அனுபவத்தினாலும் இயற்கையான உள்ளுணர்வு மற்றும் சுய சிந்தனை, ஆராய்வு- இவற்றாலும் ''உள்நோக்கு'' அதாவது ''இன்ஸைட்'' என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது கிடைக்கிறது என்று நம்பலாம். அப்படிக் கிடைத்த ஒருவர் அதைப் பற்றிப் பேசும்போது அதன் சுவாரசியம் நம்மைத் தொட்டு விடும்.
சமீபத்தில் ஹாலிவுட்டில் அதிகமாக அடிபடும் நடிகையின் பெயர் கேதரின்-ஜோடா-ஜோன்ஸ். மின்னல் மாதிரி இந்த அழகி திடீரென்று படங்களில் வர ஆரம்பித்தார். பிரபல நடிகர் மைக்கல் டக்லஸின் காதல் மனைவியானார். அதிகமாகப் பேசப்பட்ட இந்த சமயத்தில் டி மொபில் (T Mobile) என்கிற செல்·போன் விற்பனை விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
ஒரு மில்லியன் டாலர் சம்பளம் கொண்டு வந்தாலும் இவருடைய இந்த முடிவு தவறானது - சினிமா நடிகை என்கிற கவர்ச்சியை இழக்க வாய்ப்புகள் இருக்கின்றன என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.
சினிமா என்றாலே முகமூடி போட்ட ஒரு கவர்ச்சி உண்டு. ராத்திரி பத்து டாலரோ-மாட்டினேயில் குறைந்த விலைக்கோ டிக்கட் வாங்கிக் கொண்டு சினிமா தியேட்டருக்குப் போய் நாம் ரசித்துப் பார்க்கும் இந்தக் கவர்ச்சிச் சித்திரங்கள் தங்களைச் சுற்றி ஒரு திரை போட்டுக் கொள்ள வேண்டுமாம்.
வீட்டு வரவேற்பறை தொலைக்காட்சியில் சல்லிகாசு செலவழிக்காமல், ராத்திரி டின்னருக்குக் கீரையை நறுக்கிக் கொண்டே - பையனுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டே என் கண்கள் தானாக டிவி திரைக்கு நகரும்போது எனக்குப் பிடித்த நடிகை go... என்று கை சொடுக்கி விளம்பரத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை வருகிறாள். அந்தக் கவர்ச்சிக் கன்னி யாராக இருந்தாலும் நான் ஏன் தியேட்டரில் காசு கொடுத்து நேரம் செலவழித்துக் கொண்டு போய் அவளைப் பார்க்க வேண்டும்?
இது என்னுயை ஐந்து காசு டிரக் ஸ்டோர் சைக்காலஜியல்ல. இது மனிதனின் இயற்கையான மனோபாவம். அதனால் தான் டிவி விளம்பரங்களில் நடிக்க மிஸ் ஜோன்ஸ் ஒத்துக் கொண்டது வியாபார நோக்கில் தப்பாம்.
நம் தமிழ் சினிமாக்களில் கூட பாருங்களேன். சினிமாவிலிருந்து சின்னத் திரைக்கு வருபவர்கள் தானே அதிகம். உல்டாவாக நடப்பது அரிது.
இதையெல்லாம் ஆராய்ச்சிக் கட்டுரைகள் படிக்காமல் தானாகவே உணர்ந்து அப்படியே வாழ்ந்தவர் நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள்.
''நான் வியட்நாம் வீடு மேடை நாடகத்தில் நடிக்கும்போது சரியாக நாடகம் ஆரம்பிக்கும் சமயத்தில் பின் பக்கக் கதவு வழியாக வருவேன். நடித்துவிட்டு ஒரு கணம் கூட நிற்காமல், ரசிகர்களுடன் கலந்து பேசாமல் ஓடிவிடுவேன். எனக்கு மண்டை கனம் என்று நினைக்கலாம். ஆனால் கை காசு செலவழித்துப் பெரிய திரையில் என்னைப் பார்க்க வரும் ரசிகனுக்கு என்னுடைய சுயரூபம் தெரியக் கூடாது. தெரிந்தால் அந்த 'மிஸ்ட்ரி' போய் விடும்'' இப்படி ஒரு முறை சொல்லியிருக்கிறார் அந்த மாபெரும் நடிகர்.
இதைக் கேட்டபோது தான் நடிகர், நடிகைகள் தனிமையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியிருப்பதன் அவசியம் புரிகிறது. அத்துடன் உங்களுக்கும் எனக்கும் இருக்கிற சுதந்திரம் நிச்சயமாக அவர்களுக்கு இல்லை என்று வருத்தமாகவும் இருக்கிறது. |