ருக்மிணி தேவி அருண்டேலின் நூற்றாண்டுக் கொண்டாட்ட கலை நிகழ்ச்சி.
கலா வந்தனா நடன மையத்தின் கலை இயக்குநர் சுந்தரா சுவாமிநாதன் அவர்கள் வடிவமைத்துத் தயாரித்திருக்கும் கோயில் நடனத்தின் கதைகள் என்ற நாட்டிய நாடகம் வருகிற மே மாதம் 31ஆம் தேதி வளைகுடாப்பகுதி மக்களை மகிழ்விப்பதற்கென்றே அரங்கேறப் போகிறது. ஸ்ரீமதி.ருக்மிணி தேவி அருண்டேல் (1904-1986) அவர்களின் நூற்றாண்டு விழாவை உலகம் முழுவதும் கொண்டாடிக்கொண்டிருக்கும் அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நாட்டிய நாடக அரங்கேற்றமும் திட்டமிடப் பட்டிருக்கிறது. மிக அருமையான சாஸ்திரிய நடனமான பரதநாட்டியத்தை மீட்டு உலக அளவில் இன்று இந்த நடனம் பிரசித்தி பெறுவதற்குக் காரணமாயிருந்தவர்தான் ருக்மிணி தேவி அருண்டேல் என்பது நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும்.
கோயில் நடனத்தின் கதை என்ற இந்த நாட்டிய நாடகம், பரதநாட்டியம் சொர்க்கத்தில் தோன்றிய கதை¨யும், பூமிக்குப் பயணித்த முறையையும், தேவதாசிகளால் கோயில் நடனமாக்கப்பட்ட வரலாற்றையும், வேசிகளால் ஆடப்பட்ட விதத்தையும் அதன் விளைவுகளையும், இவைகளிலிருந்து மீண்டு இந்த சாஸ்திரிய நடனத்தின் மறுபிறப்பையும், அதற்காக ருக்மிணிதேவி அம்மையாரும் அவரைப் போன்ற வேறு சில முன்னணிக் கலைஞர்களும் பட்ட பாடுகளையும், இறுதியாகத் தற்போது இந்தியாவில் மட்டுமின்றி உலகமெங்கிலும் பரவிப் புகழ்பெற்று விளங்கும் சிறப்பையும் அருமையான காட்சி அமைப்புகளால் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில், பொழுதுபோக்காகவும் அதே நேரம் பரதநாட்டியத்தின் உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் வகையிலும் நாட்டிய வடிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கி இன்று வரைக்கும் பரதநாட்டியம் எதிர்கொண்டு வந்த மாற்றங்களைப் பார்வையாளர்களுக்கு ஆச்சரிய மூட்டும் வகையில் தகவல்களைத் தரும்படி நாடகத்தை வடிவமைத்திருக்கிறார்கள். இந்திய-அமெரிக்கர்களின் இரண்டாவது தலைமுறை யினரின் எண்ணிக்கை வளைகுடாப் பகுதிகளில் அதிகரித்து வரும் அதே வேளையில் பரத நாட்டியம் பற்றிய அவர்களது ஆர்வமும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்த இரண்டாம் தலைமுறையினருக்கு பரதநாட்டியத்தின் அடிப்படைகளைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சிறப்பாக வடிவமைக்கப் பட்டதுதான் இந்த நாட்டிய நாடகம். இந்த நாடகத்துக்காக சிறந்த முறையில் பயிற்சி எடுத்துக் கொண்ட கலா வந்தனா நடனக் குழுவினருடன் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் பிரபலமான இசை வல்லுநர்களும் பங்கேற்கிறார்கள்.
இந்த அற்புதமான சாஸ்திரிய நடனம் ஸ்ரீமதி ருக்மிணிதேவி அருண்டேல் அவர்களின் பெருமுயற்சி இல்லாவிட்டால் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருக்கும். இந்தியாவில், சென்னையில், கலாஷேத்திரா காலேஜ் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் என்ற கலாசாலையை உருவாக்கி, அதன் மூலம் பல நடனக் கலைஞர்களை மிகச் சிறந்த முறையில் உருவாக்கியிருக்கிறார். நடனம் மற்றும் இசையின் மிக அற்புதமான அடையாளமாக கலாஷேத்திரா இப்போது உயர்ந்து நிற்கிறது.
