அதிகபிரசங்கிதனம்
சிக்காக்கோ.. தெவான் தெருவில் அந்த இன்டியன் ரெஸ்டாரண்டில் அன்று சரியான கூட்டம். வெள்ளிகிழமை. தேனை கண்ட தேனீக்கள் கூட்டம்தான் என் நினைவில் வந்தது.

என் பிள்ளை என்னையும் என் கணவரையும் ''என்ன வேண்டும் என்று கேட்டுக் கொண்டு மெனுவை பார்த்துக் கொண்டிருந்தான்.

'தோசை.. சொல்லட்டுமா? அல்லது பட்டூரா.. வேண்டுமா?'' என்றவனை 'என்னடா தோசை.. நம்மூர் சரவணபவன் தோசை வருமா? பட்டூரா நம்ம புரசைவாக்கம் ராஜ்பவனுக்கு ஈடாகுமா?'' என்றேன்.

''அம்மா.. இது அமெரிக்கா... அம்மா! இந்தியா மெட்ராஸ் அல்ல! இங்கு இருப்பதுதான் இருக்கும். வேணா.. கற்பனையில் சரவணாவை நினைத்து கொண்டு இந்த தோசையை சாப்பிடுங்கள்!! என்றான்.

ஐந்து மணி நேர கார் ஒட்டி வந்த களைப்பில் பசி அவன் முகத்தை படர.. தின்றான். ''சரி.. நாங்க ரெண்டு பேரும் கொலஸ்ட்ரால். பிபி பேஷண்ட் நீயே பார்த்து.. வாங்கி வா!! என்றோம்.

என் பார்வை எதிரில் டேபிளில் சாப்பிட்டு கொண்டிருந்த வெள்ளைக்கார ஜோடியை வட்டமிட்டு கொண்டிருந்தது.

''அம்மா அப்படி உற்று பார்க்கக்கூடாது! இங்கெல்லாம்...'' என்றான் பையன் மெதுவாக.

பொதுவாக நம்மூரிலேயே.. சாப்பிடுபவர் களை வேடிக்கை பார்க்க கூடாது. அப்படி பார்த்தால் ஆ.. அநாகரீகம். இது எனக்கும் தெரியும். ஆனால்... அவர்கள் சாப்பிட்ட விதம்... என்னை வியப்பில் ஆழ்த்தியது. இட்லி, சாம்பார், தோசை, பூரி என்று விதவிதமாய் வாங்கிக் கொண்டு எதையோ, எதையோ தொட்டுக் கொண்டு சாப்பிட் டார்கள். அதாவது இட்லியை வெறுமனே விழுங்கி அப்பப்போ தண்ணி குடித்தார்கள். தோசைக்கு இனிப்பு கேசரியை தொட்டு கொண்டார்கள். உருளை கிழங்கு மசாலாவை அப்படியே உப்புமா சாப்பிடுவது போல சாப்பிட்டார்கள். இதில் அடுத்து மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் சட்னி அதை சாஸ்போல எண்ணி கொண்டு அந்த பெண்மணி அப்படியே குடித்துவிட்டடாள்.

நான் பதறி போய்விட்டேன். அடுத்த நிமிடம். ஆசிட்டை குடித்ததுபோல்... அவள் அலறினாள் பாருங்கள். எல்லோருமே பயந்து போனோம். பையனின் எதிர்ப்பையும் மீறி நான் சட்டென்று தயிர் கிண்ணத்தை எடுத்துச் சென்று குடிக்க சொன்னேன். மடமடவென்று இரண்டு கப் தயிர் குடித்தாள்.

சற்று ஆசுவாசபடுத்தி கொண்டு... என் ரெண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு கண்ணில் ஒற்றி கொண்டாள். தாங்யூ.. தாங்யூ என்று பல நன்றிகளை கூறினாள். அவள் கண்களில் கண்ணீர். கண்கள் சிவந்து.. மூக்கு.. கழுத்து எல்லாம் சிவப்பு ரோஜாவாக இருந்தது. அவள் கணவனும் எழுந்து நின்று என் கையை பிடித்துக் கொண்டு நன்றி சொன்னான்.

நான் என் பையனை பார்த்தேன். அவனுக்கு இது நிச்சயம் பிடிக்காது. என்ன சொல்வானோ.. என்று நினைப்பாய் இருந்தது. ''மெல்ல புன்னகைத்த வண்ணம்.. ''சரிம்மா.. இனிமே இப்படி அதிகபிரசிங்கித்தனமாக ஏதும் செய்யாதீர்கள்..'' என்றான்.

நல்ல அமெரிக்கா போங்கள். அடுத்தவர் நலத்தை பாராமல் தன் வழியே போவது சுயநலமல்லவா? இந்தியா.. இந்தியாதான்!

இந்த ஊரில் வாழ்வதால் எல்லோரும் இப்படி இருக்கிறார்கள். வாஸ்த்தவந்தான். இதனால் பல தொந்திரவுகள் வரும் என்று ஒதுங்குகிறார்கள் என்பதும் புரிகிறது. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லையே!

குருபிரியா

© TamilOnline.com