நான் இரண்டு மாதங்களாக நீங்கள் எழுதி வரும் "அன்புள்ள சிநேகிதியே" பகுதியைப் படித்து வருகிறேன். உங்கள் ஆலோசனை சிறிது வித்தியாசமாகவும், ஆக்கப் பூர்வமாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது. அதனால் இந்தக் கடிதம் எழுதுகிறேன். என்னுடைய பிரச்சினை மிகப் பெரியது இல்லை என்றாலும், மனது சங்கடத்தில் இருக்கிறது.
என்னுடையது காதல்-கலப்புத் திருமணம். நான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவள். நான் சுத்த சைவம். என் கணவரும் புரிந்து கொண்டு தனக்கு வேண்டியதை வெளியில் சாப்பிட்டுக் கொள்வார். எனக்கு 2வயதில் ஒரு மகன் இருக்கிறான். காய்கறி உணவுதான் கொடுக்கிறேன். என் கணவரின் பெற்றோர்கள் 2 வருடத்துக்கு முன்பு வந்து மூன்று மாதம் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு, அதுவும் என்னுடைய மாமனாருக்கு மீன், கறி இல்லாமல் ஒரு நாள் கூட உணவு செல்லாது. எனக்கு அந்த வாசனையே அலர்ஜியாக இருக்கிறது. எப்படியோ அந்த முறை சமாளித்து விட்டேன். இப்போது புது வீடு வாங்கியிருக்கிறோம். வரும் ஜூன் மாதம் வருவதற்கு துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வருகையை நினைத்துக் கொண்டால் எனக்கு அந்தப் பழைய மீன் வாசனை வந்து இப்போதே என் வயிற்றைக் குமட்டுகிறது. என் பையனுக்கும் பழக்கி விடப்போகிறார்களோ என்கிற பயம் வேறு. என் கணவரிடம் சொல்லிப் பார்த்தேன். மூன்று மாதம் தானே அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ள வேண்டியது தான் என்கிறார். ஆனால், இந்தச் சின்ன விஷயம் என் மூளையையே பாதிக்கிறது. நான் எப்படிச் சமாளிப்பது? உங்கள் கருத்து என்ன?
அன்புள்ள,
உங்கள் சங்கடம் தெளிவாகப் புரிகிறது. பிரச்சினையில் சிறியது பெரியது என்று எதுவும் கிடையாது. சின்ன பிரச்சனை என்று நாம் நினைப்பதெல்லாம் விசுவரூபம் எடுத்து, குடும்பங் களே பிளவுபடக் காரணமாக இருக்கும். பாரதப் போர் ஒரு பகடை உருட்டலில் தான் ஆரம்பித்தது. மந்தரை ஓதிய மந்திரத்தில் தான் ராமாயணம் பிறந்தது.
உங்கள் மாமனார், மாமியார் உணவுப் பழக்கங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. வயதானவர்களுக்கு எந்த உணவு நல்லது, எது கெடுதல் என்று சொல்லித்தான் பார்க்க முடியும்.
ருசியோ, வாசனையோ எல்லாவற்றுக்குமே பழக்கம் தான் காரணம். இந்த ஊருக்கு வந்த புதிதில் மூக்கை சுளித்த 'பாஸ்தரிவும், சைனீஸ் நூடுல்ஸ¤ம் இப்போது உங்களுக்குப் பழகிப் போயிருக்கும். வீட்டிலும் செய்ய முயற்சி செய்திருப்பீர்கள். அது போலத்தான் 'மீன் வாசனை' என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
நான் சொல்லும் ஆலோசனையைக் கடைப்பிடித்துப் பாருங்கள். உங்கள் கணவரின் பெற்றோர் வருகையைச் சமாளிக்க, (இந்த சமையல் விஷயம் மட்டும் காரணமாக இருந்தால்) இது நிச்சயம் உதவும்.
உங்கள் கணவரை விட்டு உங்களுக்கு மிகவும் பிடிக்காத மாமிச உணவை (மீனோ, கறியோ) வாங்கிக் கொண்டு வரச் சொல்லுங்கள். (இதைப் படிக்கும்போதே நீங்கள் மூக்கைச் சுளிப்பது தெரிகிறது)
அந்தப் பாத்திரத்தின் மூடியைத் திறந்து வையுங்கள். கண்ணை மூடிக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த ஒரு கேசட்டைப் போட்டு இசையின் இனிமையை அனுபவியுங்கள்.
பிறகு கண்களைத் திறந்து அந்த உணவை நன்றாக உற்றுப் பாருங்கள். பிறகு அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றுங்கள். அதை மூடி அதன் மேல் ஒரு ஸ்டிக்கர் ஒட்டி ·ப்ரீசரில் வையுங்கள்.
மறுநாள் அந்த உணவை எடுத்து கண்ணை மூடிக் கொண்டு மறுபடியும் உங்களுக்குப் பிடித்த பாட்டைக் கேளுங்கள்.
மூன்றாம் நாள் கண்ணைத் திறந்து கொண்டு உணவை வெளியில் எடுத்து வைத்துப் பாட்டைக் கேளுங்கள்.
இப்படி ஒரு வாரம் ஐந்து நிமிடங்களுக்குப் பயிற்சி செய்து வந்தால் உங்களுக்கு அந்த வாசனை பழகிப் போய் விடும்.
உங்கள் மகனை எப்படி வளர்ப்பது என்பது நீங்களும் உங்கள் கணவரும் சேர்ந்து எடுக்கும் முடிவு. இதில் நீங்கள் திடமாக இருக்கலாம். இதை அவர் பெற்றோகளுக்கு அவர்கள் மனம் புண்படாமல் தெளிவாக. இதமாக எடுத்துச் சொன்னாலும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பின் குறிப்பு: அந்த மீன் குழம்பு உங்கள் பயிற்சியின் போது தினமும் கணிசமான அளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. பயப்படாதீர்கள். உங்கள் கணவர் ரகசியமாக ரசித்து, ருசித்திருந்திருப்பார்.
வாழ்த்துகள்.
அன்புடன், சித்ரா வைத்தீஸ்வரன் |