'வில்'அங்கம்! கிரேட்டர் அட்லாண்டா தமிழ் சங்கம்
"தந்தனத்தோம் என்று சொல்லியே... வில்லினில் பாட... ஆமா.. வில்லினில் பாட... ஆமா.." என்ற பாடல் அந்த அரங்கத்திற்குள்ளிருந்து கேட்டது. தமிழர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்த அந்த அரங்கத்திற்குள் நானும் முண்டியடித்துக் கொண்டு, 'வந்தருள்வாய் கலைமகளே...யே..யே..' என்று பாரம்பரியத்தோடு பாடப்பட்ட அந்த வில்லுப்பாட்டை ரசித்துக் கொண்டே உள்ளே சென்றேன். கடந்த பிப்ரவரி இரண்டாம்தேதி, 2003 அன்று, மெடோக் க்ரிக் உயர்நிலைப் பள்ளியில், க்ரேட்டர் அட்லாண்டா தமிழ்ச் சங்கம் (Greater Atlanta Tamil Sangam, GATS) ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் தான் இந்த வில்லுப்பாட்டுக் கச்சேரி இடம் பெற்றிருந்தது.

அட்லாண்டாவிற்கு மட்டுமல்ல FETNA-வுக்கும், அகஸ்டாவிற்கும்கூட நன்கு பரிச்சயமான VK ரங்கா மேடையில் நடுநாயகமாக வீற்றிருந்தார். "என்னய்யா வில்லு கொண்டு வந்திருக்கிங்க. அம்பு கொண்டுவரல்லியா" என்று ஒலித்த அந்தக் குரலைக் கேட்டதுமே கண்டுபிடித்துவிடலாம், வில்லுக்கு ஒத்து பாடப்போவது ஆதிமுத்து அவர்கள்தான் என்று. விஞ்ஞான வளர்ச்சியும், கம்ப்யூட்டர் புரட்சியும் மிகுந்த இக்காலத்திலே அதுவும் அமெரிக்க மண்ணிலே பதினான்கு பேர் கொண்ட குழுவினர், மிடுக்கான பிரமிப்பூட்டும் வில்லு மற்றும் ஏனைய இசைக் கருவிகளோடு இசை மழை பொழியத் தொடங்கினார்கள்.

VKரங்கா மற்றும் ஆதி D. ஆதிமுத்து இருவரும் வில்லுப்பாட்டிற்கு வசனம் எழுதி வில்லு பாடல்களைப் பாடினார்கள். கூடவே திருமதி. பத்மா ராஜாராம், திருமதி. சுபாஷினி, திருமதி. ராதிகா செளந்தரராஜன், திருமதி. உமா நாராயணன், திருமதி. சுமதி சுப்ரமணியம், திரு ராஜேஷ் கண்ணன், திரு ரகு ரகுராமன், செல்வி மேனகா, மற்றும் செல்வி மோவினா போன்றோரும் பாடினார்கள். இசை திரு. சுப்ரா விஸ்வநாதன், தபேலா-திரு முரளி ராமச்சந்திரன், கஞ்சிரா-திரு. சுப்ரமணியன் குருசுவாமி, மிருதங்கம்-திரு. ரவி ராமச்சந்திரன், கீபோர்டு-VK.ரங்கா ''முந்திமுந்தி விநாயகரே முப்பத்துமுக்கோடி தேவர்களே...' என்று சகோதரி திருமதி. பத்மா ராஜாராம், திருமதி சுபாஷினி இருவரும் விநாயகரை வணங்கி விழாவிற்குப் பிள்ளையார் சுழி போட்டார்கள். தொடர்ந்து ரங்கா அவர்கள் 'ஆல்தோட்ட பூபதி'' பாட்டு மெட்டில் பின்னணி இசை ஒலிக்க தமிழர்களை வித்தியாசமாக வரவேற்றார்.

