அவர்களது துயரம்
அந்தச் செய்தி அவருக்கு சிறிது நம்பிக்கை தருவதாயிருந்தது.

''அவர்கள் அந்தக் காடேறியள்... போகேக்கை பிடிச்ச இளம் பெடியனை விடுறாங்களாம்... அல்லப்பிட்டியிலை; சைவப் பள்ளிக்கூடத்திலையும், அலுமினியத் தொழிற்சாலையிலையும் 'காம்ப்' போட்டிருக்கிறாங்களாம்...''

தருமர்தான் அந்தச் செய்தியைச் சொன்னார்.

'தருமருக்கு இதை ஆர் சொல்லியிருப்பினம்... தகவல் சரியாய் இருக்குமா..?'

முகத்தார் அமைதி இழந்து தவித்தார்.

தருமர் மட்டுமல்ல, சிவத்தாரும் அந்தச் செய்தி யுடன்தான் முன் திண்ணைக்கு வந்தார்.

திண்ணையில் ஊரே கூடியிருந்தது. கொட்டு தோட்டத்துச் சிவக்கொழுந்து, விசாலாட்சி, கதிரித்தம்பி, நாவலடிப்புலத்துச் செல்லப்பா, கந்தையா, அருமை, அருமை பெண்சாதி தவம், மொண்டித்துறை நவம், நடராசா, பசுபதி, நொச்சிக்காட்டுக் குணம், குணம்பெண்சாதி மதி. சோளாவத்தை செல்லர், சண்முகம் என்று பலர். திண்ணை நிரம்பி முற்றத்திலும் இருந்தார்கள்.

தாரணியும் கமலமும்கூட தாவாடிப்பக்கமிருந்து வந்திருந்தார்கள். தாரணியின் சிநேகிதி வதனியும் வந்திருந்தாள்.

கமலத்தின் மடியில் தலைவைத்துப் பவளம் படுத்திருந்தாள். தாரணி பவளத்துக்கு விசுக்கிக் கொண்டிருந்தாள். கமலம் பவளத்தைப் பார்த்துச் சொன்னாள்;

''மச்சான் என்ன செய்யுது... கொஞ்சம் தண்ணி போட்டுத் தரட்டுமா..? நேற்றையிலை இருந்து அன்ன ஆகாரமில்லாமல் பட்டினி கிடக்கேலுமா...? தம்பி தயாளனுக்கு ஒண்டும் நடவாது... அவன் சுகமாயிருப்பான்... உயிராபத்திராது... நாம கும்பிடுகிற தெய்வம் பிள்ளையைக் கொண்டு வந்து தரும்...''

பவளம் விம்மினாள். அவளது விம்மல் ஒலி கூடத்திலிருந்து வெளித் திண்ணை வரை கேட்டது. அந்த விம்மலில் தோய்ந்திருந்த துயரம், தாரையாய் அந்தச் சூழலையே கவிந்து அழுத்தியது.

முகத்தாருக்கு இருப்புக் கொள்ளவில்லை. கலக்கத்துடன் எழுந்து உள்ளே வந்தார்.

''பிள்ளை பவளம்... தருமர் ஒரு செய்தியோடை வந்திருக்கிறார்... நல்ல செய்தியெணை... அல்லைப் பிட்டிப் பக்கம் போனால் தம்பியைக் கூட்டிக் கொண்டு வரலாம் போலக் கிடக்கு... ஆர்மிக்காரங்கள் பிடிச்ச பெடியங்களை விடுறாங்களாம்...''

பவளம் எழுந்து உட்கார்ந்து கொண்டாள். அவிழ்ந்து கிடந்த கூந்தலை அள்ளி முடித்துக் கொண்டாள்.

அழுது அழுது அவளது முகம் வீங்கி இருந்தது. கண்களின் அடிமடல்கள் அதைப்படைந்து கருமை கொண்டிருந்தன.