சான் ஹோசேயில் உள்ள கலா வந்தனா நடன மையத்தின் நிறுவனரும் கலை இயக்குநருமான சுந்தரா சுவாமிநாதன் கலாஷேத்திராவின் முன்னாள் மாணவர் மட்டுமல்லாது ருக்மிணிதேவி அம்மையாரின் நேரடி மாணவரும் கூட. கலாஷேத்திராவும் உலகக் கலை சமூகமும் ஒன்றிணைந்து 2003ஆம் வருடத்தில் ருக்மிணி தேவி அம்மையாரின் நூற்றாண்டுக் கொண் டாட்டங்களை இந்தியாவில் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற உலகின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடி வருகின்றன. ''கோயில் நடனத்தின் கதைகள்'' என்ற இந்த நாட்டிய நாடகத்தை சுந்தரா சுவாமிநாதன் அவர்கள், ருக்மிணி தேவி அம்மையாரைப் பெருமைப்படுத்தும் வகையிலும் பரதநாட்டியத்திற்கு மறுபிறப்பு அளிக்கும் வகையிலும் வடிவமைத்து இருக்கிறார். வளைகுடாப் பகுதியில் ருக்மிணிதேவி அருண்டேல் அம்மையாரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முதல் மற்றும் ஒரே நிகழ்ச்சி இந்த நாட்டிய நாடகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தரா சுவாமிநாதன் அவர்கள் மிகச் சிறந்த நடனக்கலைஞர் மற்றும் நடனவடிவமைப்பாளர். கலாஷேத்திரா காலேஜ் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் பரதநாட்டியத்தில் போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ பயின்றிருக்கிறார். பல வருடங்களாக பல்வேறு விதமான நடன அரங்கேற்றங்களை வளைகுடாப் பகுதியில் நிகழ்த்தி இந்தப் பகுதி மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகிறார்.
"Return to Tradition" மற்றும் "Lord of Dance" என்ற இவருடைய இரண்டு நிகழ்ச்சிகளும் சமீபத்தில் மிகுந்த பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றிருக்கின்றன. அவற்றில் "Lord of Dance" என்ற நிகழ்ச்சியில் சிதம்பரம் கோயிலைப் போன்று அரங்கம் அமைக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு ரசிகர், இவருக்கு இப்படிக் கடிதம் எழுதியிருக்கிறார். ''சிதம்பரத்திற்கு நேரில் சென்று அந்தக் கோயிலைத் தரிசிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு இல்லாமல் இருந்தது. சுந்தரா உங்களது இந்த நிகழ்ச்சியின் மூலம் எனது அந்தக் குறையைப் போக்கி சிதம்பரம் கோயிலை என் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள், கோயிலை மட்டும் அல்ல, அந்த இறைவனின் நடனத்தையும் தான்! இதைப் பார்த்த பிறகு என் பிறவிப் பயனை அடைந்தது மாதிரியும் என் வாழ்க்கை முழுமையடைந்தது மாதிரியும் நான் நினைக்கிறேன்''
India Currentsன் வெளியீட்டாளர் ''கற்பனை செய்துவைத்திருந்த அபிநயத்தைக் கண்முன்னே காட்டி மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.'' என்று பாராட்டியிருக்கிறார்.
இந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி வருகிற மே மாதம் 31ஆம்தேதி, சனிக்கிழமை 2003 அன்று மாலை 4மணிக்கு, Chabot College Center for Performing Arts. 25555 Hesperian Blvd. Hayward, CA-94545ல் அரங்கேறப்போகிறது. மேலும் விபரங்களை http://kalavandana.smartpick.com ல் பார்க்கலாம். |