க்ளீவ்லேண்டு ஆராதனை
இந்திய - அமெரிக்கனி கலாசாரம்

'அமெரிக்கத் திருவையாறு' என்று அழைக்கும் அளவுக்கு, இன்று சிறப்புப் பெற்றிருக்கும் ''கிளிவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை'' கமிட்டியின் நிறுவனர் திருமதி. கோமதி சுந்தரம் அவர்களைத் 'தென்றல்' இதழுக்காகச் சந்தித்த போது...

கே : க்ளீவ்லேண்டில் இந்தத் தியாகராஜ ஆராதனை விழா எந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது? இதை ஆரம்பிக்கத் தூண்டு கோலாய் இருந்தவர் யார்?

ப : 1978 ஆம் ஆண்டு, க்ளீவ்லேண்டைச் சேர்ந்த பத்துப்பதினைந்து இந்தியக் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவுகளில் பஜனை செய்து வந்தோம். பஜனையின் இறுதியில் சிறுசிறு பக்திப் பாடல்களைப் பாடுவோம். ஒருமுறை, சங்கீத வித்வான் திரு. ராம்நாட் கிருஷ்ணன் அவர்களின் சகோதரர் திரு. ராம்நாட்ராகவன் பஜனைக்கு வந்திருந்தார். அவர் ஒரு மிருதங்க வித்வான். இசையில் இந்தஅளவுக்கு ஈடுபாடுள்ள நீங்கள் அனைவரும் சேர்ந்து ஏன் தியாகராஜ ஆராதனை செய்யக்கூடாது?'' என்று கேட்டதோடு நின்று விடாமல் அதற்கான வழிமுறைகளையும் கூறி எங்களை ஊக்குவித்தார். இந்திய வானொலி நிலையத்தில் இருந்து ஒளிப்பதிவு நாடாக்களை வரவழைத்து, திரு. பஞ்சாபகேச ஐயர் அவர்களின் ஸ்வர வரிசைகள் உதவியுடன், பல சிறு கீர்த்தனைகளையும், வராளி முதற்கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகள் ஐந்தையும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்.

ஆரம்பித்த முதல் வருடமே டொராண்டோவிலிருந்து திருமதி. அனுராதா சுப்ரமணியன் அவர்கள் வந்திருந்து கச்சேரி செய்தார். அன்று வந்திருந்தவர்களின் எண்ணிக்கை வெறும் எழுபதுதான். இப்படியாக ஒரு தேவாலயத்தின் அடித்தளத்தில் முதன்முதலாக தியாகராஜ ஆராதனை ஆரம்பித்தது. மதிய உணவுக்குப் பின், மாலையில் வாஷிங்டன் டி.சி. யைச் சேர்ந்த திருமதி. சரோஜா பாலசுப்ரமண்யன் கச்சேரி செய்தார்.

அதைத் தொடர்ந்து 1979ம் ஆண்டு தில்லியைச் சேர்ந்த பேராசிரியரும் சங்கீத வித்தகருமான திரு டி.ஆர். பாலசுப்ரமண்யன் அவர்கள், தாமாகவே மனமுவந்து வந்து எந்தவித சன்மானமும் பெற்றுக் கொள்ளாமல் கச்சேரி செய்தார். அவருக்குத் திருமதி. கல்யாணி வரதராஜன் வயலினும், திரு ராம்நாட் ராகவன் மிருதங்கமும் பக்கவாத்தியம் வாசித்தனர். பின்னர் திரு டி.ஆர். பாலசுப்ரமண்யன், எங்களுக்குச் சின்னச்சின்னதாய் சில கீர்த்தனைகள் கற்றுக்கொடுத்ததோடு எங்கள் பஞ்சரத்னக் கீர்த்தனைகளுக்கு இன்னும் மெருகேற்றினார்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமாயின் திரு. பாலசுப்ரமண்யன் குடும்பம் இந்த தியாகராஜ ஆராதனையின் முதுகெலும்பு எனலாம். இதற்காக முழுமூச்சாய் உழைக்கும் குடும்பங்களுக்கு அவரும் அவர் மனைவி கோமதி பாலசுப்ரமணியமுமே முன்னுதாரணம் எனலாம்.

கே : இந்தத் தியாகராஜ ஆராதனை விழா எவ்வளவு நாட்கள் நடைபெறும்?

ப : ஆரம்பத்தில் மூன்று நாட்கள் என துவங்கிய நிகழ்ச்சிகள் பின்னர் ஏழு நாட்கள் என மாறி இன்று பத்து நாட்கள் நடைபெற்றுவருகின்றன. சர்வதேச அளவில் இன்று பேசப்படும் நிகழ்ச்சி யாகவும் ஆகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா முழுவதிலும் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வித்வான்கள் முதல் வளர்ந்து வரும் வித்வான்கள் வரை, இதில் பங்கு கொள்வதைப் பெருமையாகவே கருதுகிறார்கள்.