அவளுக்கு முகத்தாரின் பேச்சும் பார்வையும், எல்லா வேதனையையும் சட்டென நீக்கியதான ஒரு தெளிவைத் தந்தது. இரு கரங்களையும் அவரது பக்காக நீட்டி, அவரது கைகளை ஆதரவாகப் பற்றியபடி கூறினாள்.

''போயிற்று வாருங்கப்பா... என்ரை பிள்ளையைக் கையோட கூட்டிக் கொண்ட வாருங்க... பட்ட வேம்பான் துணையாவருவான்... அப்பனுக்கு சித்திரை வருஷத்தோட தம்பீன்ரை பேரிலை பொங்கலும் படையலும் வைப்பம்...''

அடுக்களைப் பக்கமிருந்து தாரணி இரண்டு பேணிகளில் தேநீர் கொண்டு வந்தாள். வதனி அவளது தோள்களைப் பற்றியபடி கூடவே வந்தாள்.

தேநீரில் ஒரு மிடறு விழுங்கியதுமே பவளம் மாமிக்கு விக்கல் எடுத்தது. கமலம் உச்சியில் லேசாகத் தட்டி மாமியை ஆசுவாசப்படுத்தினாள்.

''என்ரை செல்வம்... தவமிருந்து பெற்ற திரவியம்... பட்டினி தான் கிடக்குது போலை... அந்தக் கொள்ளேலை போறவங்கள் என்ரை ராசனுக்கு ஏதென் தின்னக் கின்னக் கொடுப்பாங்களா கமலம்..''

கமலத்தாள் தாளமுடியவில்லை, கலங்கி அழுதாள்.

தாரணியின் கையில் இருந்த தேநீரை வாங்கிக் கொண்ட முகத்தார் அவளது தலையை அன்புடன் தடவிக் கொடுத்தார்.

கண்கலங்கிய தாரணிக்கு எல்லாமே பொய்யாய் கலைந்துபோன கனவு போல இருந்தது.

போன வெள்ளிக்கிழமை தான் அது நடந்தது. வைரவ கோயிலுக்குப் போய் வந்த தயாளன் - தனது அறையில் நுழைந்தபோது - தாரணி அங்கு ஏதோ படித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

'விபூதி பிரசாதம் எடம்மா...'' அவன் கூற - அவள் முகத்தைத் தூக்கி அவனைப் பார்த்தாள்.

அந்தப் பார்வையின் உதைப்பில் அள்ளுண்டு ஒரு கணம் கிறுங்கித் தவித்தவன், அடுத்த கணங்களில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.

அவனது கையிலிருந்த விபூதியை அவங்ள எடுத்துப் பூசிக் கொண்டாள்.

''சந்தனம்...?''

''பூசிவிடுங்க தயா...''

அவன் அதை எதிர்பார்க்கவில்லை. சந்தனத்தை சுட்டு விரலில் எடுத்து, அவளது நெற்றியில் - சுருளாய்ப் புரளும் கூந்தலை நீவி ஒதுக்கியபடி - இட்டாள்.

''தாங்ஸ்''

தாரணி ஒசிந்து, ஒரு பார்வை பார்த்து முறுவலித்தாள்.

அந்த முறுவலில் எத்தனை அர்த்தங்கள் இழைந்தன. எதேச்சையாக அப்பக்கம் வந்த முகத்தார் அந்த உயிரோட்டமான நாடகத்தை ரசிப்புடன் பார்த்தார்.

தயாளனுக்குத் தாரணி தான் என முன்னர் முடிவு செய்து கொண்டதை, அன்று அவர் உறுதி செய்து கொண்டார்.

அவரது நிழலைக் கண்டதும் தாரணி அறையை விட்டு, வெளியே வந்து, பவளம் மாமியிடம் போனாள்.

பசுமையாகி விட்ட நினைவுகள் மீளவும் ஞாபகம் வர, முகத்தாருக்கு மனசு முட்டிக் கொண்டு வந்தது. விம்மலைச் சால்வைத் தலைப்பால் அழுத்தி அடக்கிக் கொண்டு வெளியே வந்தார்.

