்பதும் மிக அழகாகக் கதையில் சொல்லப்பட்டிருக்கின்றன. அப்பாவின் கவனிப்புக்காக ஏங்கும் பாலு மீது சட்டென்று ஒரு வாஞ்சையை நாம் உணருகிறோம்.
திலீப்குமாரின் 'கடிதம்' என்ற சிறுகதையில் வரும் மிட்டு மாமா நேரடியாக பணம் கொடுங்கள் என்று சொல்லாமல் பின்குறிப்பு வரை அதை ஒத்திப்போட்டுத் தன் இயலாமையையும் குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை நடத்தும் விதத்தையும், தன் பூஜா விக்கிரகங்களை தனக்குப் பின் பராமரிப்பது பற்றியும், கவர்னர் பற்றியும், ரிக்ஷாகாரன் பற்றியும் கதை அளந்து எழுதினாலும், பட்டவர்த்தனமாகப் பணம் கேட்கத்தான் இந்தக் கடிதம் என்பது முதலிலேயே தெரிந்துவிடுகிறது. இருந்தும் ஒரு வெகுளித்தனமான (அல்லது வேஷத்திற்கு வெகுளித்தனமான) கோரிக்கைக் கடிதமாகத்தான் அது வாசிப்பவருக்குப் படுகிறது. திலிப்குமார் மிகத் தேர்ந்த சிறுகதையாளர் என்பதற்கு இந்தச் சிறுகதை போதும் என்று தோன்றுகிறது. (அவருடைய 'கடவு' என்ற சிறுகதைத் தொகுப்பு தனிப்புத்தகமாக கிடைக்கிறது.)
சில பொழுதுகள் ஏமாற்றுவதற்கு சாதகமாக அமைந்துவிடுகின்றன. கூட்டம் நிரம்பி வழியும் பேருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிப்பதும், கடைக்காரர் தவறுதலாக மீதிச் சில்லறையை அதிகமாகக் கொடுக்கும்போது சொல்லாமலே வாங்கிப்போவதும், நான்கு கிலோவிற்குப் படியில் அளந்துகொண்டு போய், கடைக்கு வந்த தாவணிப் பெண்ணிடம் கவனம் வைத்த மாவரைப்பவனிடம் மூன்று கிலோதான் என்று சொல்லி அரிசியை அரைத்துக்கொண்டு வருகையிலும் (அமெரிக்க உலகில் - பொருளை வாங்கி உபயோகித்துவிட்டு மீண்டும் அதே கடையிலேயே திருப்பிக் கொடுத்துவிடுகையிலும்) உள்ளூர மனம் குத்திக் கொண்டுதான் இருக்கும். நாஞ்சில் நாடன் அப்படி ஒரு தருணத்தைக் 'கிழிசல்' கதையில் அவருக்கே உரித்தான யதார்த்த நடையில் சொல்லி, நாமும் இப்படி ஏதாவது செய்திருக்கிறோமா என்று குறுகுறுக்க வைக்கிறார்.
வாழ்க்கையில் இனி செய்ய ஒன்றுமில்லாமல் மற்றவரை அண்டி, அவர்கள் தயவில் உண்டு உறங்கி அதிக வயது வாழ்வதே ஒரு சோகம்தான். அதுவும் உடல்நலக் குறைவற்ற முதியவர்களானால் இன்னுமே சோகம்தான். அவர்களை விட சின்னவர்கள் எல்லாம் இறந்துபோக சாட்சியாய் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்கவேண்டும். தனக்கும் ஏன் இன்னும் முடிவு வரவில்லை என்று சதா சர்வ காலமும் மற்றவர்களின் குத்திக்காட்டலை சகித்தபடி இருக்க வேண்டும். இந்த நிலையில் உள்ள, ஐந்து தலைமுறைகள் தாண்டியும் உயிர் வாழும் ஒரு பிராமண விதவைப் பாட்டியைப் பற்றிய வாஸந்தியின் 'பயணம்' நம்முள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சம்பந்தமே இல்லாத இரு நிகழ்வுகளை எப்படி மனித மனம் பொய்யாய் சம்பந்தப்படுத்தி மனிதர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறது!