கே : இந்த நிகழ்ச்சியின் குறிக்கோள் என்ன? மேலும் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இந்தியக் குழந்தைகளை, இந்த நிகழ்ச்சி எவ்வளவு தூரம் சென்றடைந்திருக்கிறது?

ப : சொல்லப்போனால் வெறும் ஆராதனை நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், இதை ஒரு பெரிய கல்விக்கூடமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இங்கு எல்லாருக்கும் இருக்கிறது.

குழந்தைகளுக்குக் கர்நாடக சங்கீதத்தில் போட்டிகள் ஏற்படுத்தி இருக்கிறோம். இதன் மூலம் சங்கீதத்தைப் பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை அவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பது இதன் முக்கிய நோக்கம்.

இம்முறை அமெரிக்காவில் இருந்து 180 குழந்தைகள் வந்து இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து வந்த இசை வித்தகர்கள் அதற்கு நீதிபதிகளாய் இருந்து பரிசுகள் வழங்குகினார்கள். இப்போட்டிகளில் பங்கு கொள்வதன் மூலம், குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் சங்கீத வித்வான்களுடன் பரிச்சயம் ஏற்பட்டுத் தங்கள் இசை அறிவை வளர்த்துக் கொள்ள ஒவ்வொரு வருடமும் கோடைவிடுமுறை சமயங்களில் இந்தியா சென்று இசை பயிலுகின்றனர். இதனால் இங்கு இசையின் தரம் ஒவ்வொரு வருடமும் அதிகரிப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது.

கே : இதற்கு என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கிறது? யார் உங்களுக்கு உதவுகிறார்கள்?

ப : இங்குள்ள பல்கலைக்கழகம் தற்போது முன்வந்து எங்களுக்கு இடவசதி, ஒலி மற்றும் ஒளி வசதிகளையும் குறைந்த விலையில் செய்து தருகிறார்கள். அங்கு பயிலும் இந்திய மாணவர்களும் முன் வந்து உதவுகின்றனர்.

பங்கு கொள்பவரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் ஆராதனையின் பொழுது இருநாட்களுக்கு அனைவருக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடாக ஒருவாரம் முன்பே நாங்கள் திரு. பாலுவின் தலைமையில் ஒன்றுகூடி, செய்ய வேண்டிய உணவுப் பட்டியல் தயார் செய்து சமையல் பொறுப்பைப் பகிர்ந்தளிக்கிறோம். உதாரணமாகச் சில சமயங்களில் மலையாளிகள் சங்கம் அனைவருக்குமான பாயசமும், ஆந்திரா சங்கம் அனைவருக்குமான புளியோதரையும் செய்துதர முன் வருவர். கிட்டத்தட்ட மூவாயிரம் பேருக்கான உணவை எந்தக் குழப்பமுமில்லாமல் பங்கீடு செய்ய தொண்டர்கள் மனமுவந்து உதவுகின்றனர்.

கே : வெளி நாட்டிலிருந்தும், வெளி ஊரிலிருந்தும் இங்கு வருபவர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தருகிறீர்கள்?

ப : எங்களின் இணையதளம் மூலம் எங்களைத் தொடர்பு கொண்டால் அவர்களுக்குக் குறைந்த விலையில் தங்கும் அறைகள் பதிவு செய்து கொடுப்போம். மேலும் போன வருடம் முதல் பாக்கேஜ் டீல் ஒன்று ஏற்படுத்தியுள்ளோம். அதன் மூலம் தங்கும் வசதி, இருவேளை உணவு, மற்றும் கச்சேரிகளின் போது முன் வரிசகைளில் அமர்ந்து ரசிக்க வசதி, போன்றவற்றை நியாயமான விலையில் செய்து தருகிறோம்.

கே : பெரிய வித்வான்களுடன், கச்சேரிகளைத் தவிர வேறு எந்த முறையில் ரசிகர்கள் அளவளாவ முடியும்?

ப : காலை, மதிய நேரங்களில் workshops அல்லது இசைப் பேருரைகள் பல நடந்து கொண் டிருக்கும். அதைக் கேட்பதன் மூலம் சிறியவர் முதல் பெரியவர் வரை பல நல்ல அரிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது. பல சங்கித வித்தகர்களின் அனுபவங்கள் இவர்களுக்கு ஒரு பாடமாய் அமையவும் வாய்ப்பிருக்கிறது.

கே : இளையதலைமுறையினர் எவ்வளவு தூரம் இதில் ஈடுபாடு கொள்கின்றனர்?

