வாசகர்கள் தென்றலைப் பற்றி கடிதங்களிலும், தொலைபேசி மூலமாகவும், நேரிலும் தெரிவிக்கும் கருத்துகளை ஆசிரியர் குழுவினர் ஆர்வத்துடன் கவனித்து வருகிறோம். "வட அமெரிக்காவில் நல்ல தரமான தமிழ் மாத இதழ், அதிலும் இலவசமாகக் கிடைக்கிறதே!" என்று வியந்து, பாராட்டி எழுதியிருப்போர் பலர். அதே போல், ஒரு பக்கம் விடாமல் எல்லா வற்றையும் படித்துப் பார்த்து நிறை குறைகளைச் சுட்டிக் காட்டிக் கடிதம் எழுதும் வாசகர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. தங்கள் நேரத்தைச் செலவிட்டு அக்கறையுடன் எங்களுக்குக் கடிதம் எழுதும் வாசகர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
சில கடிதங்களைப் படிக்கும்போது "ஹையா, அதுதான், அதேதான்!" என்று குழந்தைகளைப் போன்ற குதூகலத்துடன் குதிக்கத் தோன்றும். ''தென்றலின் 'நிகழ்வுகள்' பகுதி அமெரிக்காவுக் குக் குடிபெயர்ந்த தமிழர்களின் கலாசாரத்தின் கண்ணாடி', என்று சாரடோகா வாசகர் அம்பா ராகவன் எழுதிய கடிதம் (·பெப். '03) அந்த வகையில் சேர்ந்தது. சில கடிதங்களைப் படிக்கும் போது, "அம்மாடி, இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகளை நம்மால் நிறைவேற்ற முடியுமா!" என்று மலைக்கத் தோன்றும். "அமெரிக்கத் தமிழர்களின் பண்பாட்டு முதிர்ச்சியின் அடையாளமாகத் தென்றலைக் கருதுகிறோம்", என்று அட்லாண்டா தமிழறிஞர் பெரியண்ணன் சந்திரசேகரன் (மார்ச் '03) போற்றும் போது இரண்டே வயதான தென்றல் எட்ட வேண்டிய மலையுச்சியைக் காட்டுவதாகக் கொள்கிறோம்.
சில கடிதங்கள் "நறுக், நறுக்" என்று உச்சந்தலையில் கொட்டுவது போல் இருக்கும். "தென்றலின் ஒவ்வொரு எழுத்தும் வாசகர்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும்", என்ற குறிக்கோளை மார்ச் மாதத்தில் முன் வைத்த வாசகர் அட்லாண்டா ராஜன், மறு மாதமே தென்றல் தமிழ் நடையில் குறை காண்கிறார். 'சில எழுத்தாளர்கள் தங்களுக்கு உள்ள தமிழ்த் திறமையைக் காட்ட எழுதுகிறார்கள்' என்று குற்றம் சாட்டுகிறார். அவர்கள் படைப்புகளில் வரும் இராமன், இலக்குவன், தொன்மை போன்ற வார்த்தைகளுக்குரிய அர்த்தம் வாசகர்களுக்குப் புரிவதில்லை, அவர்கள் ரசிப்பதில்லை என்கிறார். "நடைமுறையில் இருக்கும் வார்த்தைகளை உப யோகியுங்கள். மக்களுக்குச் சுலபமாகப் புரியக் கூடிய சொற்களை உபயோகியுங்கள்" என்று அறிவுறுத்துகிறார்.
பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில் மகாகவி பாரதி "எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்", என்று எழுதியது தற்காலத் தமிழ் இலக்கிய உலகத்துக்கு வேதவாக்கு. எது எளிமை, எது மொழிக்குப் புத்துயிர் கொடுக்கிறது, எது கொச்சைப் படுத்துகிறது என்பதில் தான் கருத்து வேறுபாடுகள் உள்ளன. "தொன்மை" என்ற சொல்லையே எடுத்துக் கொள்வோமே! அது "தொல்" என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது. மிகப் பழமையானது என்ற பொருள் கொண்டது. இன்றும் வழக்கில் இருக்கும் சொல். தொல்காப்பியம் என்ற மிகப் பழமையான தமிழ் நூலின் பெயரில் இருக்கிறது. "தொன்று தொட்டு" என்ற மரபுத் தொடரில் இருக்கிறது. தொல்பழங்காலம், தொல் பொருள் ஆராய்ச்சி என்ற சொற்களில் இருக்கிறது. தொல்லுலகு, தொல்லிசைக் காவியங்கள், தொல்சீர் மறக்குலம், தொல்புவி என்று பாரதியின் பாடல்களில் விரவிக் கிடக்கிறது. அதே போல் இராமன், இலக்குவன், இராவணன் என்ற பெயர்களும் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் ராமாயணத்தி லிருந்து நமக்கு வந்த கொடை. மகாகவி பாரதி மட்டும் சளைத்தவனா என்ன? பாஞ்சாலி சபதத்தில், தருமன், கருணன், அருச்சுனன், யுதிட்டிரன், திரிதராட்டிரன், திட்டத்துய்மன் என்று வடமொழிப் பெயர்களை எளிமைப்படுத்துகிறான்.
