ரவிகிரன் அளித்த ராக விருந்து
இந்த மேமாதம் 16-ம் தேதி சாய் லயாவின் ஆதரவில் வில்லோ க்ளென் பகுதியில் நடைபெற்ற திரு. ரவிகிரன் அவர்களின் இசை நிகழ்ச்சி மிகவும் ரசிக்கத்தக்கதாய் இருந்தது. ஊத்துக்காடு வேங்கட கவியின் அரிய பாடல்களின் சிறப்பு விளக்க உரையுடன் அமைந்த அந்த நிகழ்ச்சியில் ரவிகிரன் நம் எல்லோருக்கும் அறிவு விருந்து படைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். நிகழ்ச்சியின் முன்னுரைப் பகுதியில் பேசிய Sounth India Fine Arts-ஐச் சேர்ந்த சிவகுமார் ஊத்துக்காடு வேங்கட கவியின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறியும் வகையில் எடுத்துரைத்து, பின் வரப்போகும் இசையின் சிறப்பை உணர்த்தினார்.

ரவிகிரன் வேங்கட கவியின் விநாயகர் பாடலான "ப்ரணவா காரம் சித்தி விநாயகம் - ராகம் ஆரபி" பாடலில் துவங்கி தொடர்ந்து, அபூர்வப் பாடல்களான, "உதய கோப சுந்தர - ராகம் உமாபரணம்", "என்னதான் இன்பம் கண்டாயோ - ராகம் தேவகாந்தாரி", "சரசிஜ நாப - ராகம் கல்யாணி" என தொடர்ந்து கான விருந்து படைத்து நம் இசை அறிவுக்கு ஒளியூட்டினார்.

சப்த ரத்னங்களைப் பற்றி ரவிகிரன் விளக்கி, அதில் ஒன்றான பரஸ் ராகத்தில் அமைந்த அறுபத்து நான்கு நாயன்மார்கள் பெயர்களையும் உள்ளடக்கிய பாடலின் வரிகளைப் பாடிப் பரவசமூட்டினார். அன்றைய இசை நிகழ்ச்சியின் சிறப்பாக அது அமைந்தது.

வேங்கட கவியின் சாஹித்ய சிறப்பு அவருடைய முருகனைத் துதிக்கும் பாடலில் "வாங்க எனக்கு இரு கைகள், வழங்கவோ உனக்கு பன்னிரு கைகள்" என்ற பாடலில் நன்கு வெளிப்பட்டது.

ராக, சாஹித்ய சிறப்பு மட்டுமின்றி, வேங்கட கவியின் தாளப்புலமை இசை மும்மூர்த்திகளையும் விட பல மடங்கு அதிகமான தாளங்களை உபயோகப்படுத்தியிருப்பதிலிருந்து வெளிப் பட்டது என்றால் அது மிகையாகாது.

அதனை ரவிகிரன் சற்றும் சிரமமின்றி பாடியது அவருடைய இசை மேன்மையையும் மிக நன்கு வெளிப்படுத்தியது. மேலும் பல பாடல்களைப் பாட மாட்டாரா என்று அனைவரையும் கேட்க வைத்தது.

இந்த நிகழ்ச்சிக்கு திரு ஸ்ரீவத்சன் தன் வயலினாலும், திரு ரமேஷ் ஸ்ரீனிவாசன் (சாய் லயா அமைப்பின் நிறுவனர்) தனது மிருதங்கத்தினாலும் மெருகூட்டினார்கள்.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த திரு கோவிந்தராவ் அவர்கள் தன் சுவையான பேச்சின் மூலம் கவர்ந்தார். அவர் தன் பேச்சில் நகைச்சுவையாக வேங்கட கவியை மும்மூர்த்திகளைவிட உயர்த்தியது சற்று ஆச்சர்யமானது.

ரவிகிரன் தனது பேச்சில், இத்தகைய அரிய படைப்புகள் ஒரு சிலரின் உடைமையாக இருந்து விடாமல் அனைவரையும் சேர தன் முயற்சிகளைக் குறிப்பிட்டார். அவர் முயற்சி வெற்றி பெற நம் வாழ்த்துகள்.

சாய் லயாவின் இந்த முயற்சியைப் பாராட்டுகிறோம். இதைப் போன்று மேலும் பல நிகழ்ச்சிகள் அமைக்க சாய் லயா மற்றும் SIFA முன்வர வேண்டும்.

பத்மப்ரியன்

© TamilOnline.com