கண்டு, கேட்டு, ரசித்த - கண்மணியே!
ஏப்ரல் 27ஆம் தேதி, சங்கரா கண் நல மையத்தின் நற்பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, தில்லானா குழுவினரின் 'கண்மணியே' இசை நிகழ்ச்சி விரிகுடாப் பகுதியில் உள்ள 'ஹேவர்ட் சபாட்' கல்லூரியில் நடைபெற்றது.

சென்ற வருடத்தில் 'வாராயோ வசந்தமே' நிகழ்ச்சியைக் கலக்கிய தில்லானா இசைக் குழுவினர், அதைப் போலவே இந்த வருடமும், 'பாடல்கள் பாடுவது மட்டுமல்ல இசை நிகழ்ச்சி என்று நிரூபிப்பது போல, இயல்-இசை-நாடக வடிவில் இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக வழங்கினார்கள்.

மொத்தம் 23 பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர் தில்லானா இசைக்குழுவினர். இந்த இசை நிகழ்ச்சியின் முன்னணிப் பாடகர்கள் "அனிதா, ஹம்சா, கவிதா, ரேவதி, அலெக்ஸ், முகுந்தன், பஞ்ச், ராகவன், சம்பத் மற்றும் சுந்தர். சுந்தர் - கவிதா குரல்களில் 'சந்தனக் காற்றே' (தம்பிக்கு எந்த ஊரு), ராகவன் - அனிதாவின் குரல்களில் 'முல்லை மலர் மேலே' (உத்தம புத்திரன்), ஹம்சாவின் குரலில் 'ஹல்லோ மிஸ்டர் எதிர்கட்சி' (இருவர்), அலெக்ஸ் - சம்பத் - அனிதாவின் குரல்களில் 'வீரபாண்டி கோட்டையிலே' (திருடா திருடா), முகுந்தன் - கவிதா குரல்களில் 'காவியமா நெஞ்சில் ஓவியமா' (பாவை விளக்கு), ராகவன் - ஹம்சா குரல்களில் 'தூங்காத விழிகள்' (அக்னி நட்சத்திரம்) ஆகிய பாடல்கள் மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தன. சங்கர் மகாதேவனின் 'Breathless' பாடலை (கிட்டத்தட்ட) மூச்சு விடாமல் பாடி பலத்த கைத்தட்டல் பெற்றார் ராகவன் மணியன். ராகவன் எழுதி இசையமைத்த, தில்லானா குழுவினர் பாடிய 'கண்மணியே' சிறப்புப் பாடல் நல்ல மெட்டுடன் இனிமையாக அமைந்திருந்தது.

கிஷ்மு - நாகராஜ் ஆகியோரின் தெளிவான கீ போர்ட்டும் , டேனி-திருட்டிமான் தாஸ்குப்தாவின் சிறப்பான கிடாரும், ராகவன் மணியனின் இனிய புல்லாங்குழலும், அலெக்ஸ் - பஞ்ச்சின் தாளமிக்க தபலா மற்றும் டிரம்ஸ¤ம், நடராஜின் இதமான மிருதங்கமும், விக்ரமின் துடிப்பான வீ-டிரம்ஸ¤ம், மதுவின் இனிமையான வீணையும் பாடகர்களுக்குப் பக்க பலமாக இருந்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.

ஒவ்வொரு பாடலின் பொழுதும், மேடையின் பின் திரையில், அப்பாடல் சம்பந்தப்பட்ட படங்கள், காட்சிகள் காட்டப்பட்டது மிகவும் வித்தியாசமாகவும், அழகாகவும் இருந்தது. அத்துடன், பாடப்படுகின்ற பாடல் மற்றும் படம் பற்றிய விபரங்களும் காட்டப்பட்டன. இவை எல்லாவற்றுக்கும் அழகு சேர்க்கும் வகையில், மேடையில் சினிமா சுவரொட்டிகள் தோரணங்களாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. பின்திரைக்காட்சிகள் மற்றும் மேடை அமைப்புகள் செய்த சியாமளா குழுவினர்களுக்குப் பாராட்டுகள் !

நிகழ்ச்சியில் மூன்று பாடல்களுக்கு குமுதா-சம்பத் குழுவினர், மற்றும் ஜனனி குழுவினர் நடனமாடினர். இவற்றில், 'வீரபாண்டி கோட்டையிலே' பாடலுக்கு ஜனனி குழுவினர் ஆடிய நடனம் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. பாடல்களுக்கு இடையே அலெக்ஸ் அருளந்து எழுதி இயக்கிய ஒரு நாடகமும் இருந்தது. கல்யாணப் பெண் தேடி இந்தியா சென்று கஷ்டப்படும் ஒரு விரிகுடாப் பகுதி வாலிபனின் கதையை நகைச்சுவையாகச் சொல்லி ரசிகர்களை மகிழ வைத்தனர்! இக்கதையின் நாயகனாக நடித்த சுப்பு சந்திரசேகரன் அனைவரையும் தொடர்ந்து சிரிக்க வைத்தார்.

நிகழ்ச்சியின் நடுவில் சங்கரா கண் நல மையத்தின் நற்பணிகள் பற்றிய படத்தைப் பார்த்த போது நம் கண்கள் பனித்தன. இந்தச் சிறப்பான நிகழ்ச்சியைக் கிட்டத்தட்ட 1400 பேர் அரங்கம் நிறைய அமர்ந்திருந்து பார்த்து மகிழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நல்ல காரியத்திற்காக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் தந்த ஆதரவைப் பார்த்து மனம் நெகிழ்ந்தது.

புதிதும், பழையதுமாகப் பாடல்கள் கலந்திருந்தாலும், பாடல்களின் தேர்வு சென்ற வருடம் 'வாராயோ வசந்தமே' நிகழ்ச்சி யைப்போல சிறப்பாக இல்லை என்று தோன்றியது. நிகழ்ச்சியின் ஆங்காங்கே மைக் சரியாக வேலை செய்யாததால் சில நேரங்களில் நாடக வசனங்கள், பாடல் வரிகள், இசை ஆகியவற்றைச் சரியாகக் கேட்க முடியவில்லை.

சங்கரா கண் நல மையத்தின் நற்பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காகவும், அதே சமயத்தில், ரசிகர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தரவேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்துடனும் பாடுபட்டிருக்கும் தில்லானாவின் 'தில்'லான முயற்சியைக் கட்டாயம் பாராட்ட வேண்டும்!

மொத்தத்தில், தில்லானாவின் 'கண்மணியே', கண்ணுக்கும் காதிற்கும் இனிமையே!


சூப்பர் சுதாகர்

© TamilOnline.com