என் அம்மாவுக்காக......
இது நடந்து 3 வருடங்களிருக்கும். விடு முறைக்குப் பெங்களூர் போயிருந்தோம். அங்கே எனது மச்சினர் வீட்டில் தங்கினோம். வீட்டுவேலைக்கு தினமும் ஒரு பெண் வருவார். அவருடன் மூணு வயதுப் பெண் குழந்தையும் வரும். கன்னட ஊரென்றாலும் அந்தப் பெண் நன்றாகவே தமிழ் பேசுவார். குழந்தையும் அழகாக மழலைத்தமிழில் ஏதேதோ பேசிக் கொண்டே இருக்கும். நான் அதை ரசித்துக் கேட்பேன்.

ஒருநாள் சுமார் 4 மணி அளவில் மதிய வேலைக்கு இருவரும் வந்தனர். வரும்போதே குழந்தையின் கையில் சிறிய அரச இலைப் பொட்டலம் இருந்தது. அந்தப் பெண் வழக்கம் போல பாத்திரம் தேய்த்து, வீடு பெருக்கி, சுத்தப்படுத்தினார். கிட்டத்தட்ட 2 மணி நேரமாக அந்தக் குழந்தை, அந்தப் பொட்டலத் தைக் கீழே வைக்காமல் ஒரு கையில் வைத்துக் கொண்டே, மறுகையால் ஏதோ வரைந்து கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தது.

எனக்கு அந்தப்பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசை! அந்தக்குழந்தையிடம் நெருங்கி ''கையில் என்ன வைச்சிருக்கே?'' என்று கேட்டேன். உடனே குழந்தை திறந்து காட்டியது. அதில் ஓரு கரண்டி கேசரி! 'கமகம' மணத்துடன் இருந்தது. இதைக் கவனித்துக் கொண்டிருந்த அந்த வேலைக்காரப் பெண்,

''அம்மா, இது என் தங்கச்சி குழந்தை. ஒருவாரமா அவளுக்கு உடம்பு நல்லாயில்லை. அதான் நான் வீட்டுவேலைக்குக் கிளம்பும்போது இவளையும் கூட்டிக்கிட்டு வரேன். இன்னைக் குக் காலைல 8 மணிக்கு வேலைக்குப் போன வீட்டில் சத்யநாராயண பூஜையை நடத்தினாங்க. பிரசாதமாக இந்தக் கேசரியைக் குழந்தை கையில் கொடுத்தாங்க. இப்போ மணி நாலாகுது. ஒரு துளிகூட அதை வாயில் போடாம கையிலேயே வைச்சிக்கிட்டிருக்கா'' என்றார்.

ஏல வாசனையும், நெய் வாசனையும் ''கமகம''வென வரும் அந்தப்பொட்டலத்தைக் காட்டி, ''நீ திங்காமல் யாருக்காக இதை வைச்சிருக்கே?'' என்றேன் குழந்தையிடம்.

''என் அம்மாவுக்காக'' என்றது குழந்தை அழுத்தம் திருத்தமாக.

நான் அசந்தே போய்விட்டேன்.

மூன்றே வயதாகும் குழந்தை ஒரு சிறு சபலம்கூட இல்லாமல், தன் தாய்க்காக அந்தக் கேசரியை நாள் முழுவதும் வைத்துக் கொண்டிருந்தது என்னை மிகவும் நெகிழ வைத்தது.

தன் தாய்க்கு அந்தப் பிரசாதம் சேர்ந்தால் உடல்நலமாகிவிடும் என்ற நம்பிக்கையா இல்லை, தாயுடன் தான் பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்ற ஆசையா - எதுவாயினும் அது ஒரு தெய்வக் குழந்தையாக என் மனதில்பட்டது. அந்தக் குழந்தை என் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது.

மாலா பத்மநாபன்

© TamilOnline.com