ஆனால், பாரதியின் எளிய தமிழ் நடையையே இன்று புலவர் தமிழ் நடையாகக் கருதும் நிலைக்கு வந்திருக்கிறோமோ? 'மக்களுக்குப் புரியும் வகையில் எழுதுங்கள்' என்ற அறிவுரையை ஏற்கிறோம். அதே நேரத்தில், சமூகப் பொறுப்புள்ள இலக்கிய இதழின் ஆசிரியர்கள் மொழியை எளிமைப்படுத்துவதன் எல்லைகளைக் கருத்தில் கொள்ள வேண்டி யிருக்கிறது. தமிழில் மேடை நடை, இலக்கிய நடை, இதழியல் நடை, கொச்சை நடை, வட்டார வழக்கு, ஆங்கிலம் கலந்த தமிங்கில நடை, திரைப்பட நடை என்று பல நடைகள். "என் மனைவி எங்கள் பையனுக்கு விளையாட்டுக் காட்டப் பூங்காவுக்கு அழைத்துப் போயிருக்கிறாள்", என்று இலக்கியத் தமிழில் எழுதுவதை "என் வை·ப் எங்க சன்னை எண்டர்டெயின் பண்ண பார்க்குக்குப் போயிருக்கா", என்று தமிங்கிலத்தில் எழுதலாம். இந்த இரண்டில் எது தென்றல் இதழுக்குப் பொருத்தம்?
"ஆறாம்திணை" என்ற அற்புதமான வலையிதழிலிருந்து பிறந்தது தென்றல். ஆறாம் திணையின் இலக்கிய நடையின் தாக்கத்தைத் தென்றலின் தலையங்கத்திலிருந்து புழைக்கடைப் பக்கம் வரை, சமையல் குறிப்புகளில் இருந்து நிகழ்வுகள் வரை காணலாம். அமெரிக்கத் தமிழர்கள் நன்கு படித்தவர்கள். தமிழில் ஓரளவுக்காவது பயிற்சி உள்ளவர்கள். நல்ல தமிழில் எழுதுவார்கள், படிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. வெறும் பொழுதுபோக்கை மட்டும் எதிர்பார்ப்பவர்களுக்கு பல தமிழ்ப்பத்திரிகைகள் வலையிலும், கடையிலும் கிடைக்கின்றன. ஆனால், குடிபுகுந்த நாட்டிலும் தம் மரபு, பண்பாடு, கலை, இலக்கியம், மொழி இவற்றைப் போற்றி வரும் வாசகர்களுக்குத் தேவையான அறிவார்ந்த சிற்றிதழ்கள் அரியவை. அதிலும், தம் வாழ்க்கைக்கும், தமிழ் பேசும் ஏனைய உலகத் தமிழர்களுக்கும் பாலமாய் அமைந்திருக்கும் இதழ்கள் வெகு சிலவே. ஆங்கிலத்தில் நியூ யார்க்கர், அட்லாண்டிக் மன்த்லி, மற்றும் நியூ யார்க் டைம்ஸ் போன்ற நாளேடுகளின் ஞாயிறு சிறப்பிதழ் போன்ற தரமான இதழ்களைப் படித்துப் பழக்கப்பட்ட அமெரிக்கத் தமிழர்களுக்கு நல்ல தரமான தமிழ் இதழைத் தருவது எங்கள் நோக்கம்.