நடுத்தரக் குடும்பங்களில் வயதானவர்கள் தமக்கென்று ஒரு நிரந்தர இடமின்றி பிள்ளைகளிடம் மாறி மாறி இருப்பது அல்லது பந்தாடப்படுவது நமது சமூகங்களில் சகஜம்தான். இதைப்பற்றி எதுவுமே சொல்லாமல், வண்டியில் ஏறப்போகும் ஒரு கிழவி, அவளைக் கொண்டு விட வரும் அவளது பேத்தி இந்த இருவரை வைத்துக்கொண்டு மிகச்சாதாரண ஒரு விடை பெறும் காட்சிதான் 'அப்பாவிடம் என்ன சொல்வது' என்ற திரு.அசோகமித்திரனின் கதையில் வருகிறது. ஆனால் வாசித்து முடிக்கையில் மனதை என்னவோ செய்துவிடுகிறது. அந்தக் கிழவியின் மேல் பச்சாதாபத்தையும், பிளாட்பாரம் டிக்கெட் வாங்கக் கூட யோசிக்கும் அவள் மகனின் இயலாமை மேல் கோபத்தையும் வரவழைக்கிறது.
வாழ்வின் முரண்களைப் பார்த்து பிரபஞ்சனின் 'மீன்', அம்பையின் 'ம்ருத்யு', கந்தசாமியின் 'மூன்றாவது பிரார்த்தனை' போன்ற கதைகள் எள்ளி நகையாடு கின்றன. மிகவும் நவீனமான புரியாத மொழி மற்றும் நடையிலும் சில கதைகள் இதில் இடம் பெற்றிருக் கின்றன. மா.அரங்கநாதனின் 'மைலாப்பூர்' (விஞ்ஞானப் புனைவு என்று சொல்லலாமா?), கோணங்கியின் 'தனுஷ்கோடி', எஸ்.ராமகிருஷ்ணனின் 'காலாட்படை பற்றிய குற்றப்பத்திரம்' போன்றவை உதாரணங்கள்.
கதைகளின் பரப்பு பற்றி சொல்ல வேண்டுமென்றால் - நேபாளத்திலிருந்து ஓடிவரும் காவல்கார கூர்க்காக்கள், சென்னையில் வசிக்கும் குஜராத்தி மக்கள், வட்டிக்கு விடும் ஜெயின் இனத்தவர், மாட்டுக்கு லாடம் அடிக்கும் தினக்கூலி, மீன் விற்பவள், சலவைத் துணிக்கணக்கு எழுதும் அதிகம் படிக்க இயலாத பருவவயதுப் பெண், டாக்டராக ஆசைப்பட்டு முடிவில் நர்ஸாகும் சராசரிகள், மஹாராஜாவின் விரலும் கண்ணும் போன இடத்தையெல்லாம் சாசனம் செய்துகொண்ட கிராமத்து தனவான், பரமஹம்ஸரின் ஆஸ்தான சிஷ்யர், துபாயிலிருந்து திரும்ப வந்திருக்கும் ‘உதவி செய்ய மனமில்லாத’ மருமகப் பிள்ளை என்று பல்வேறு விதமான மனிதர்கள், அவர்களின் சூழல்கள் தான் ஒவ்வொரு கதைக்கும் களமாக அமைகின்றன. 35 ஆண்டுகால தமிழ் இலக்கியம் இப்படிப் பரந்து விரிந்த ஒரு சமூகத்தைப் பற்றிப் பேசவேயில்லை, வெறும் தலைவன் தலைவி புகழையும், மேல்தட்டு வர்க்கத் துதியையும், நல்லவன் - கெட்டவன் கதையையும் மட்டுமே பேசிக்கொண்டிருந்தது என்ற அவதூறு நல்ல வேளை இல்லை. சாட்சியாக இந்த நவீன தமிழ்ச்சிறுகதைகள் தொகுப்பு இருக்கும்வரை.
புத்தகம் கிடைக்கும் இடம்: சாஹித்ய அகாதெமி, C.I.T. கேம்பஸ், தரமணி, சென்னை - 600 113
மனுபாரதி |