தென் இந்திய மியூசிக் அகாடமியின் ஆதர வோடு அலர்மேல் வள்ளி, கலிஃபோர்னியாவிலுள்ள ரோஸ்மெட் ஜூனியர் உயர்நிலைப்பள்ளியில் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்தினார். பாரம்பரியமிக்க பரநாட்டியத்தின் அம்சங்களை அந்த மாலை நிகழ்ச்சி அருமையாக விருந்தாக்கியது.
பந்தநல்லூர் பாணியில் பரதநாட்டியப் பயிற்சி பெற்ற அலர்மேல் வள்ளி, பழைய இலக்கியங்கள் சொல்லியுள்ள கற்பனையான கருத்துகளை, பாரம்பரிய அபிநயத்தால் பார்வையாளர்களுக்கு அருமையாக விளக்கினார்.
சிவ பஞ்சாட்சர துதியுடன் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து முடிவு வரை வள்ளியின் ஒவ்வொரு அசைவிலும் அவரது திறமை வெளிப்பட்டது. சங்கராபரண வர்ணத்தில் ஜதி சொற்கட்டும், தீர்மானங்களும் மலருக்கு மலர் தாவும் பட்டாம்பூச்சியைப் போல விறுவிறுப்பாக அமைந்திருந்தன. தமிழில் சங்க காலத்துப் பாடல் ஒன்றுக்கு அம்மா மகள் உறவுக்குத் தன் அபிநயத்தால் மிக அருமையாக பாவம் கொடுத்து அவர் ஆடிய விதம் மனதில் நிலைப்பதாய் இருந்தது.
இவர் காலத்தைச் சேர்ந்த மற்ற நடனக் கலைஞர்களுக்கும் இவருக்கும் ஒரு குறிப்பிட்ட வேறுபாடு உள்ளது. பரதநாட்டியத்தின் அனைத்து அம்சங்களும் செதுக்கியதுபோல், மனம்-ஆன்மா-உடல் மூன்றையும் ஒருங்கிணைத்து நடனமாடுவதுதான் இவருடைய தனிச்சிறப்பு. பிரபல கலை விமர்சகர் சுப்புடு அவர்கள், இவரது நாட்டிய பாணியைப் பார்த்து, பரதநாட்டியத்தை 'வள்ளி நாட்டியம்' என்று அழைத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
கோமதி நாராயணனின் இனிமையான இசையும், சி.கே. வாசுதேவனின் நட்டுவாங்கமும், முருகானந்தம் ஷக்திவேலின் மிருதங்கமும், அக்கறை சுப்புலெஷ்மியின் வயலினும், நிகழ்ச்சிக்குக் கூடுதல் சிறப்பு சேர்த்தன.
Dr. மாலினி கிருஷ்ணமூர்த்தி |