அவரைக் கண்டதும், துக்கம் விசாரிக்க வந்தவர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டார். சில பெண்கள் கூடத்தின் உள்ளாக வந்து, பவளத்திடமும் ஆறுதல் கூறி விடைப்பெற்றுக் கொண்டார்கள்.

'ஒரு அலுவல் தம்பி நில்லும்...' என முகத்தார் கேட்டதால், சிவராசா மட்டும் நின்றான்.

'சிவராசாவா கூட வரப்போறான், நல்லது. அவனுக்குச் சிங்களமும் தெரியும்... அவங்களோட கதைக்க உதவியா இருக்கும். கனஆக்கள் போறதும் நல்லதில்லை... எதுக்கும் கடவுளிலை பாரத்தைப் போட்டிட்டு போயிற்று வாருங்க''

தரமரின் குரல் சுரத்தற்றுக் கரகரத்தது.

சூடம் கொழுத்தி, பட்டப்வேம்பானுக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்த முகத்தாருக்கு உடல் பதறியது. மனம் கசிந்து கரைந்து 'மகனே' என்று புலம்பினார்.

''பதினேழு வருஷங்களுக்கு முந்தி இப்படித் தான் மனசு உருக வைரவரை வணங்கியது. பவளம் துணையா வர, தயாளனைத் தோளில் துக்கிவைத்தபடி வந்து, தம்பு வாத்தியார் அவனுக்கு ஏடு தொடக்கப் பாத்திருந்தது. எல்லாமே இப்ப நடந்தது போல இருக்கு. அப்ப ஓங்காரத்துடன் ஆரம்பமான அவனது படிப்பு தடைப்படாமல் தொடர்ந்து, மருத்துவ பீட மாணவனா அவனை ஆக்கி இருக்குது.''

''அந்தப் பெட்டை தாரணிக்கும் கைராசிக்காரரான தம்பு வாத்தியார் தான் ஏடு தொடக்கினவர், பிள்ளையும் வளந்து, படிச்சி ஏ.எல். பாஸ் பண்ணீற்றாள். அவளுக்கும் மெடிசின் கிடைக்கும். உந்தக் குஞ்சுகள் படிச்சு முடிச்சு குடியும் குடித்தனமுமா ஆகிவிட்டால் சிவனே எண்டு கண்ணை மூடலாம்.'

நினைவுகள் அவருக்குப் பயம் தருவதாய் இருந்தன.

கிழக்காகப் பரந்து கிடக்கும் உயரப்புலம், பனந்தோட்டத்தின் ஊடாக வகிடிட்ட ஒற்றையடிப் பாதையில் இறங்கி, அவரும் சிவராசாவும் நடந்தனர். காற்று ஈரமாக எல்லாவற்றிலும் உட்கார்ந்திருந்தது. பனை மரங்களின் சலசலப்புக் கூட இல்லை. கிழக்காக இருந்த உசரியொன்றில் 'டக்டக்' எனும் ஓசை. பாலன் பானை தட்டுகிறானா? நின்று நிதானித்துப் பார்க்க அவருக்கு நேரமில்லை. ஒற்றையாய் ஒரு மரக்கொத்தி தனது சொண்டின் கூர்மையைப் பதம் பார்த்துக் கொள்வதாகக் கூடி இருக்கலாம். மண்கும்பான் வீதியில் ஏறியதும் மேற்குச் சாய்வில் வேதப்பள்ளிக் கூடம் தெரிந்தது. பள்ளிக்கூடத்துக்கு முன்பாக கிளைபரப்பிச் சடைத்து அரசோச்சி நிற்கும் அந்த புளியமரத்தைப் பார்த்தார். ஒரு மூன்று தலைமுறைக்குச் சாட்சியாய் நிற்கும் அந்த மரம்; அதன் வடக்குப் பார்த்த கிளைகள் ஏன் பிளந்து, சரிந்து கருகிக் கிடக்கின்றன? 'நேற்று முன்தினம் படையினர் நகர்ந்த போது பொம்மரோ அல்லது ஷெல்லோ தான் தாக்கியிருக்க வேண்டும்' என நினைத்துக் கொண்டார்.

