தமிழா! உலாவி தொகுப்பு ஒரு அறிமுகம்
தமிழா! உலாவி, புகழ் பெற்ற மொசில்லா (http://mozilla.org) உலாவியின் தமிழாக்கம்/தமிழ் சார்ந்த சிறுமாற்றங்களுடன், http://thamizha.com வலைத்தளத்தில் இருந்து வெளிவரவிருக்கிறது.
தமிழா! தொகுப்பில் அடங்கியுள்ள செயலிகள்:

1. உலாவி (மாலுமி) (Browser)

இணையவெளியில் உலாவர உதவும் ஒரு செயலி. இணையவெளிக்கு வாசல் என்று கூறலாம். இது முழுக்க முழுக்கத் தமிழில் இருப்பது தமிழ் மட்டும் தெரிந்தவர்கள் இணையத்துள் பயமின்றி பிரவேசிக்கப் பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2. அஞ்சல்/மடற்குழு செயலி (Mail/News client)

அவுட்லுக் எக்ஷ்பிரஸ், யூடோரா போல் இதுவும் ஒரு POP3 மின்னஞ்சல் செயலியாகும். இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் கணக்குகளைப் பயன்படுத்தலாம். முழுக்க முழுக்கத் தமிழில் இருப்பதால், தமிழ் மட்டும் தெரிந்த யாரும் இதனை எளிதாகப் பயன்படுத்தி மடலாட முடியும்.

3. வலைப்பக்க தொகுப்பி (Webpage composer)
இதனைக் கொண்டு வலைப்பக்கங்களை எளிதாக வடிவமைத்து வலையேற்ற முடியும். அனைத்துக் கட்டளைகளும் தமிழில் இருக்கும்.

4. முகவரிப்புத்தகம் (Address book)
மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண், முகவரிகளை சேமிக்க.

5. ஐ.ஆர்.சி அரட்டைச் செயலி (IRC chat client)
ஐ.ஆர்.சி அரட்டைக்கு.

6. புத்தகக்குறிகள் (Book marks)
இந்தப் புத்தகக்குறிகளில் தமிழில் உள்ள முக்கிய வலைத் தளங்கள் அனைத்தும் குறிக்கப் பட்டிருக்கும். இதனால் தமிழா! பயன்படுத்துபவர்கள் வலைத்தளங்களின் வலை முகவரியை நினைவில் வைத்திருக்கவேண்டிய அவசியம் இருக்காது. வலையில் உலாவுவதை எளிமையாக்கும் முயற்சி இது.

இவையனைத்தையும் பயன்படுத்த ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டிய அவசியம் அறவே இல்லை. முழுக்க முழுக்கத் தமிழிலேயே, அனைத்துக் கட்டளைகளும், செய்திகளும், பிழை அறிவிப்புகளும் இருக்கும்.

தமிழா! வின் சிறப்பம்சம் இது ஒரு திறந்த நிரல் தொகுப்பு மற்றும் முழுக்க முழுக்கத் தமிழ் யூனிகோட் பயன்படுத்தப்பட்டு வெளிவர இருக்கும் முதல் செயலி என்பது தான்.

தமிழா! ஒரு இலவச மற்றும் open source செயலியாக இருப்பதால், யார் வேண்டுமானாலும், எந்தக் கட்டுபாடும் இல்லாமல் தமிழாவை வலையில் இருந்து இறக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். சிடியில் பதித்து கொடுக்கலாம். தமிழாவை சிடியில் பதித்து விற்கவும் செய்யலாம்.

பொதுவாக Open Source செயலிகளில் மூல நிரல் ஒரு public licenceக்கு உட்பட்டு அனைவரது பயன்பாட்டுக்கும் வெளியிடப்படும். தமிழா! MPL எனப்படும் mozilla public licenceக்கு உட்பட்டு வெளியிடப்படுகிறது.

இதன் முழு விபரத்தை, http://www.mozilla.org/MPL/MPL-1.0.html என்ற வலைத் தளத்தில் காணலாம்.

