பூரணம் செய்யத் தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 1 கிண்ணம் பொடித்த வெல்லம் - 1 கிண்ணத்திற்கு கொஞ்சம் குறைவாக ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு கனமான பாத்திரத்தில் துருவிய தேங்காயையும் வெல்லத்தையும் போட்டு அடுப்பிலேற்றி கலந்து கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்கக் கூடாது. அடுப்பை லேசான தீயில் வைத்து கைவிடாமல் கிளறிக்கொண்டேயிருங்கள். வெல்லம் இளகி தேங்காயோடு சேர்ந்து கெட்டிப் பதம் வரும்வரை கிளறவும். பூரணத்தைப் பெருவிரலுக்கும் ஆள்காட்டிவிரலுக்கும் இடையே எடுத்தால் கையில் லேசாக ஒட்டும் பதத்தில் இருக்கவேண்டும். அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு அத்துடன் ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மேல்மாவு செய்யத் தேவையான பொருட்கள்:
மாவு - 1 கிண்ணம் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி தண்ணீர் - 1/4 கிண்ணம் புளி (பொடி) - ஒரு சிட்டிகை
செய்முறை:
மேலே சொன்ன பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மாவைப் பதமாகப் பிசைந்து கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் மாவை ஊற விடுங்கள்.
போலி செய்யும் முறை:
மேல் மாவில் ஒரு சிறு உருண்டை எடுத்துத் தட்டையாகத் தட்டிக் கொள்ளுங்கள் (சப்பாத்தி மாதிரி) இதன் நடுவில் ஒரு சிறு உருண்டை அளவு தேங்காய் பூரணத்தை வைத்து முழுவதுமாக அதை மூடிவிடுங்கள்.
தேங்காய் பூரணம் உள்ளே வைக்கப் பட்டு மூடிய மாவை மீண்டும் உருண்டையாக உருட்டி ஓரங்கள் உடையாத படி மெல்லிதாகத் தேய்த்துக் கொள்ளுங்கள்.
இப்படித் தட்டும்போது அடியில் ஒரு பிளாஸ்டிக் தாளை விரித்துக் கொள்வது நல்லது. இதை, சூடாக்கிய தோசைக் கல்லில் போட்டு எடுத்துவிடுங்கள்.
இதே போல் ஒவ்வொன்றாக மேல்மாவையும் பூரணத்தையும் உருட்டி சிறு சிறு போலிகளாகச் செய்துகொள்ளுங்கள்.
இதைச் சிறிதளவு சூடான நெய்யோடு சேர்த்துச் சாப்பிட்டால் சுவை அதிகமாக இருக்கும்.
சரஸ்வதி தியாகராஜன் |