"இது புத்திசாலிகளின் விளையாட்டு. இந்த விளையாட்டில் மட்டும்தான் உடல் பலத்திற்கோ, சண்டை சச்சரவுகளுக்கோ துளியும் இடமில்லை. மூளை பலத்தை மட்டுமே நம்பி களம் இறங்கினால் தான் வெற்றி பெற முடியும். அதனால்தான் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு அமெரிக்கா, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகள் இந்த விளையாட்டை மட்டும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டுள்ளன. இந்த விளையாட்டு நம்ம மண்ணுக்குச் சொந்தமானது என்பது நம் எல்லோருக்குமே பெருமை தரக் கூடிய விஷயம்'' என்கிறார், செஸ் விளையாட்டில் சர்வதேச அளவில் பெண்களுக்கான 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் பெற்ற ஆர்த்தி ராமசாமி.
சின்ன வயதிலேயே சர்வதேச அளவில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கும் ஆர்த்தியைச் சந்திக்க அவரது இல்லத்திற்குச் சென்றோம். கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் ஆர்த்தி பாராட்டு பெறும் படம், வீட்டு ஹாலில் பிரம்மாண்டமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. வழக்கம்போல், ''செஸ் விளையாட்டில் ஆர்வம் எப்படி வந்தது?'' என்ற கேள்வியோடு நேர்காணலைத் தொடங்கினோம்.
''அப்போ நான் சிதம்பரம் செட்டியார் மெட்ரி குலேஷன் ஸ்கூல்ல நான்காம் வகுப்பு படிச்சுக் கிட்டிருந்தேன். எங்க பள்ளியில செஸ் போட்டி நடத்தப்போறதா அறிவிச்சாங்க. விளையாட்டு தானேன்னு நினைச்சு நானும் என் பெயரைக் குடுத்திட்டேன். ஆனா, அந்த சமயத்துல எனக்கு செஸ்ஸைப் பற்றி ஒண்ணுமே தெரியாது. முன்னே பின்னே விளையாடிப் பழக்கமில்லை. அந்த நேரத்தில என் அண்ணன் ராஜாதான் செஸ் விளையாடச் சொல்லிக் கொடுத்தாரு. மூன்றே நாட்களுக்குள்ள விளையாட்டை கத்துகிட்டு, அந்தப் போட்டியில இரண்டாவது பரிசு வாங்கினேன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா? முதல்ல எனக்கே அது பெரிய ஆச்சர்யமா இருந்தது'' என்று சொல்லிச் சிரிக்கிறார் ஆர்த்தி.
இந்த வெற்றிக்குப் பிறகு, பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி செஸ் விளையாட்டில் எல்லோருமே ஆர்த்தியை ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். அதையடுத்து ஸ்ரீதரன் என்பவரிடம் முறையாக செஸ் கற்றுக் கொண்டு பயிற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார். ''அன்றிலிருந்து தான் நான் விளை யாட்டா நினைச்சிருந்த செஸ் என் எதிர்காலமா வாழ்க்கையா மாறத் தொடங்குச்சு'' என்று சொல்லியபடியே தன் வெற்றிகளைப் பட்டியலிடத் தொடங்கினார். 1993ல் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் முதல் இடம், 1995ல் மும்பையில் நடைபெற்ற U-14 Girls Championship போட்டியில் முதல் இடம், அதே வருடம் திருச்சூரில் நடைபெற்ற U-16 Girls Championship போட்டியில் முதல் இடம், 1997ல் U-16 Girls Championship பிரிவில் முதலிடம், 1999ல் நடைபெற்ற போட்டியில் ஜூனியர் சேம்பியன்ஷிப் பட்டம்...என்று நீண்டு கொண்டே சென்ற வெற்றிகளின் ஒவ்வொரு நிலையிலும், ஸ்ரீதர், முரளிமோகன், ராமச்சந்திரன், ஆர்.பி. ரமேஷ் போன்ற பயிற்சியாளர்கள் ஆர்த்திக்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.
பயிற்சியாளர்களின் உறுதுணை ஒருபக்கம் இருக்கட்டும், உங்கள் வீட்டில் எப்படி? என்று கேட்டதற்கு, ''என் அம்மாவும் அப்பாவும் எனக்கு ரொம்பவே ஊக்கம் கொடுக்கறாங்க. செஸ் விளையாட்டுல நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கேன்னா அதுக்கு முதல் காரணம் எனக்கு இந்த விளையாட்டை அறிமுகப்படுத்திய என்னோட முதல் குரு, அண்ணன் ராஜாதான். என்னோட ஒவ்வொரு வெற்றியிலேயும் முதல் பெருமையும் சந்தோஷமும் அவருக்குத்தான். இப்பவும் எனக்குப் பல வழிகளில் அறிவுரை சொல்லி ஊக்கப்படுத்துவாரு. எனக்கு நண்பர்கள் மிகக் குறைவு. பள்ளிக்கூடத்திலிருந்தே இப்போது வரை மூன்றே மூன்று சிநேகிதிகள்தான் எனக்கு. அவங்களும் என் விளையாட்டு ஆர்வத்தை நல்லாப் புரிஞ்சு வைச்சு எனக்கு ஊக்கம் கொடுப்பாங்க. அதனால, ·ப்ரெண்ட்ஸோட ஊர் சுத்தறது, பொழுதைப் போக்கறது மாதிரியான விஷயங்களிலெல்லாம் நான் அதிகமா நேரம் செலவழிக்க மாட்டேன். இப்படி ஒரு சூழ்நிலை அமைஞ்சது என் வெற்றியின் ரகசியம் மட்டுமல்ல கடவுள் கொடுத்த வரமும் கூடத்தான்'' என்று நன்றிப் பெருமூச்சு விடுகிறார்.
