தமிழர்களுக்காக தமிழில்...
போர் முடிந்துவிட்டது; இராக்கின் தலைவிதியைத் தீர்மானிப்பது யார், அந்த நாட்டைச் சீரமைக்கும் வேலை யாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், போன்ற வாணிக நுட்பங்கள் முன்னிலைக்கு வந்துவிட்டன. அழிவு ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இனிமேல் கண்டுபிடிக்கப்படுமானால் நம்பிக்கை பிறக்குமா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. மக்களின் மறதி ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு சொற்சிலம்பம் விளையாடும் அரசியல்வாதிகள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள் என்பதும், மக்களும் வெற்றி பெற்றோர் பக்கமே சாய்வார்கள் என்பதும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

உலகத்தின் தனியொரு வல்லரசு என்ற மகுடத்தில் மற்றொரு மணியாக மட்டும் இந்தப் போரின் வெற்றியைக் கருதாமல், இராக்கின் பிரச்சனைகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளின் பலநாள் சிக்கல்களுக்கும் நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில் முதற்படியாகக் கருதி அமெரிக்காவின் அதிபரும் அவரது அதிகாரிகளும் செயல்படுவார்கள் என்று நம்புவோம்!

செப்-11, இராக் போர், இப்போது SARS என்று விமானப் பயண நிறுவனங்களுக்கு அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. பொருளாதார, வாணிகத் துறை வல்லுனர்கள் இந்தக் கடும் புயலைக் கடக்க வழி கண்டு பிடிப்பார்களாக!

இரு தன்னிலை விளக்கங்கள்:-

1. பாரதிதாசனின் கவிதை ஒன்றில், காட்டில் சந்திக்கும் வேடன் ஒருவன் பறவைகளைக் குறிக்க நல்ல தமிழ்ப்பெயர்களைப் பயன்படுத்த, கவிஞர் 'தமிழா நீ வாழ்க என்றேன்' என்று சொல்வதாக ஒரு இடம் வரும். இதற்கு நேர் எதிரான மனநிலையே தென்றலுக்கு அதிகம் வாய்த்திருக்கிறது. பழந்தமிழிலோ அல்லது தனித்தமிழிலோதான் எழுதுவது என்ற கோட்பாடு நமக்கு இல்லை. (நண்பர் அசோக் சுப்ரமணியன், தமிழ்ப் 'படுத்தல்' என்று குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது). ஆங்கில வார்த்தைகளையே உபயோகிப்பது பழகிவிட்டதாலும், தமிழ் வார்த்தைகள் தெரியாத காரணத்தாலும் தின வாழ்வில் பல ஆங்கிலச் சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் சரளமாகிவிட்டன. இதற்கு மாற்று, தமிழ் வார்த்தைகளை அறிந்து கொள்வதும், அவற்றை உபயோகிப்பதும்தான். உதாரணம்: ஊடகம் (media/medium) என்ற வார்த்தை. தென்றல் இது போன்ற சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

போதனை செய்யவோ பாடம் நடத்தவோ தென்றலுக்கு எண்ணமில்லை. ஆனால் தமிழர்களுக்காகத் தமிழில் கொண்டு வரப்படும் பத்திரிகை என்ற முறையில், மணிப்பிரவாளத்தில் இறங்குவதும், கொச்சைத்தமிழில் எழுதுவதும் சரியல்ல என்று எண்ணுகிறோம். அதே சமயம், வாசகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த மாதத்தில் இருந்து இது போன்ற சில சொற்களின் பட்டியலை வெளியிடப் போகிறோம்.

2. இந்து மதம் தவிர பிறமதங்களைப் பற்றிய செய்திகளோ, குறிப்புகளோ, கட்டுரைகளோ பிரசுரிக்கப்படுவதில்லை என்று வெவ்வேறு சமயங்களில் பலர் சொல்லியிருக்கிறார்கள். தென்றல் எந்த மதத்தையோ அல்லது பிரிவையோ சார்ந்தது அல்ல. அமெரிக்கத் தமிழ் அன்பர்கள் எழுதி அனுப்புவதிலிருந்து எங்கள் நோக்கில் நன்றாக இருப்பவை வெளியிடப்படுகின்றன. எழுதப்படும் தலைப்புகளில் சமயம் அதிகமாக இருக்கிறது என்பது உண்மையே. தமிழ்க் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் சமயத்துக்கு இடம் உண்டு என்பது மறுக்க முடியாதது. அதேபோல் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், பண்பாட்டு வளத்திற்கும் எல்லா சமயத்தினரின் பங்களிப்பும் இருந்தது என்பதும் மறுக்க முடியாதது (ஆனால் சில சமயம் மறக்கப்படுகின்ற ஒன்று).

சொல்லப்போனால், இந்த கலாசார, பண்பாட்டு விஷயங்களில் மதம், கடவுள் போன்றவற்றைச் சாராதவையே அதிகம். ஆனால் அந்த விவாதத்திற்கு இது சமயமில்லை!

எழுதி அனுப்புங்கள் - நிச்சயம் பிரசுரிக்கிறோம் - சுவையானதாகவும், தேவையானதாகவும் இருக்குமானால்!

மீண்டும் சந்திப்போம்.
பி. அசோகன்
மே - 2003

© TamilOnline.com