அவருடைய தகப்பனார் கந்தப்புவும், அவரும், ஏன் அவரது பிள்ளை தயாளனும், அந்த மரத்தின் புளிப்புச்சுவை மிகுந்த பழங்களை சுவைத்திருப்பது அவருக்கு நிச்சயமாய்த் தெரியும். அந்தக் கிராமத்தின் எந்தப்பிள்ளை எறிந்த கல் அந்த மரத்தில் படாமல் இருந்திருக்க முடியும்.

பழசில் அவரது மனசு ஒரு கணம் தோய்ந்து போகிறது.

புளிய மரத்திற்குத் தெற்காக - உதவி அரசாங்க அதிபர் பணிமனை இருந்த இடத்தில் - கற்குவியலும், சிதறிச் சின்னா பின்னமாகிப் போன அஸ்பெஸ்ரஸ் தகடுகளும் தான் கிடந்தன.

பிள்ளைப்பேறு மருத்துவமனை மட்டும் காயங்கள் ஏதுமற்றுத் தப்பியிருந்தது. வீதியிலிருந்து சற்று உள்ளாக அது இருந்ததால் தப்பிக் கொண்டது போலும்.

கோட்டக் கல்விக் கத்தோரின் முன்பக்கம் உடைந்து, மண்டபம் முழுமையும் மழைநீர் தேங்கி இருந்தது. தேங்கிய நீரில் மிதக்கும் ·பைல்கள் தெப்பமாய் நனைந்த நிலையில்...

புறக்காட்சிகள் எதிலுமே அக்கறைப் படாதவராய் முகத்தார் நடந்தார். இருவருமே தாழிபுலத்தை அடைந்தபோது மயிலர் ஏதிரே வந்தார்.

''ஆறுமுகம்...!''

அவரது குரல் கனத்துக் கிடந்தது.

''மயில்வாகனம் கதை தெரியுமா... என்ரை... என்ரைபிள்ளை...''

விசும்பினார்.

அருகாம வந்த மயிலர், முகத்தாரை ஆதுரம் ததும்பப் பார்த்தபடி சொன்னார் :

''பாரத்தை அந்தப் பரம்பொளிட்டைப்போடும். சர்வவியாபகி அவன். அவன் எல்லாத்தையும் பாப்பான். யாழ்ப்பாணத்திலை நீண்ட பொடியன் இஞ்சையேன் அவசரப்பட்டு வந்தவன்...?''

''தமிழுக்கு வியாழபகை... அட்டமத்திலை வியாழன். அதோடை சனியின்ரை பார்வையும் அப்படி இப்படித்தான்...''

''கவலைப்படாதை ஆறுமுகம். கடவுளை நினையும். எல்லாம் சரியாய் நடக்கும். நானும் வீட்டுப்பக்கம் தான் போறன்... பவளத்தைப் பார்க்கவேணும் போலை... அவள் பெட்டை திகைச்சுப் போய்க்கிடப்பாள்...''

பிரிந்து நடந்தனர்.

''செட்டிப்புலப்பக்கம் போய் ஜயனாரையும் கும்பிட்டிட்டுப் போவம்...''

''ம்..'' சிவராசாவின் பதிலில் சலிப்பு இருந்தது.

கடற்கரைச் சந்தியில், சித்தர் கடையில் சிவராசா பீடி பற்றிக் கொண்டான்.

முகத்தாருக்கு வாய் ஊறலெடுத்தது 'வெற்றிலை போடுவமா...' என யோசித்தார். அடுத்த கணம், 'என்ரை பிள்ளை... அவனுக்கு என்ன நடந்ததோ...' என நினைத்துக் கொண்டவராய் அந்த ஆசையை அடக்கிக் கொண்டார்.

