ஆப்பிள்
ஆப்பிள் மரம் முதன் முதலில் காகஸ் மலைப்பகுதியில் தோன்றியதாகத் தெரிகிறது.

தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் மருத்துவர் உதவி தேவையில்லை என்பது பழமொழி.

ஆப்பிள் பழத்தில் 1800 வகைகள் உள்ளன. பெரும்பாலும் சிகப்பு நிறம்தான் என்றாலும், மஞ்சள், பச்சை நிறங்களிலும் ஆப்பிள் கிடைக்கிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளில் ஆப்பிள் மரம் பெருமளவில் பயிராகிறது.

இந்தப் பழத்தின் தோல் பாகத்தில் தான் வைட்டமின் 'சி' சத்து அதிகமாக உள்ளது. (சதைப்பாகத்தில் இருப்பதை விட ஐந்து மடங்கு அதிகம்.)

இந்தப் பழம் நரம்புக்கும் மூளைக்கும் நல்ல உணவு. கல்லடைப்பான் (Calculus) என்ற நோய்க்கு நல்ல மருந்து. தொண்டைப்புண், வாயுத்தொந்தரவு, பித்தம், மலமிறுக்கம், மஞ்சள் காமாலை, பசியின்மை முதலிய நோய்களுக்கும் ஆப்பிளை மருந்தாகச் சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு வயிற்றுழைச்சல் நோய் கண்டால், ஆப்பிள் பழத்தைக் கூழாக்கி வயதிற்குத் தக்கவாறு கொடுக்கலாம். இப்பழத்திலுள்ள அமிலத்தன்மை ஜீரண உறுப்புகளில் ஏற்படும் இரணங்களைக் குணமாக்குகிறது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி இரண்டு பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மலக்கழிவு ஏற்படும்.

காய்ச்சல் நோய்க்கு ஆப்பிள் டீ (Apple tea) நல்ல மருந்தாகும். இரண்டு ஆப்பிள் பழங்களைத் தோலுடன் வெட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் லெமன் தோலுடன் கொதிக்க வைத்து இறுத்து குடிக்க வேண்டியதுதான். காய்ச்சல் காணாமல் போய்விடும்.

100 கிராம் ஆப்பிளில் உள்ள சத்துகள்

புரதம் - 0.3%
கொழுப்பு - 0.1%
சுண்ணாம்பு - 0.01%
எரியம் - 0.02%
இரும்பு - 1.7%
மாலிக் அமிலச்சத்து - 0.19 முதல்1.11%
இனிப்புச்சத்து - 9 முதல் 21%
பழச்சர்க்கரை - 60%
குளுகோஸ் - 25%
கரும்புச் சர்க்கரை - 15%

*****


ஆப்பிள் மில்க் ஷேக்

தேவையான பொருள்கள்:

ஆப்பிள் - 1/4 கிலோ
க்ரீம் கலந்த பால் - 2 கிண்ணம்
சர்க்கரை - 10 தேக்கரண்டி
தண்ணீர் - 1 கிண்ணம்

செய்முறை:

ஆப்பிளை தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். (கொட்டையை நீக்கி விடவும்) இந்தத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ளுங்கள். ஓரளவு ஆப்பிள் துண்டுகள் மசிந்த பிறகு அத்துடன் பால், சர்க்கரை மற்றும் ஒரு கிண்ணம் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

தேவைப்பட்டால் ஐஸ் சேர்த்துக் கொள்ளலாம். வேறு பாத்திரத்தில் மாற்றி மூன்று நிமிடங்களுக்கு இதை நன்றாக அடித்துக் கலக்குங்கள். ஜில்லான, டேஸ்டான, சத்தான ஆப்பிள் மில்க் ஷேக் தயார்!

காந்திமதி

© TamilOnline.com