தமிழ் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை, ஏப்ரல் மாதம் 20ஆம் நாள் (ஞாயிற்றுக் கிழமை) மாலை, நோர்த்ரிட்ஜ் மெத்தடிஸ்த் ஆலயத்தில் இனிதே நடைபெற்றது. இந்தத் தமிழ் ஆராதனையில் கிறிஸ்தவரல்லாத பிற மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தது, தமிழ் மொழியின் பெருமைக்கும், ஒற்றுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
ஆராதனையில் அருள்திரு. ப்ரேம்குமார் அவர்கள் நற்செய்தி வழங்கினார். அப்போது அவர் உயிர்த்தெழுந்த திருநாளின் உண்மையையும், ஒருமைப்பாட்டையும், சபையோருக்கு எளிதான தமிழில் அழகாக எடுத்துச் சொன்னார்.
ராஜ் முனுவும், சாமுவேல் மார்ட்டினும் (Raj Munu and Sam Martin) இசைக் கருவிகளை அழகாக இசைக்க, ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் ஈஸ்டர் பாடல்களைச் சபையோர் பாடி ஆராதனையைத் தொடங்கினார்கள். திரு டேவிட் நேசமணி அவர்கள் ஆரம்ப ஜெபம் செய்து ஆராதனையை நடத்தினார். ஆராதனையின் விசேஷ அம்சங்களாக, செல்வி அ.பி.கேல் யோகேந்திரனின் சிறப்பு நடனம், திருமதி. ப்ரினீற்றா யோகேந்திரன், திரு. ரவி இராசையா ஆகியோரின் சிறப்புப் பாடல்களும் இடம் பெற்றன. திருமதி ரோஸ் முரளி கிருஷ்ணன் அவர்கள் தானே எழுதி, இசையமைத்த ஒரு ஈஸ்டர் பாடலைப் பாடி சபையோரை மகிழ்வித்தார். செல்வி ஜெசிக்கா டாஸ் குழந்தைகளுக்காக ஈஸ்டர் முட்டை வேட்டை (Easter Egg Hunting) விளையாட்டை ஏற்படுத்தி, பிள்ளைகளை சந்தோஷமாகவும், கவனமாகவும் கண்காணித்துக் கொண்டார்.
ஆராதனை முடிந்ததும், அனைவருக்கும் மாலை உணவு (Potluck Dinner)வழங்கப்பட்டது. அத்தோடு தமிழ் கிறித்தவ ஐக்கிய குழுவின் ஆராதனை இனிதே நிறைவு பெற்றது.
இந்த ஆராதனையைப் பற்றிய மேலும் தகவல்களை www.ourchurch.com/member/t/TamilChristian - ல் பார்க்கலாம். மின்னஞ்சல் முகவரி: tamilchristianfellowship@ourchurch.com
S. ஜான் டேவிட் |