அமெரிக்காவின் பரபரப்பான வாழ்க்கை யில் மனதை ஒருமுகப்படுத்த இசை இன்றியமையாததாக இருக்கிறது. 'குமரா... சரணம்...' என்ற பெயரில் பக்திப் பாடல்கள் அடங்கிய CD ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதிலுள்ள பக்திப் பாடல்கள் ஒவ்வொன்றுமே கேட்பவரை மெய்மறக்கச் செய்து பக்திப் பரவசமூட்டுகின்றன.
''ஓம் விக்னேஸ்வரா'' என்று முழுமுதற்கடவுளை அழைத்து அவன் சோதரனுக்குப் படைத்திட்ட பாமாலையில் அனைத்துப் பாடல்களுமே, இசைச் சோலையில் என்றும் வாடாத நறுமணங்கமழும் மலர்களாய்த் திகழ்கின்றன.
''ஜனநாயகத்தில் ஒரு ராஜாங்கம்'' என்று, வாஷிங்டன் முருகனுக்கு அர்ப்பணித்திருக்கும் பாடல் கேட்கக்கேட்கத் திகட்டுவதேயில்லை. ஒரே ஒரு முறை கேட்டால்கூட எப்போதும் அந்த இனிய இசை காதில் எப்போதும் ரீங்காரமிட்டுக கொண்டே இருக்கும்.
ஆண்டவனைத் தரிசிக்கக் கோயிலுக்குச் சென்று தரிசனம் கிட்டாமல் ஏமாற்றமடைந்து திரும்பிய ஒரு பக்தனின் மனநிலையை, ''எனக்கும் உனக்கும் உள்ள உறவு'' என்ற பாடல் மிகவும் தெளிவாகக் காட்டுகிறது. இதை இசையாக வடித்திட்ட பாடலாசிரியரின் நேர்த்தியும் அதை உருக உருகப் பாடிய பாடகரின் குரலும் வியப்பில் ஆழ்த்துகிறது.
''ஓங்கார நாயகனே'' என்ற பாடல், வள்ளி-தெய்வானை சமேத முருகனது திருமண விழாவை நம் அகக்கண் முன் நிறுத்துகிறது. கூடவே நமக்கு மன எழுச்சியையும் தைரியத்தையும் தருகிறது அந்தப் பாடல். 'வேலை நினைத்து விட்டால்' துள்ளாட்ட மெட்டில் நம்மைத் தாளம் போடவைக்கிறது.
கானக்டிகட்டைச் சார்ந்த திருமதி சித்ரா வைத்தீஸ்வரன் எழுதிய ஒன்பது பாடல்களும் நவமணிகள். செறிவார்ந்த கருத்துகள். இந்த ஆழமான வரிகளுக்கு நியூயார்க்கைச் சேர்ந்த திரு. சாபு அழகாக இசையமைக்க, அதை அமிர்தம் கொட்டப் பாடியிருக்கிறார் நியூஜெர்சியைச் சேர்ந்த அனிதா. போன பிறவியில் நிச்சயம் இவர், ஆண்டவனுக்குத் தேனாபிஷேகம் செய்திருக்கவேண்டும், அவ்வளவு இனிமையான குரல். இவர்களுடைய திருப்பணி தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த CDயை வாங்க விரும்புவோர் petals97@hotmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். தென்றல் வாசகர்களுக்காகச் சிறப்பு சலுகை உண்டு. இ-மெயிலில் தென்றல் வாசகர் என்பதைத் தயவு செய்து குறிப்பிடவும். CDயின் விலை $15. இந்த விற்பனையில் வரும் ஒரு பங்கை முருகன் திருப்பணி செலவுகளுக்காகத் தயாரிப்பாளர்கள் ஒதுக்கி வைத்திருக் கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குமரா... சரணம்... ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் கட்டாயம் ஒலிக்க வேண்டிய தெய்வீகக் குரல்.
வசந்தி சுந்தரம்,ப்ரின்ஸ்டன், நியூ ஜெர்ஸி |