"தரமான படங்களை தயாரிப்பேன்" - தயாரிப்பாளர் கணேஷ் ரகு
சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், அமெரிக்காவில் தனக்கென்று சொந்தமாக ஒரு சா·ப்ட்வேர் கம்ப்யூட்டர் நிறுவனத்தை நடத்திக் கொண்டு செட்டில் ஆனவர் கணேஷ் ரகு. ஆறு வருடங்களுக்கு முன்னால்தான் திரைத்துறையின் மாயாஜாலத்தால் ஈர்க்கப்பட்டு ஒரு தயாரிப்பாள ராகச் சென்னையில் தரையிறங்கினார். வெளி நாட்டில் வாழும் சில இந்தியர்களைப் பங்கு தாரர்களாக ஆக்கிக் கொண்டு 'அபராஜித் ·பிலிம்ஸ்' என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனத்தை ஏற்படுத்தினார். இந்த நிறுவனத்தின் பெயரில் 'நந்தா', மற்றும் 'மெளனம் பேசியதே' என்ற இரண்டு படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். நல்ல, தரமான படங்களை மட்டுமே தயாரிப்பதில் இந்தத் தயாரிப்பாளர் ஓரளவுக்கு வெற்றியும் கண்டிருக்கிறார். ஐஸ்வர்யாராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, தனது அடுத்த படத்தின் தயாரிப்பில் மும்முரமாக இறங்கியிருக்கும் கணேஷை 'தென்றல்' இதழுக்காகச் சந்தித்தோம்.

கே : சினிமாவின் மீது உங்களுக்கு ஆர்வம் எப்படி வந்தது?

ப : நான் பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே தியேட்ட ருக்குப் போய் நிறைய சினிமா பார்ப்பேன். சினிமா என்கிற மாயாஜாலம் அந்த வயசிலேயே என்னை ரொம்பவும் ஈர்த்தது. ஆனா, கம்ப்யூட்டர் சா·ப்ட்வேர், என் வாழ்க்கையின் முக்கிய அங்கமா இருந்ததால யு.எஸ். போனேன். அங்கே போயும் நான் நிறைய படங்கள் பார்த்தேன். இப்போ வெளியாகுற படங்களில் பெரும்பாலான படங்கள் சின்னக் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஏற்றது இல்லைங்கறதை நான் கண்டுபிடிச்சேன். 'சேது' படம் எனக்கு ரொம்பவே பிடிச்சது. அந்தப் படத்தோட இயக்குநர் பாலாவை நான் உடனடியா தொடர்பு கொண்டு, எங்களுக்காக ஒரு படம் பண்ணித் தரணும்னு கேட்டேன். அதோட விளைவுதான் 'நந்தா'. அந்தப் படம் பரபரப்பா பேசப்பட்டிருந்தாலும், எங்களுக்கு இலாபம் தேடித் தரலை. ஆனா, எங்க நிறுவனம் தரமான படங்களைத்தான் தயாரிக்கும்ங்கற நல்லபெயரை சம்பாதிச்சுக்கொடுத்திருக்கு. அதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம்.

கே : அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் இரண்டாவது படத்தைத் தயாரிக்கக் காரணம் என்ன?

ப : ஒரு படத்தோட வெற்றியில், உதவி இயக்குநர்கள் மற்றும் காட்சி எழுதுபவர்களின் பங்கு அதிகமாவே இருக்கு. ஆனா, அவங்க உழைப்புக்குத் தகுதி யானதை இந்தத் துறை கொடுக்கறதில்லை. நந்தா படம் எடுத்துக்கிட்டிருந்தப்போ, பாலாவோட உதவியாளரா இருந்த அமீரை நான் பக்கத்திலிருந்து பலமுறை கவனிச்சிருக்கேன். அவரோட தொழில் நேர்மையும், ஈடுபாடும் என்னை ரொம்பவே ஈர்த்தது. அவர் எனக்கு ஒரு கதை சொன்னார். அது எனக்கு பிடிச்சிருந்தது. அந்தப் படம்தான் 'மெளனம் பேசியதே'. சூர்யாவுக்கு ஜோடியா லைலாவை நடிக்க வைக்க விரும்பறதா அமீர் சொன்னார். உங்க கற்பனைக்கும், கதைக்கும் ஏற்றபடி யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கன்னு அவருக்கு நான் முழு சுதந்திரம் கொடுத்தேன். இந்தப் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்திருக்கு. பொங்கலுக்கு வெளியான மற்ற படங்களோட ஒப்பிடும்போது, இந்தப் படம் இன்னமும் 28 திரையரங்குகள்ல ஓடிக் கிட்டிருக்கு.

கே : படப்பிடிப்பின் போது அமீரோடு பிரச்சினை ஏற்பட்டதாக செய்தி வந்ததே. உண்மையா?

