நிறைய ஆதாயங்கள்...
போர் வந்தேவிட்டது. போருக்கான ஆயத்தங்களில் அதற்குப் பெயர் வைப்பதும் ஒன்று எனத் தெரிகிறது. ஈராக்கை விடுதலை செய்ய அமெரிக்கர்களும் ஆங்கிலேயர்களும் ஈராக் மீது படையெடுத்திருக்கிறார்கள். பாகிஸ்தான், மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு ஈராக்கில் மக்களாட்சி மலரச் செய்ய எடுக்கும் முயற்சிகளை எந்த அளவுக்கு நம்புவது?

எந்தப் போரிலும் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான். கண்ணகியின் சாபம்போல் நல்லவர்சிலரை விடுத்து தீயவரை மட்டும் அழிக்கும் போர்க் கருவிகள் இல்லாத பட்சத்தில், இதைப்பற்றி வருத்தப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. பங்குச் சந்தையின் ஓட்டு, போரின் சார்பாகவே விழுந்திருக்கிறது என்று தெரிகிறது. இந்தப் போரில் அமெரிக்காவுக்கு நிறைய ஆதாயங்கள் இருக்கின்றன என்று தோன்றுகிறது.

உலகக் கோப்பை விழா நடந்து முடிந்துவிட்டது. மறுபேச்சுக்கு இடமில்லாத வெற்றி. ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துகள். இந்திய அணி இரண்டாவது இடத்தில் வந்ததும் சாதனையே. பல ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட், ஒரு குழுவின் முயற்சி என்பது பிடிபட்டிருக்கிறது. அதேபோல் வெற்றிக்கு ஆசைப்படுவதோடு நில்லாமல் தன்னம்பிக்கையுடன் போராடும் மனப்பான்மையும் அதிகமாகி இருக்கிறது. இந்திய அணியின் எதிர்காலம் இன்னும் நன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சரி செய்யவேண்டிய குறைகள் இருக்கின்றன. ஆனால் விரைவில் அவை சரி செய்யப்படும் என்ற நம்பிக்கையும் வந்திருக்கிறது. இருந்தாலும் சச்சினுக்கு பாரத ரத்னா தரப் படவேண்டுமென்பதும், சச்சின் வரிவிலக்குக் கேட்பதும் சரியில்லை. இந்தப் போட்டியின் சாதனையாளர்கள் ·ப்ளவர் மற்றும் ஒலோங்கா, எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்று தெரிந்தும், எதிர்ப்பைத் தெரிவித்த அவர்களுக்கு வணக்கம். அவ்வளவாக கிரிக்கெட்டில் விருப்பமில்லாத ஒரு நண்பரின் யோசனை: "இந்திய அணியினர் நன்றாக ஆடும் பொருட்டு இனிமேல் ஒவ்வொரு பெரிய போட்டிக்கு முன்னரும் ஒரு கொடும்பாவி கொளுத்தலாம்."

தென்றல் சென்ற இதழில் பக்க எண்களுக்கு அருகே A,B,C போன்ற குறியீடுகளைப் பார்த்திருக்கலாம். இப்போது தென்றல் வளைகுடாப் பதிப்பு (A + B), சிகாகோ மற்றும் அட்லாண்டாப் பதிப்பு (A + C) என இரண்டு பதிப்புகளாக வெளிவருகிறது. இன்னும் ஒரு மைல் கல்லையும் எட்டியுள்ளோம்: இந்த இதழிலிருந்து 10,000 பிரதிகள் அச்சாகின்றன. வாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் எங்கள் நன்றி.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

மீண்டும் சந்திப்போம்,
பி.அசோகன்
ஏப்ரல் - 2003

© TamilOnline.com