ஆர்த்தியின் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே அந்தக் கேள்வி உறுத்திக்கொண்டிருந்தது. ஆனந்திடம் நீங்கள் பாராட்டு பெறுவதுபோல் உள்ள அந்தப் படம் எப்போது எடுக்கப்பட்டது? எந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் அவரைச் சந்தித்திருக்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டோம்.
'என்றுமே மறக்க முடியாத இனிமையான நாள் அது', என்றபடி பழைய ஞாபகங்களில் மூழ்கினார். ''அப்போ (1999ல்) நான் சர்வதேச அளவிலான U-18 Girls Championship பட்டம் வாங்கியிருந்தேன். என்னோட அந்த வெற்றிக்குப் பாராட்டு தெரிவிக்கிறதுக்காக, ஆனந்த் என்னை அவங்க வீட்டுக்கு அழைச்சிருந்தாங்க. அந்தப் பாராட்டோடு கிடைச்ச பரிசுதான் இந்த சந்தனத்தாலான செஸ் போர்டு'' என்று பெருமையாகச் சொல்லி அதை எடுத்துக் காட்டினார் ஆர்த்தி.
''அது மட்டுமில்லை, 1998-99ல் சென்னை ரஷ்யன் கல்சர் அகாடமியில் கண்காட்சிப் போட்டி ஒண்ணு நடத்தினாங்க. அதில ஆறு பேர்ல ஒருத்தியா நானும் கலந்துகிட்டேன். அப்போதான் எனக்கு ஆன்ந்தோடு விளையாடும் வாய்ப்பு கிடைச்சது. அவர்கிட்ட பாராட்டும் பரிசும் வாங்கினது மட்டும் சந்தோஷமில்லை. அவ்வளவு திறமையான ப்ளேயரோட விளையாடும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைச்சதுதான் உண்மையான திருப்பிதியும் சந்தோஷமும்,'' என்கிறார் ஆர்த்தி.
இந்தியாவின் பல மாநிலங்களுக்கு மட்டுமின்றி, சிங்கப்பூர், ஸ்பெயின், ஹங்கேரி போன்ற வெளி நாடுகளுக்கும் சென்று செஸ்போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்து வருகிறார். ''தினமும் மூன்று மணி நேரம் பயிற்சி செய்கிறேன். இந்த விளையாட்டு விளையாடும் போது மனசுல வேறெந்த டென்ஷனும் இருக்கக் கூடாது. மனசை ஒருநிலைப் படுத்தி முழு கவனத்தோட இதை விளையாடணும். அதுக்குக் கடுமையான பயிற்சி தேவை. பொறுமையை வளர்த்துக்கிறதாலயும், மனசை என் கட்டுப்பாட்டுக்குள்ள வைச்சு, பதட்டமில்லாம தெளிவா இருக்கிறதாலயும்தான் எந்த நாட்டில் யார் கூட விளையாடினாலும் என்னால சிறப்பா விளையாட முடியுது'' என்று உறுதியோடு செல்கிறார்.
சாதனைகள் படைக்கும்போது விருதுகள் இவரைத் தேடி வரும்தானே! K.K.Birla Foundation Award for sports-2000 விருதும், 1999ல் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் நிறுவனம் வழங்கிய Young Avheiver விருதும் இவர் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை.
பெண்களுக்கான கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெறுவதுதான் ஆர்த்தியின் நீண்ட நாள் கனவாகவும் இலட்சியமாகவும் இருந்திருக்கிறது. அந்தக் கனவை நனவாக்கிவிட்டதில் மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கிறார். சென்னை குரோம்பேட்டையிலுள்ள வைஷ்ணவா கல்லூரியில் BBA பட்டம் பெற்ற இவர் தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் Human Resource Management துறையில் படித்து வருகிறார். மனிதவளத்துறையில் அதிக கவனம் செலுத்தி, புதுமை படைக்க வேண்டும் என்பது இவருடைய ஆசையாக இருந்தாலும், அதை விட முக்கியமானதாக செஸ் விளையாட்டைக் கருதுவதால் தொடர்ந்து இப்போதும் செஸ்ஸில்தான் கவனம் செலுத்துகிறார்.
பெற்றோரும், குடும்பத்தாரும், உறவினரும் மட்டுமல்லாமல் நாடே பெருமைப்படும் வகையில் சாதனை படைத்திருக்கும் ஆர்த்தி, மேலும் மேலும் நிறைய வெற்றிகளைக் குவித்துப் பெருமை தேடித்தரவேண்டும் என்று எங்கள் வாழ்த்தைச் சொல்லிவிட்டு விடைபெறும் நேரத்தில் தான் ஆர்த்தியைப் பற்றிய முக்கியமான தகவல் ஒன்று கிடைத்தது.
இவர் வேறுயாருமல்ல... குழந்தைகளுக்காக எண்ணிலடங்கா பாடல்களை எழுதிக் குழந்தைக் கவிஞர் என்றே அழைக்கப்பட்ட அழ. வள்ளியப்பா அவர்களின் பேத்திதான் இவர்.
சந்திப்பு:கேடிஸ்ரீ |