தற்காலத் தமிழின் சிறந்த இலக்கியப் படைப்புகளை அறிமுகப்படுத்துகிறோம். நேர்முகம் பகுதியில் அமெரிக்காவில் சாதனை படைக்கும் இந்திய அமெரிக்கர்களின் சிந்தனைகளை மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்கு வருகை தரும் இலக்கியவாதிகள், தொழிலதிபர்கள், அறிஞர்கள் சிந்தனைகளையும் வாசகர்களுக்குக் கொண்டு வருகிறோம். "நிகழ்வுகள்" பகுதி மூலம் அமெரிக்கத் தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகளைப் பதிவு செய்கிறோம். திறமையுள்ள சமையல் கலைஞர்கள் வழங்கும் சமையல் குறிப்புகள் அமெரிக்காவில் கிடைக்கும் காய்கறிகள், மளிகைச் சாமான்களைப் பயன்படுத்தி விருந்து படைக்கத் துணை புரிகின்றன. சமயச் சிந்தனைகள், அரசியல் கட்டுரைகள் மூலம் அமெரிக்கத் தமிழர்களின் எண்ண ஓட்டங்களை எதிரொலிக்க முயல்கிறோம்.
சீரிய வாசகர்களுக்கு, இப்படிப் பலதரப்பட்ட சிந்தனைகளை அறிமுகப்படுத்துவதற்குத் தேவை துல்லியமான மொழி நடை. ஆங்கில இதழ்களை வாசிப்பவர்கள் அவற்றின் துல்லியமான மொழியைப் பாராட்டுவது மட்டுமல்லாமல், புதிய கருத்துகளைப் புரிந்து கொள்ளத் தேவையான புதிய சொற்களை அகராதியைப் புரட்டிக் கற்றுக் கொள்கிறார்கள்.
'அ'னா, 'ஆ'வண்ணாவைத் தாண்டி எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளும் போது ஒரு பெரிய உலகமே நம் மனக்கண் முன் திறக்கிறது. எழுத்தும், சொல்லும், வாக்கியமும் நம் மன நாட்டிய மேடையில் ஆடும்போது கால தேசங்களைக் கடந்து கருத்துகள் ஆளும் உலகத்துக்குள் நுழைகிறோம். இந்தப் பயணத்தின் தொடக்கத்தில் நாம் கற்றுக் கொள்ளும் முதல் பாடம், நுட்பமான கருத்துகளை அறிய வேண்டும் என்றால் சொற்களை அறிய வேண்டும். தாய்மொழிச் சொற்களை நாம் நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் இருந்தே எளிதாகக் கற்றுக் கொள்ளுகிறோம். ஆனால், பிறமொழி ஒன்றைக் கற்றுக் கொள்ளும்போது, சொற்களை அறிந்து கொள்ள நாம் நாடுவது அகராதி என்னும் கருவி. இந்து போன்ற ஆங்கில நாளேட்டில் ஆசிரியருக்குக் கடிதங்களையோ, விளையாட்டுப் பக்கங்களையோ படித்து ஆங்கில வளத்தைப் பெருக்கிக் கொள்ளத் தொடங்குகிறோம். கொஞ்சம், கொஞ்சமாக நூலகத்திலே இருக்கும் பெரிய பெரிய ஆங்கிலப் புத்தகங்களையும் புரட்டிப் பார்க்கும் துணிச்சல் கொள்கிறோம். வாழ்நாள் முழுதும், கேள்விப்படாத புதிய ஆங்கிலச் சொல் ஒன்றை முதல் முறையாகப் பார்க்கும்போது, உடனடியாக நாம் தேடுவது அகராதியைத்தான்.
ஒவ்வொரு புதிய சொல்லும், ஒரு புதிய கருத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நுட்பமாகச் சிந்திக்கும் திறனை வளர்க்கிறது. புதிய சொற்களைக் கற்றுக் கொள்ளும் தணியாத தாகம் நமக்கு வேகமாக வளரும் தொழில் நுட்ப யுகத்தில் முன்னேற வழி வகுக்கிறது. மனித வளர்ச்சியின் பரப்பினைப் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. அரசியல் பக்கங்களுக்கு இணையாக அறிவியல் பக்கங்களை வெளியிடும் நியூயார்க் டைம்ஸ், இந்து போன்ற நாளேடுகள் வேகமாய் வளர்ந்து வரும் நாகரீக உலகத்தைப் புரிந்து கொள்ள, நம் வாழ்க்கைக்கு உதவுகின்றன. 'ஏன் புரியாத சொற்களைப் போட்டு மிரட்டுகிறாய்' என்று இந்தப் பத்திரிகைகளிடம் நாம் முறையிடுவதில்லை. 'எழுத்தாளர்கள் தங்கள் ஆங்கிலத் திறமையைக் காட்ட எழுதுகிறார்கள்' என்று குற்றம் சாட்டுவதில்லை. மாறாக, அந்தப் பத்திரிகைகளை விடாப்பிடியாகப் படித்து நம்மை வளர்த்துக் கொள்கிறோம். ஆங்கிலச் சொற்களின் கிரேக்க, லத்தீன வேர்களைப் படித்துப் பயின்று நம் பிழைப்புக்கு வழி தேடுகிறோம். ஆனால், நாம் நம் ஆங்கில மொழி வளத்தைப் பெருக்க முயற்சிக்கும் அளவுக்குத் தமிழ் மொழி வளத்தைப் பெருக்க முயல்வதில்லை. புதிய தமிழ்ச் சொல் ஒன்றைப் பார்க்கும்போது நாம் அகராதியைத் தேடுவதில்லை. நம் தாய் மொழியில் நமக்குப் புரியாத சொல்லைப் பார்க்கும்போது நமக்கு அந்த எழுத்தாளர் மீது எரிச்சல் வருகிறது.