ப : ஒவ்வொரு முறை விழா முடிந்ததும் இளைய தலைமுறையினருடன் அமர்ந்து, இதை அடுத்த முறை இன்னும் எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியும் என்பதற்கான திட்டங்களைத் தீட்டுகிறோம். போனமுறை அவர்கள் கூறியபடி, இம்முறை வருபவர்களுக்கெல்லாம் பல நிறங்களில் டோக்கன் கொடுத்து, உணவு நேரத்தைப் பிரித்து, கூட்ட நெருக்கடியைச் சமாளித்தோம். கணினி மூலம் பல புதிய திட்டங்களையும், நல்ல இணைதளம் அமைக்கவும் அவர்கள் முன் வந்து உதவுகின்றனர். எங்களுக்குப் பிறகு அடுத்த தலைமுறை இதை இன்னும் சிறப்பாகச் செய்யத் தயாராகி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

கே : அமெரிக்காவில் இருக்கும் இசைப்பள்ளிகளிடமிருந்தும், மற்றும் இசை ரசிகர்களிடமிருந்தும் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

ப : உண்மையைக் கூற வேண்டுமாயின் இம்மாபெரும் நிகழ்ச்சி கடவுளின் அருளையும், மற்றவர் அளிக்கும் பொருளுதவியையும் மட்டும் நம்பியே நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் அதிகபட்ச சராசரி வருமானம் பெறுபவர்கள் இந்தியரே. அவர்கள் இதில் பங்குகொள்வதோடு மட்டுமில்லாமல் மனமுவந்து பொருளுதவியும் செய்தால் மேன்மேலும் இதைச் சிறப்பாகச் செய்ய முடியும்.

கே : இந்த வருட விழாவில் யாரெல்லாம் கெளரவிக்கப்பட்டிருக்கிறார்கள்? சிறப்பு விருந்தினர் யார்?

ப : இருபத்தி ஆறாவது வருடமான இம்முறை, இசைமேதை திரு ஆர்.கே. ஸ்ரீகண்டன் அவர் களுக்கு ''சங்கீத ரத்னாகரா'' விருதும், நாட்டியத்துறையில் சிறந்து விளங்கும் திருமதி ராதா அவர்களுக்கு ''நிருத்ய கலா ரத்னா'' விருதும், இசைத்துறையில் தன்னிரகற்ற சேவை செய்து வரும் நல்லிகுப்புசாமி செட்டியார் அவர்களுக்கு 'கலாசேவா மணி' விருதும், மேலும் அமெரிக்காவில் இருந்துகொண்டு இசைச் சேவை செய்து வரும் நியூஜெர்சியைச் சேர்ந்த பார்கவி சுந்தரராஜன் அவர்களுக்கும், இவருடன் இணைந்து சிறந்து பணியாற்றும் தொண்டர்களான திரு மணி ஐயர் மற்றும் திரு ராஜேஷ் வெங்கடாசலத்துக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

******


ஆராதனை கமிட்டியின் தற்போதைய தலைவர் திரு பாலசுப்பிரமணியம் (க்ளீவ்லேண்டு பாலு) அவர்கள் இந்த விழாவைப் பற்றிக் கூறும்போது:

எந்தவித பலனையும் எதிர்பாராமல், வெறுப்பு, பொறாமை போன்ற தீய எண்ணங்களை அணுகவிடாமல் இனிமை யாக, முழுமனதோடு எதைச் செய்தாலும் அதில் வெற்றி நிச்சயம் என்ற எண்ணத்துடன், எங்களை இந்த இசைச் சேவையில் ஈடுபடுத்திய திரு ராம்நாட் ராகவனுக்கு எங்களின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த விழா, தொண்டர்களை மட்டுமே நம்பி நடத்தப்படுகிறது. மேல்நாட்டு இசை போல கூட்டத்தைச் சுலபத்தில் கூட்டிவிட முடியாது. தனியாக எதையும் சாதிக்கவும் முடியாது. ஒரு குழுவாக இணைந்து உழைத்ததால்தான் இந்த விழாவை வெற்றி பெறச் செய்யமுடிந்தது.

க்ளீவ்லேண்டு ஆராதனை விழா பற்றிய அனைத்துத் தகவல்களையும் www.aradhana.org என்ற இணையதளத்தில் காணலாம்.

******


விழா அமைப்பாளர்களுள் ஒருவரான திரு சுந்தரம் அவர்களுடன் தொடர்பு கொண்ட போது...

சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்பவர்களை, 'பாடிய பல்லவியையே பாடாதே' என்றும், அழ ஆரம்பிக்கும் குழந்தையை 'முகாரி பாட ஆரம்பித்துவிட்டாள்' என்றும் பலபேர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். அந்த அளவுக்கு நம் வாழ்வோடு இசை கலந்திருக்கிறது. அயர்லாந்த் சமூகத்தின் கலாச்சாரமான 'St. Patrick's தினத்தை' ஒவ்வொரு 'ஐரிஷ்-அமெரிக்கனும்' பச்சை உடை உடுத்திக் கொண்டாடு வதைப் போல, இந்திய-அமெரிக்கனுக்கான கலாச்சார விழாவாக ''தியாகராஜ ஆராதனை'' விழா மாற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

லதா ஸ்ரீனிவாசன்

© TamilOnline.com