நியூஜெர்சியில் - 2003 தமிழர் திருவிழா - விழா அழைப்பு
எம் அன்பிற்கு உரியவர்களே!

வணக்கம். அமெரிக்க வாழ் தமிழர்களே! ஆண்டுதோறும் எங்கள் உழைப்பு வெற்றியுடன் அமைய பெறும் ஆதரவு அளித்த உங்களுக்கு எங்கள் வணக்கம். 1988 தொடர்ந்து 2002 வரையும் உடனிருந்த உறவே, 2003றை நியூஜெர்சியில் உடனிருந்து வெற்றியாக்க வருவீர் எம் அழைப்பு ஏற்று! ''இளையோர் போற்றுவோம்! இனம் காப்போம்'' என்ற எண்ணம் சூழ்ந்த கருத்தோடு ''தமிழ் அமெரிக்க மண்ணிலும் தழைத்து ஓங்கி வளர, நிலையோடு நின்று வாழ'' அமைக்கப்பட்ட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 16ஆவது ஆண்டுவிழா! தமிழ் அறிஞர் பலரும் வருகை தந்து, அமெரிக்க மண்ணில் அவர்தம் காலடி பதியாத, கருத்துகள் கேளாத சிங்காரத் தமிழ் ஒலிக்காத, நகரம் இல்லை என்ற வகையில் ஆண்டு தோறும் பண்பட்ட தமிழ்பண்பாடு உடனுறைந்த தமிழ் உலகைத் தந்தோம். கலைகள் பல உள்ளன தமிழ் மண்ணில்! தரணிசேர அவை வெளிவரல் வேண்டும் என்ற எண்ணத்தோடு கலைகள் பல சுற்றுலா விட்டது தமிழ்ச்சங்கப் பேரவை இம்மண்ணில்! 2002ல் சிகாகோ நகர்கண்டது அப்பெருமையை!

உடன் கண்டன வாசிங்டன், கரோலினா, அட்லாண்டா, டென்னசி, சான்பிரான்சிஸ்கோ, நியூஜெர்சி, நியூயார்க், கனக்டிகட், டொரான்டோ நகர்களும்!

இது ஒரு தொடர் நிகழ்ச்சி! ஆம் 2003லும் தொடர்கிறது. வரும் சூலை 4,5,6 நாட்களில் ''குளிர்ப் பூங்கா'' நியூஜெர்சி நகரில் ''சிகாகோ நகர்'' வீசிய பொதிகைத் தென்றலது திசை திருப்பி வீச உள்ளது! ''காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளல்'' வேண்டுமாம்! ஆண்டுதோறும் வீசும் ''பொதிகைத் தென்றல்'' என இம்மண்ணில் வீசி வரும் ''தமிழ் மணம்'' தமிழ்ச்சங்கப் பேரவையின் பெருமுயற்சியுடன் வீச உள்ளது!

கவிதை என்ன! கருத்தோட்டமென்ன! பட்டிமன்றமென்ன! மணம்கமழ் தமிழ் இசையென்ன! இன்பம் பயக்கும் இசை நாட்டியமென்ன! மனம் விட்டு அகலா இன்னிசையென்ன! உடன் தொடரும் காலத்தோடு முன்செல்ல இருக்கும் இளையோர் (NTYO) ஆக்கமும் எழுச்சியுமென்ன! தரத்தோடு அமையும் தமிழ்ச்சங்க கலை நுணுக்கங்கள் என்ன! ''என்ன, என்ன'' என்றே பாடியே விடலாம்! 2003லும் இவை தொடரும்!

''பயனிலாச் சொல் ஏதும் பகன்றிடா பண்பாளர் ''வ.செ. குழந்தைசாமி'', பட்டிமன்றத்துப் பகலவன் ''பாப்பையா சாலமன்'', தென்மொழித் தெம்மாங்கு ''பேராசிரியர் ஞானசம்பந்தன்'', முத்தமிழும் முதன்மை எனும் ''பேராசிரியர் திருமுருகன்'' நிறைவான தொழிற்நுட்பம், என்றாலும் தமிழுக்கு நெக்குருகும் நெஞ்சம் ''பொள்ளாச்சி மகாலிங்கம்'', ஆய கலைகள் 64ல் சில கலைகள், தமிழ்க்கலைகள் கரகாட்டம், பொய்க்கால் குதிரைஆட்டம், நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டியம் தந்திட தமிழ்நாட்டு நுண்கலைஞர்கள், காலத்தோடு அமைந்த சுவை-நகைச்சுவை நல்முத்துகள் ''மணிவண்ணன், மயில்சாமி, கோவைசரளா'' கருத்தும், மனமும், செவியும் குளிர்ந்ததாம்! கண்ணும் குளிர்ந்திட கண்சிமிட்டி திரையுலக நட்சத்திரங்கள் 'மாதவனும், சிநேகாவும்', விழா முடிவோ இன்பந்தான் என்றிட இசைவெள்ளத்தில் இணைந்திட்ட 'சங்கர் மகாதேவன் மகாஇலக்குமி' என்ற இரண்டு இசைக்குயில்கள்! நாமறிந்த மொழி அது விருந்தாக வந்திட்ட நல்லோர் நலம் சேர நவில்திடும் நற்றமிழ் விருந்தோடு ஞாயிறு அமையும்! வந்தோம், கண்டோம், கேட்டோம், உணர்ந்தோம், சுவைத்தோம், திகைத்தோம், மகிழ்ந்தோம், மலர்ந்தோம் என்றே ''2003 தமிழர்திருவிழா'' அமையும்!

இளையோர் பலர் இன்முகத்தோடு, இயல்பான பொறுமையுடன், பொறுப்போடு 2003 விழா முன்னேற்பாடுகள் செய்து கொண்டு இருக்கிறார்கள், எம் உறவுகள் திரளாக வந்து திகட்டாத சுவை பல சுவைத்து எம்மை வாழ்த்திப் போக வேண்டும் என்ற மனநிறைவு எதிர் நோக்கி பணியாற்றிக் கொண்டு உள்ளனர்.

இம்மடல் தங்கள் நினைவுகளைத் தூண்டி தட்டிக் கொண்டிருக்கும் வேளையில் தங்களை ''விழா பதிவுத்தாள்கள்'' வந்தடைந்து இருக்கும். சிரமம் கருதாது உடன் ''விழா பதிவு செய்யுங்கள்''. தங்கள் வள்ளன்மையை வரவேற்கிறோம்! மதிக்கிறோம்! உங்கள் வள்ளன்மை, தங்கள் உள்ளத்து அன்பைக் காட்டட்டும். மேலும் விவரங்களுக்கு இணையம் www.fetma.org அல்லது திரு.சிவராமன் 609 750 9419 என்ற எண்ணில் கூப்பிடுங்கள்.

''தேமதுரத் தமிழோசை'' தரணி முழுமையும் ஒலித்திடச் செய்வோம். விழா மிகுதிச் செல்வம் - தமிழ் அமெரிக்க இளையோர் தாய்த்தமிழ் மொழி கற்றிட, உங்கள் உள்ளூர் தமிழ்க் கல்விச் சாலைகளுக்கு ஏதுவாகும்!

விழாக்குழு

குறிப்பு: பேரவையின் ஆதரவுடன் சூன் 21 முதல் சூலை 19 வரையும் ''நான்கு வார'' தமிழ்க் கல்வி முகாம் தலைநகர் வாசிங்டனில் (சூலை 4,5,6 தமிழர் விழா நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில்) விவரம் www.learntamil.com/summercamp

© TamilOnline.com