சந்தியில் இருந்து கிழக்காகப் பிரியும் கை ஒழுங்கையில் இறங்கி நடந்தபோது, கடற்கரை தெரிந்தது. ஐயனார் கோயிலும் தெரிந்தது.

ஒழுங்கையில் சின்னையா சிறுதிரளிக் கோர்வையும் கையுமாக...

''சின்னையா...!''

''ஐயா, தம்பிக்கு சிறுதிரளியும், விளையும் நல்ல விருப்பம். அதுவும் இளசாய்...''

''உனக்கும் தெரியுமா... ஆர் சொன்னது...? தம்பியைக் கூப்பிடத்தான் போறன்.''

''ஐயனாரப்பு காப்பாற்றுவார்...'

அவர்கள் போவதற்கு சின்னையா ஒதுங்கி நின்று வழி விட்டான்.

ஐயனார் கோயில் பூட்டிக்கிடந்தது. முத்து ஐயரால் என்ன செய்ய முடியும்? மூன்று கோயில்களை அவர் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அத்துடன் அவர் தர்மபத்தினி ஜகதாவுடன் குடும்பம் நடத்துவதோடு, புதிதாக ராணி எனும் 'சூத்திராளுடன்' சிநேகம் வேறு வைத்திருக்கிறார். பாவம் அவரால் நேரப்பிரகாரம் எதுவும் செய்யமுடிவதில்லை.

முகத்தார் வெளிப்பிரகாரத்தில் நின்று ஐயனாரை வணங்கினார்.

கடலோரம் நடந்து சுடலையை நெருங்கியபோது, சாட்டி மாதாகோயில் தெரிந்தது. சனப்புளக்கம் இருந்தது. 'கரம்பன், நாரந்தனை, சின்னமடுப் பக்கம் இருந்து இடம் பெயர்ந்த சனமாக இருக்கும்' என நினைத்தபடி நடந்தார். சிவராசுவும் எதுவித நோக்கமுமற்றவனாய் அவருடன் தொடர்ந்து நடந்தான்.

'கடற்கரைவீதியி¡ல் அல்லைப்பிட்டிச் சைவப் பள்ளிக்கூடம் வரை போவதா..? அல்லது அல்லைப் பிட்டிச்சந்தி கடந்து அலுமினியத் தொழிற்சாலைக்குப் போவதா...?'' முகத்தாருக்கு குழப்பமாக இருந்தது.

'எதுக்கும் பள்ளிவாசலடியில் விசாரிச்சு அறிவம்..'' என நினைத்தவரை, வழிமறிப்பதுபோல வைத்தி எதிரே வந்தான்.

''வினாசியற்றை சிவலோகனையும் பிடிச்சவங்களாம். ஆளை விட்டாங்களோ அல்லது பொடி தம்பி வந்ததோ தெரியாது; ஆள் வந்திட்டுதாம் தம்பி தயாளன்ரை பாடு...?''

''வரேல்லை வைத்தி, அதுதான் அல்லைப் பிட்டிப்பக்கம் போய்ப் பாப்பமெண்டு வந்தனான்...''

''அலுமினியத் தொழிற்சலையிலைதான் உலருணவு கொடுக்கிறாங்களாம். அங்கதான் அவங்களைக் கண்டு கதைக்கேலும். நாம் நினைச்சமூப்பிலை அங்கை இங்கை போகேலுமா?''

வைத்தியின் விளக்கம் மூகத்தாருக்குச் சரியாகவே பட்டது.

வைத்தி தொடர்ந்து கூறினான் ;

''பின்னேரம் மூண்டு மணிக்குத்தான் உலருணவு கொடுப்பாங்கள்... நானும் வாறன் போவம்...''

கூறிய வேகத்திலேயே அவன் விடை பெற்றுக் கொண்டான்.

