கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியன்று Cutting Hall, Palatine, ILல், மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் புத்தாண்டு விழா கொண்டாடப் பட்டது. முப்பத்துமூன்று வருடங்களுக்கும் மேலாக எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் செயல்பட்டுவரும் சிகாகோ தமிழ் சங்கம் (CTS) வழக்கம்போல் இந்த விழாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த முறை உள்ளூர் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 7.30மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம், கிட்டத்தட்ட நான்குமணி நேரத்திற்குத் தொடர்ந்து நடந்தது.
சிகாகோ தமிழ் சங்கத்தின் தலைவர் பேரா.கிருஷ்ணராஜ் (University of Illinois at Chicago) நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்தினார். இவரது உரையில், தமிழ்மொழியின் சிறப்பு, அது தோன்றிய இடத்தில் மட்டுமின்றி எங்கெங்கெல்லாம் அது பேசப்படுகிறதோ அந்த இடங்களிலெல்லாமும் கூட இருக்கிறது, என்பதை வலியுறுத்திக் கூறினார். இப்படி வெளிநாடுகளிலும் ஒரு மொழியின் தொடர்ச்சி இருக்கும்போது ஒருவருடைய கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல கஷ்டமில்லாத மகிழ்ச்சிதரக்கூடிய ஒரு வழி இசை, என்றும் அவர் உரையில் கூறினார். இந்தக் கச்சேரியை பேரா. ராகவன் (University of Illinois at Chicago) ரசிக்கும்படியான வர்ணனைகளோடு தொகுத்து வழங்கினார்.
ஐந்து முதல் அறுபத்து மூன்று வயதுவரையான திறமையான பாடகர்கள் இசைத்த இனிமையான தமிழ் திரைப்படப்பாடல்களை நானூறுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்தோடு வந்திருந்து ரசித்தார்கள். சுதிக்ஷ்னா வீராவளி மற்றும் வசந்தா கோலவேனு இரண்டு பாடகர்களும் ஒவ்வொரு முறையும் தனிப்பாடலை அருமையாக இசைத்தார்கள். என்றும் மறவாமல் நினைவில் நிற்கும் பல பாடல்களை இந்த நிகழ்ச்சியில் வழங்கிய வசந்தா, தாரா ராகவன், மிருணாளினி லஷ்மிநாராயணன், சுஜாதா ராஜன், மாதவன் வீராவளி, கெளரவ் வெங்கடேஸ்வர், ஸ்ரீனி ராஜன், Dr. சாகர் மற்றும் TES ராகவேந்தர் ஆகியோரை கட்டாயம் பாராட்டியே தீர வேண்டும். ரவி ஷங்கர், தன் இளமையான குரலினால், ஷாராயனா குருராஜனின் துணையோடு வந்திருந்த அனைவரையும் தன்வசப்படுத்தினார்.
இந்த இசைக்குழுவில் கெளரவ் வெங்கடேஸ்வர் மற்றம் கண்ணன் ஐயர் கீபோர்டும், பிரசாத் ராமச்சந்திரன் வயலினும், நடேசன் பனிகர் தபேலாவும், E.G. நாதன் குடும்பத்தைச் சேர்ந்த நாதன், தீபா, மற்றும் ஆதித்யா ஆகியோர் மற்ற சில வாத்தியங்களும் சிறப்பு சப்தங்களும் ரவி ஷங்கர் மிருதங்கமும், ஆனந்த் சேஷாத்ரி டிரம்ஸ¥ம், மற்றம் 'Paddy' பத்மநாபன் கிடாரும் இசைத்தார்கள். சின்னக் குழந்தைகள் ஆத்ரேயா நாதன், சித்ரா ஐயர் மற்றும் சுதிக்ஷ்னா வீராவளி ஆகியோர், நம் தமிழ்ச்சமுதாய மக்கள் தமிழ் மொழியையும் அதன் கலாசாரத்தையும் இன்றும் விழிப்போடு காப்பாற்றி வருகிறார்கள் என்பதைத் தங்கள் திறமையினால் நிரூபித்தார்கள். இந்த இளம் பாடகர்களின் தவறில்லாத தமிழ் உச்சரிப்பைக் கேட்டு வந்திருந்த பார்வையாளர்கள் மலைத்து நின்றதென்னவோ உண்மைதான்.
CTS, 1968லிருந்து லாப நோக்கில்லாமல் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு. இந்த சங்கம் கடந்த வருடங்களில் அமெரிக்க தமிழர்களுக்கு கலாசார ஆதரவு அளித்து வருவதோடு, அவர்களது திறமையை வெளிக்கொணர்வது, பல்வேறு பகுதிகளிலிருந்து (குறிப்பாக இந்தியா மற்றும் US) சிறந்த பேச்சாளர்களை வரவழைத்து தமிழ் மொழித்திறமையை வளர்ப்பதுஎன்று பல காரியங்களைச் செய்து வருகிறது.
கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்த உழைப்பை நல்கியவர்கள்: Dr. கிருஷ்ணராஜ் (தலைவர்), முத்து (செயலாளர்), எஸ். குருசாமி (துணைச் செயலாளர்), திருமதி ஜி.தெய்வநாயகம் (துணைப்பொருளாளர்), என். ஷண்முகபிரகாஷ் (பொருளாளர்), மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்: சி. குமார், Dr. சந்திரமெளலி, திருமதி காந்திமதி இந்திராராஜ், எஸ். கிருஷ்ணன், இளைஞர் பிரதிநிதிகள்: செல்வி. கீத்னா மற்றும் திரு. கார்திக் மற்றும் பலர். ஜி. பாலு(துணைத்தலைவர்), எம். பாஸ்கரன், மற்றும் ஏ. நாயுடு போன்ற மற்ற செயற்குழு உறுப்பினர்களும் தங்கள் உழைப்பை இந்த நிகழ்ச்சிக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
மேலும் தகவல்களுக்கு: (847) 541-5993, www.chicagotamilsangam.org |