சுருக்கமாகச் சொன்னால், இந்த லைசன்ஸ்படி, தமிழா! மூல நிரல் உட்பட, இலவசமாக வெளியிடப்படும். அதனை யார் வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம், மாற்றிக்கொள்ளலாம், ஏன் விற்கக்கூட செய்யலாம்.

தமிழாவை வேறொருவர் அப்படியே எடுத்து வேறுபெயரில், (உதா: புதிய தமிழா என்று) வெளியிடலாம். ஆனால் அப்படி வெளியிடப்படும் புதிய தமிழாவும் open source ஆகத்தான் இருக்கவேண்டும். இதனால் இந்தத் தொழில்நுட்பம் முடங்காமல் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் பயன்படும். இதுதான் திறந்த நிரல் சித்தாந்தத்தின் சாரம்.

தமிழா! உருவாக்கம்

தற்போது தமிழா செயலி, கிட்டத்தட்ட 60% முடிக்கப்பட்டு, பயன்படுத்தும் நிலையில் உள்ளது. http://thamizha.com/developer வலைதளத்தில் இருந்து இறக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழாவை பயன்படுத்த நீங்கள் விண்டோஸ் 2000 அல்லது விண்டோஸ் XP வைத்திருக்க வேண்டியது அவசியம்.

லினக்ஸ் பதிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. லினக்ஸ் மற்றும் மேக்கிந்தொஷ் இயங்கு தளங்களுக்கும் தமிழா! வெளியிடப்படும்.

தமிழா! உருவாக்கத்தின் நிலவரத்தை http://thamizha.com/developer என்ற வலைத் தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தமிழா உருவாக்கத்தில் பங்கெடுப்பவர்கள் கலந்தாலோசிக்க ஒரு யாகூ (yahoo) குழுமம் செயல்படுகிறது. இதன் வலை முகவரி: http://groups.yahoo.com/group/ThamiZhaDeveloper

தமிழா ஃபோரம் பக்கத்திலும் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதன் முகவரி: http://thamizha.com/modules/newbb/

தமிழா குழுவில் உங்கள் பங்களிப்பைத் தர நீங்கள் மென்பொருள் தெரிந்தவராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. தமிழ் தெரிந்தவராக இருந்தால் போதும். பெரும்பகுதி வேலை மொழிபெயர்ப்பு சார்ந்தது தான்.

மேலும் மொழிபெயர்த்த சொல்லகராதி மற்றும் உதவி கோப்புகளை பிழையகற்றவும் உதவி தேவைப்படுகிறது. ஆர்வம் இருப்போர் இக்குழுமத்தில் சேர்ந்து தமிழா உருவாக்கத்தில் பங்கெடுத்துக்கொள்ளலாம்.

தமிழா இலவச செயலியாக இருந்தாலும், வணிகரீதியாகவும் பயன்பட வாய்ப்பு உள்ளது. தமிழா! சார்ந்த சேவைகளைப் பிறருக்கு வணிகரீதியாக அளிக்க யாருக்கும் எந்தத் தடையும் இல்லை. இதன் மூலம் தமிழ் கணினி பயன்பாடு அதிகரிக்கவும், புதிய தொழில்நுட்பத்தைப் பொருளாதாரப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தவும் வாய்ப்பு ஏற்படலாம். உலாவி செயலி முடிந்தபிறகு தமிழா குழுவில் ஓப்பன் ஓஃபீஸ் செயலியை தமிழாக்கம் செய்யத் திட்டம் உள்ளது. ஓப்பன் ஓ·பீஸ் தமிழர் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தமிழில் கிடைக்கும் போது, தமிழ் கணினி பயன்பாடு பெருமளவில் வளரும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த நோக்கம் நிறைவேற தமிழா! குழுவினர் செயல்படுகிறார்கள்.

தமிழா! உருவாக்கம், சமூக மென்பொருள் உருவாக்கத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.

ஊர் கூடி தேர் இழுப்பது போல், இனி தமிழர் ஒன்றுகூடி தமிழ் செயலி உருவாக்குவோம்.

முகுந்தராஜ் (mugunth@thamizha.com)

© TamilOnline.com