அல்லைப்பிட்டிச் சந்திக்கு மேற்காக உள்ள, அந்தக் கைவிடப்பட்ட நீச்சல் குளத்தின் அருகில் இருந்துதான் 'கியூ' ஆரம்பமானது. முதியவர்களும், பெண்களும், சிறுபிள்ளைகளுமே வரிசையில் அதிகம் இருந்தார்கள். இளம் பருவத்தினர் எவரையும் காணவில்லை. பயம் காரணமாய் இருக்கலாம்.

''படையினர் வழங்கும் சொற்பமான வெள்ளைப் பச்சை அரிசிக்கும், கோதுமை மாவுக்கும், சிறங்கையளவு மைசூர்பருப்புக்கும் இவர்கள் ஏன் இப்படி ஆலாய்ப் பறக்கிறார்கள். சீ எங்களைச் சீரழிக்கும் இவர்களிடம் கையேந்தும் நிலை...''

முகத்தார் முனகிக் கொண்டார்.

வரிசையில் - வைத்தி, அடுத்துச் சிவராசா, பின்னால் முகத்தார் என அவர்கள் நின்றார்கள். வைத்தியின் கையில் இரண்டு சிறு உரப்பைகள். சிவராசா உரப்பை கொண்டு வராத மடமையையிட்டு அடிக்கொரு தடவை அங்கலாய்த்துக் கொண்டான். அவன் அதுபற்றி நசநசத்தது முகத்தாருக்கு எரிச்சலூட்டியது.

பார்த்திருந்த பொழுதே வானம் கருமுகில்களால் தன்னைப் போர்த்திக்கொண்டது. சிறு தூறலாய் மழை பெய்யத் தொடங்கியது. காற்றின் மெல்லிய மூச்சு, உடலை ஊசியாய்க்குத்தும் குளிர். முடிவற்ற நீடித்த துயரத்தின் குறியீடாய்...

சரியாக மூன்று மணிக்கு வரிசை நகர்ந்தது. அதற்கு அப்படி ஒரு அவசரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மெதுவாக, மிக மெதுவாக இரையை அதக்கி வைத்திருக்கும் ஒரு மலைப்பாமபு போல அசைந்தது. சிலவேளை அசையாமல் சோம்பிக் கிடந்தது.

நாலுமணியளவில், வரிசை அலுமினியத் தொழிற் சாலையை நெருங்கியது. கட்டடம் கூரை இல்லாமல் மூளியாய்கிடந்தது. சுவர்கள் மட்டும் குண்டுக் காயங்களுடன் இருந்தன. கட்டத்தின் முன்பாக அமைந்திருந்த கூடராத்தில் வைத்தே உலர்உணவு வழங்கப்பட்டது. வைத்தி வாங்கிக் கொண்டு நகர்ந்ததும், சிவராசாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சமயோசிதமாக தனது சட்டையைக் கழற்றி அதில் அரிசியையும், முகத்தாருடைய தோளில் கிடந்த சால்வையை எடுத்து மாவையும் வாங்கிக்கொண்டான். பருப்பை எதில் வாங்குவது எனத் தயங்கியவன், அதை வாங்கி வேட்டி மடியில் கட்டிக் கொண்டான்.

'பெரியவர் எதில் வாங்குவது...?'' அரைகுறைத் தமிழில் கேட்டான்; உலர்உணவை அளந்து போடுபவனில் நெட்டையன்.

முகத்தார் வந்த விஷயத்தைக் கூறினார். சிவராசாவும் சிங்களத்தில் ஏதோ சொன்னான் அதைக் கேட்டதும் அவனது முகம் சலனமேதுமற்று உறைந்து கருமை கொண்டது.

''அதுங்கெல்லாம் நமக்குத் தெரியாது... அங்க நில்லுங்க... லொக்கு மாத்தையா வரும் கதைப்பம்...''