உஷா கணேசன் அவர்கள் ரங்காவிடம், ''பொங்கல் நிகழ்ச்சியின் "தமிழர் திருவிழா" பகுதிக்கு வில்லுப் பாட்டுதான் இணைப்பு நிகழ்ச்சி. போகி, பொங்கல், ஜல்லிக்கட்டு, தைப்பூசம், ஈது, சிவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, கிறிஸ்துமஸ்" போன்ற பண்டிகைகள் தொடர்பாக GATS உறுப்பினர்கள் அமைத்த நடன நிகழ்ச்சிகளை வில்லுப்பாட்டு வழியாகத் தொகுத்து வழங்குவதென முடிவு செய்திருக் கிறேன்.'' என்று சொல்லி அவர் நண்பர் சுப்பு அவர்கள் எழுதிய 14 பக்க script-ஐயும் ரங்காவிடம் கொடுத்து, என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து, நல்ல முறையில் நடத்தித் தருமாறு ரங்காவிடம் மாபெரும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, வெளிநாடு சென்றுவிட்டார். அதில், பார்வையாளர்களின் ரசனைக்குத் தகுந்தபடியும், ஜனரஞ்கமாகவும் சில மாற்றங்களை உரியவரின் அனுமதியோடும், ஆதிமுத்துவின் ஒத்துழைப்போடும் செய்து மேடையேற்றியிருக்கிறார் ரங்கா. இணைப்பு நிகழ்ச்சியாக எண்ணப்பட்ட கருத்துதான் இரண்டரை மணிநேரக் கதாபாத்திரமானது.

திருமதி. பத்மா ராஜாராம், திருமதி. சுபாஷினி இருவரும் எல்லாப் பாடல்களையும் மிகச் சிறப்பாகப் பாடினர். குறிப்பாக, "முருகனுக்கொரு நாள்", "தைப்பூசம்", "தீராத விளையாட்டுப் பிள்ளை", "திருவிளக்கை ஏற்றி வைத்தேன்" பாடல்கள் தேவகானம். அரங்கத்தில் கைதட்டல்தான்! திருமதி. சுபாஷினியும், குமாரி. மேகனாவும் பாடிய "அன்பென்ற மழையிலே" Super !குரு அவர்களின் மிருதங்கம் வாசிப்பும் ரவி-Keyboard, முரளி அவர்களின் கன்சீரா, சுப்ராவின் தபேலா வாசிப்பும், இடைஇடையே அவர்கள் வில்லும் ஒத்தும் பேசியது ரசிக்கும்படி இருந்தது. திருமதி ராதிகா சுந்தரும், திருமதி உமா நாராயணனும் மற்ற நடன நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றாலும் வில்லுக்கும் நடனத்துக்கும் இடையே எந்தக் குழப்பமும் ஏற்படாமல் தங்களுக்கு உண்டான பாத்திரங்களைச் செவ்வனே செய்திருந்தார்கள்.

சிவராத்திரி நிகழ்ச்சியாக "ருத்ர தாண்டவம்". அதற்கு ஒத்தாற்போல் வில்லுப்பாட்டில் ஆதி "பெண்களுக்கு இயற்கையிலேயே கண்களில் நீர் உண்டா இல்லையா" என்று ஒரு சர்ச்சையைக் கிளப்ப வில்லங்கம் பிடிச்ச கேள்வி ஆயிற்றே என்று நான் யோசிக்க, ஒரு நவீன திரு விளையாடல் "பெண்பா"க்களுடன் தொடங்கியது. உட்கார்ந்து கொண்டே ஒரு நகைச்சுவை நாடகத்தை நடத்திக் கைதட்டல் வாங்கி விட்டார் ரங்கா.

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு 72 மணி நேரம் முன்பாக Home Depot விற்கு அலையோ அலையென அலைந்து ரங்காவின் நண்பர் திரு. வெங்கி சுந்தரம் அவர்கள் உதவியுடன் ஒரு சில GATS உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கு முன் தினம் இரவு முழுவதும் வில்லுக்கு ஏற்ற வர்ணம் பூசினர். ஒன்றரை வயது கைக்குழந்தை இருந்த போதும், இந்நிகழ்ச்சிக்காக, அந்த வில்லை அலங்கரிக்கவும், Karaoke CD தயாரிக்கவும் திருமதி ஷகிலாஸ்ரீ ரங்கா உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டமான முயற்சி! பிரமிக்க வைக்கும் உழைப்பு!! Ranga வின் குழுவுக்கும், தமிழ் மேலும், தாய் நாட்டின் மேலும் அவர் குழுவுக்குள்ள பற்றுதலுக்கு நிகழ்ச்சியில் நிறைவாக இடம் பெற்ற பாடலே சான்று.

"தமிழ் மண்ணிலே வாழ்ந்த போதும், கடல்
தாண்டியே வந்த போதும்

நம்ம பண்பாட்டை காக்குதைய்யா தமிழ்
சங்கமே எந்த நாளும்

வணக்கம் வணக்கமுங்கோய் "

வாழ்க இவர்களது கலை ஆர்வம். வளர்க இவர்களது தமிழ் சங்க தொண்டு !

"வாழியவே பல்லாண்டு காலம் வாழிய வாழிய வாழிய வாழியவே.."!

'ரதி'

© TamilOnline.com