ப : அது உண்மைன்னா, இப்படி ஒரு பிரமாதமான படம் உருவாகியிருக்க முடியாதே! கதை விவாதிக்கும் போது சில கருத்து வேறுபாடுகள் இருந்ததுங்கறதை நான் ஒத்துக்கறேன். ஆனா, இது எல்லா நேரங்களிலேயும் நடக்கறதுதான். ஒரு படத்தை உருவாக்கறதுங்கறது ஒரு குழுவா இணைஞ்சு செயல்படற விஷயம். படப்பிடிப்பு நடக்கற இடத்துல எப்பவுமே நான் முதலாளி மாதிரி நடக்க முயற்சிக்க மாட்டேன். நாங்க எல்லாருமே நண்பர்கள்தான்.

கே : ஒளிப்பதிவாளர் ரத்தினவேலுவுடனும் ஏதோ பிரச்சனையென்று...?

ப : 'நந்தா' படத்தின் மூலம் ரத்தினவேலுவுக்குப் பாராட்டும், விருதுகளும் நிறையவே கிடைத்தன. அதனாலேயே இரண்டாவது படத்திற்கும் அவரையே ஒளிப்பதிவாளராக அமர்த்தியிருந்தோம். அவருக்கு ஏழு லட்ச ரூபாய் சம்பளம் பேசி முன்பணமும் கொடுத்து விட்டோம். சில நாட்கள் எங்களோடு வேலை செய்தார். வேறு ஒரு அழைப்பு வந்ததும் இங்கிருந்து சென்றுவிட்டார். அநேகமாக இதை விட அங்கு அவருக்கு அதிக சம்பளம் கிடைத்திருக்கலாம். ஆனா, இந்தப் படத்திலிருந்து ஏன் வெளியேறுனாருன்னு எனக்குத் தெரியாது. சம்பளம் போதலையா? அல்லது அறிமுக இயக்குநருக்குக் கீழே வேலை பார்க்கணுமேன்னு நினைச்சாரான்னு தெரியலை. அவரு போனதுக்கப்புறம்தான், ஒளிப்பதி வாளரா ராம்ஜியை நியமிச்சோம். இப்போ அந்தப் படம் வெற்றியடைஞ்சிருக்கு. அதனால ரத்தினவேலு அவரோட முடிவுக்கு அவருதான் வருத்தப்படணுமே தவிர நானில்லை. இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னென்னா, பணத்தைக் கொட்டி சினிமா தயாரிக்கிற தயாரிப்பாளரோட கற்பனைச் சுதந்திரத்தையும், உதவியையும், ஒத்துழைப்பையும் ஒரு ஒளிப்பதிவாளருக்கு அனுமதிக்கத் தெரிஞ்சிருக்கணும்.

கே : மெளனம் பேசியதே வெற்றியடையும்னு நினைச்சீங்களா?

ப : நிச்சயமா! என் குடும்பத்துல நான் எட்டு பேர்ல ஒருவன். நாங்க பொருளாதாரத்துலே வலிமையான வங்கன்னும் சொல்லிட முடியாது. தன்னம்பிக்கையும், நேர்மையான எண்ணங்களும் இருந்ததாலதான் மேல்படிப்புக்காக யு.எஸ். போக முடிஞ்சது. அங்கே நான் சொந்தமா கம்ப்யூட்டர் சா·ப்ட்வேர் ஸ்தாபனம் ஆரம்பிச்சப்போ என்கிட்ட வெறும் 300 டாலர் தான் இருந்தது. இப்போ என்னோட ஸ்தாபனத்துல 150 சா·ப்ட் வேர் என்ஜினியர்கள் வேலை செய்றாங்க. உலகம் முழுக்க எங்களுக்கு கிளைகள் இருக்கு. இப்போ இந்த வியாபாரத்துல மொத்தம் 28 மில்லியன் டாலர் தொகை போடப்பட்டிருக்கு. இந்தத் தொழில் நிச்சயமா நல்லா வரும்னு எனக்கு உள்ளுணர்வு இருந்தது. அதுதான் நடந்திருக்கு. அதே மாதிரியான உள்ளுணர்வுதான் மெளனம் பேசியதே படம் எடுக்கும்போதும் இருந்தது.



ப : முதல் ப்ரிவ்யூ பார்த்த அத்தனை பேரிலும் ஒருத்தரோட விமர்சனம் கூட பாஸிடிவா இல்லை. ஒரு தெலுங்கு தயாரிப்பாளர், இந்தப்படம் ஓடவே ஓடாதுன்னு என்கிட்ட நேரடியா சொன்னார். ஏன்னா இந்தப் படத்துல சண்டைக்காட்சியோ, 'அந்த' மாதிரியான நடனக்காட்சிகளோ இல்லை. ஆனா, இன்னைக்கு அதே தயாரிப்பாளர் தெலுங்கில் இந்தப் படத்தை மகேஷை வைத்துத் திரும்ப எடுக்க உரிமம் கேட்கறார்.

கே : அடுத்த தயாரிப்பு...

ப : ஐஸ்வர்யாராயை அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறேன். இயக்குநர் மஹாராஜன் இந்தப் படத்தை இயக்குவார். கதாநாயகநாக நடிக்க விஜயகாந்தையும், விஜயையும் அணுகியிருக்கிறேன். இருவரில் ஒருவர்தான் என் அடுத்த படத்தின் கதாநாயகன்.


சந்திப்பு: க. காந்திமதி

© TamilOnline.com