முகத்தார் ஆறுதலடைந்தவராய் ஒதுங்கி, கட்டச்சுவருடன் அணைந்து கொண்டார். சிவ ராசாவும் அவருடன் உட்கார்ந்து கொண்டான்.

நீண்ட காத்திருத்தலின்பின், முகத்தாருக்கு அழைப்பு வந்தது.

உள்ளே சென்றார். அதிகாரி ஆங்கிலத்தில் கதைத்தான். அவருக்கு அது பட்டும் படாமலும் விளங்கியது.

மகனைப் பற்றிக்கூறி; பெயரையும் சொன்னார்.

பக்கத்தில் நின்ற துணை அதிகாரி சொன்னான் :

''நாம ஆக்களைப் பிடிக்கல்ல... புலியை தாங்பிடிச்சது. விசாரிச்சுப் பாத்துவிடும்... நீ போங்க...''

நம்பிக்கையிழந்தவராய் அவனைப் பரிதாபமாகப் பார்த்து நின்றார்.

''நீ.. போங்க ஐயா... உங்க மகன் வரும்...'' என்று மீளவும் சற்று உரத்து, அதட்டும் குரலில் சொன்னான்.

முகத்தார் மனம் உடைந்து போனவராய், மெளனமாக வெளியே வந்தார்.

ஏனோ அவருக்கு அப்பொழுது பவளத்தின் ஞாபகம் வந்தது. கூடவே தாரணியின் நினைவும் அவரை அலைக்கழித்தது. அவளது துயரம் ததும்பிய விழிகள் அவரையே பார்த்தபடி தொடர்ந்து வருவது போல ஒரு பிரமை.

நிலைதளர்ந்த முகத்தாரை சிவராசா ஆதரவாக அணைத்தபடி நடந்தான்.

துயரம் தரும் ஏதோ ஒன்று தனக்காகக் காத்திருப்பது போன்ற உணர்வு அவரை வருத்தியது. திடீரென உடலில் உள்ளசக்தி அனைத்துமே கரைந்து வெறும் கோதாகிவிட்டது போலிருந்தது அவருக்கு.

கறுப்பாச்சி அம்மன் கோயிலைக் கடந்து, மண்கும்பானைத் தொட்டு நடந்தார்கள் அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் சனசந்தடி இருந்தது. சாட்டியை ஊடறுத்த ஒற்றையடிப்பாதையில் இறங்கிய போது, அடர்த்தியாக வளர்ந்திருந்த ஈச்சம்பற்றைக் காட்டுப்பக்கமாக, வழமைக்கு மாறாக தொகையான காக்கைகள்... ஓரிரு நாய்களும் மோப்பம் பிடித்தபடி...

முகத்தில் அறைந்தாற் போன்ற துர்நாற்றம் அவர்களைத் தாக்கியது.

''மாடு கீடு செத்துக் கிடக்குது போலை...''

சிவராசா அபிப்பிராயம் கூறினான்.

முகத்தாருக்கு அப்படி அல்ல என்று ஏதோ உள்ளிருந்து சொல்லியது. ஒரு வகை வேகத்துடன் அவர் ஈச்சம்பற்றைகளை விலக்கியபடி உள்ளே நுழைந்தார். கறுப்பாய் உள்ளே... கிட்டவாக நுழைந்து பார்த்தார். பச்சைக் கோட்டுச் சாறத்துடன்... அவருக்கு ஐம்புலனும் ஓடுங்கி, சதுரம் பதறி, மரணவேர்வை வேர்த்தது. மயக்கம் வருவது போலிருந்தது.

''சிவராசா என்ரை பிள்ளை... என்ரைபிள்ளையடா...''

உள்ளே நுழைந்த சிவராசா, ஊதிப்பருத்து ஊனம் வடியக் கிடந்த அந்த உடலைப் பார்த்தான். எதையுமே அவனால் அனுமானிக்கமுடியவில்லை.