தமிழ் மொழி நமக்குக் கிடைத்த ஒரு மாபெரும் செல்வம். இந்தியாவின் இன்னொரு மாபெரும் இலக்கிய மொழியான சமஸ்கிருதத்தின் ஒப்பற்ற படைப்புகளை, வேதங்களை, கீதையை, சாகுந்தலத்தை, சௌந்தர்ய லஹரியை உணர்ந்து, புரிந்து, பேசும் மொழியில் அனுபவிக்கும் திறமையை நாம் இழந்து விட்டோம். கடந்த எழுநூறு ஆண்டுகளில் வளர்ந்த ஆங்கிலத்தில் சாசர் ஆங்கிலமும், தற்கால ஆங்கிலமும் முற்றிலும் வேறுபட்ட மொழிகளைப் பார்ப்பது போன்ற மயக்கம் தரும். தமிழிலோ, மிகக் குறைந்த பயிற்சியுடன் நம்மால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களையும் படித்துப் புரிந்து கொள்ள முடிகிறது. "தீதும் நன்றும் பிறர் தர வாரா", "குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்", "அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்", "இது பொறுக்குதிலை, தம்பி எரிதழல் கொண்டு வா!", "நதியில் விளையாடிக் கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே!" என்ற கவிதை வரிகள் பல வேறு நூற்றாண்டுகளில், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் எழுதப்பட்டவை. ஆனால், எழுத்துத் தமிழின் தொடர்ச்சியால் அவற்றை நாம் வாழும் மொழியிலேயே உணர்கிறோம்.
இந்த இரண்டாயிரம் ஆண்டு சொத்தை நம் அடுத்த தலைமுறையும் அனுபவிக்க வேண்டும் என்றால், நாம் ஓரளவுக்காவது துல்லியமான பொருள் உணர்த்தும் தமிழ்ச் சொற்களைப் புழங்க முயல வேண்டும். எழுத்துத் தமிழோடு பேச்சுத் தமிழையும் கற்றுக் கொள்ளும் இளைய தலைமுறைக்கு நாம் வழிகாட்டியாக அமைய வேண்டும். அதனால், கணினி (computer), இணையம் (internet), ஆவணம் (document, record), தொன்மை (antiquity), அகவி (pager), செல்பேசி (mobile phone) போன்ற சொற்களைப் பார்த்தால் அவற்றிற்கு இணையான ஆங்கிலச் சொற்களை ஏற்றுக் கொண்டது போலவே ஏற்றுக் கொள்ள முயல்வோம்.
ஆங்கிலத் திறமை இல்லாமல் ஆங்கில இதழ்களில் எழுத முடியாது. ஆனால் ஆங்கிலத் திறமை மட்டும் போதாது. அதே போல் தென்றலில் எழுதத் தமிழ்த் திறமை தேவை. ஆனால், தமிழ்த் திறமை மட்டும் போதாது. தமிழை வெறும் அடுக்களை மொழியாக ஒதுக்கி விடாமல், வாழும் மொழியாக வளர்க்க வேண்டும். இந்தச் சமுதாயக் கடமையை மனத்தில் கொண்டுதான் பாரதி நமக்கு "சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்!" என்று அன்புக் கட்டளை இடுகிறான். வாசகர்களுக்குப் புதிய கலைச்சொற்களை அறிமுகப்படுத்தும்போது அடைப்புக் குறிக்குள் இணையான ஆங்கிலச் சொல்லைத் தர எண்ணியுள்ளோம். தென்றல் தமிழ் நடை மட்டுமல்லாமல், இதன் எல்லாப் படைப்புகளையும் பற்றிய வாசகர்களின் கருத்துகளைத் தொடர்ந்து வரவேற்கிறோம்.
மணி மு. மணிவண்ணன் |