இன்னும் கிட்டவாக நெருங்கிய முகத்தார் அந்த உடலின் இடது மணிக்கட்டைப் பார்த்தார். பிள்ளையார் கோயில் மணி ஐயர் மந்திரித்துக் கட்டிய நூல், பதைப்புடன் வலது தோள்பட்டையைப் பார்த்தார். அவன் பிறந்து கிடந்த போது, குதூகலியாய் பவளம் காட்டி மகிழ்ந்த அந்த மறு; பிறப்பு மறு.

கண்ணீர் சோர அவர் பெருங்குரலில் அழுதார்.

முன்னால் போனவர்களும் பின்னால் வந்தவர்களும் கும்பலாகக் கூடிவிட்டார்கள்.

சிவராசா முகத்தாரைப் பார்த்துக் கேட்டான் :

''தொட்டால் கையுடன் வந்திடும் போலை கிடக்கு... எண்டாலும் வீட்ட எடுத்துச் போவம்...''

'வேண்டாம் ராசா, அவள் பவளம் இந்தக் கோலத்திலை பிள்ளையைப் பார்க்க வேண்டாம். அந்தப்பெட்டை தாரணியாலையும் தாங்கேலாது. இஞ்சையை என்ரை துரைக்கு நான் கொள்ளி போடுறன்.''

சிவராசா தலைகவிழ்ந்து கிடந்த உடலைச் சற்று முகம் தெரியுமாப் போல புரட்டிவிட்டான். தலையில் சூட்டுக்காயம் இரத்தம் வடிந்து உறைந்து கருமை தட்டிப் போயிருந்தது. அதைக் கண்டதும் முகத்தார் மீளவும் அழத் தொடங்கினார்.

அவரது துயரத்தில் அங்கு கூடி நின்றவர்கள் அனைவரும் பங்கு கொண்டனர். காட்டுவிறகு, பூவரசங்கொம்பு, ஒதியமரக்கிளை என உடைத்துக் குவித்தார்கள். ஈச்சம்பற்றையின் உலர்ந்த பாளைகளைப் பிடுங்கி நெருப்பு மூட்டினார்கள். சடங்கு சம்பிரதாயம் எல்லாம் புறமொங்க, தனது அருமந்த பிள்ளைக்கு முகத்தார் கொள்ளி போட்டார்.

தயாளனது உடலைத் தீ நாக்குகள் சூழ்ந்து தழுவிக் கொண்டன.

அங்கு நின்றவர்கள் எரியும் சிதையை வெறித்துப் பார்த்தபடி நின்றார்கள்.

'இந்த யுத்தம் நம்மை மிதித்து, துவைத்து புழுதியோடு புழுதியாய் அரைத்துவிடுமா...

இளம்பிள்ளையள் கண்ணில்பட்டால் அள்ளிக்கொண்டு போறாங்கள்... அல்லது சுட்டுத் தள்ளிவிடுறாங்களே இதற்கு... இதற்கு...?''

தூரத்தில் துப்பாக்கி வேட்டுக்கள் கேட்டன.

''பொடியள் ஆமியைச்சுடுறாங்கள் போல கிடக்கு. அல்லைப்பிட்டிப் பக்கம் தான் கேக்குது..'' கூட்டமாய் நின்றவர்கள் தமக்குள் கதைத்துக் கொண்டார்கள்.

மேற்குவானம் சிவந்து, பெரியவெளி குருதிப் புனலில் தோய்ந்தது போலிருந்தது. இரத்த கோளமாய் திரட்சி கொண்ட சூரியப்பந்து படுவானில் சாய்ந்து மறைந்தது.

முகத்தார் சிவராசாவின் கைத்தாங்கலில் மீளவும் நடக்கத் தொடங்கினார். சிவராசாவின் கைகளில் அந்த அரிசியும் மாவும் பொதியாக, அப்பொதி அவனுக்கு இப்பொழுது கனத்தது.

க. சட்டநாதன்

© TamilOnline.com