நான் எப்போதும் தெருப்பாடகன் தான் - கவிஞர் மு.மேத்தா
தமிழ்க் கவிதையுலகில் புதுக் கவிதைகள் மூலமாக ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பேராசிரியர் மு. மேத்தா. பன்முக ஆளுமை படைத்தவர். தமிழறிஞர். சொற்பொழிவாளர், எழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர், திரைப்பட வசனகர்த்தா. சென்னை மாநிலக் கல்லூரியின் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். விகடன் விருது, இலக்கியச் சிந்தனை விருது தொடங்கி சாஹித்ய அகாடமி வரை பல்வேறு பெருமைக்குரிய விருதுகளை வென்றவர். உலகெங்கும் பல தமிழர் அமைப்புகளிலும் இலக்கியச் சொற்பொழிவாற்றி வருகிறார். இவரது படைப்புகள் பல்கலைக் கழகங்களில் பாடமாகவும், ஆய்வுக் கருவாகவும் உள்ளன. ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நானூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். 'பாடு நிலாவே தேன் கவிதை', 'கற்பூர முல்லையொன்று', 'மயில் போல பொண்ணு ஒண்ணு' போன்ற இனிய பாடல்களை இயற்றியுள்ளார். 1974-ல் வெளிவந்த இவரது கவிதைத் தொகுதியான 'கண்ணீர்ப் பூக்கள்' முதல், வரலாற்றுப் புதினமான சோழநிலா வரை இவர் எழுதிய 35 நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது முதல் வரலாற்றுப் புதினம் ஆனந்த விகடன் பொன்விழாவில் முதல் பரிசை வென்றது. அவருடன் ஓர் உரையாடல்:

கே: மு. மேத்தா என்பது ஏதோ வடநாட்டுப் பெயர் போல் உள்ளதே. இது உங்களது இயற்பெயரா?

ப: என்னுடைய முழுப்பெயர் முகமது மேத்தா. மேத்தா என்பது குடும்பப்பெயர். என் சித்தப்பா கே.எம்.எம். மேத்தா கொடைக் கானல் நகராட்சித் தலைவராக இருந்தவர். பெரியகுளம் முனிசிபல் தலைவராக இருந்தார். அண்ணா காலத்தில் எம்.எல்.ஏ வாக இருந்தார்.

கே: எந்த வயதில் முதல் கவிதை எழுதினீர்கள்? உங்கள் வீட்டில் கவிதை எழுதுவோர் இருந்தார்களா?

ப: என் தாத்தா ஒருவர் மரபுக்கவிதைகள் எழுதி நான் பார்த்திருக்கிறேன். சமூகப் பிரசாரப் பாடல்கள் எழுதுவார். எனக்கு தெருப்பாடகர்கள் மீது சிறு வயதில் இருந்தே ஈர்ப்பு உண்டு. அவர்களை spontaneous poets என்று கூறலாம். அவர்கள் மரபு படித்த தில்லை. அவர்களது பாடல்களை ஏழு அல்லது எட்டு வயது முதலே கேட்டு வந்திருக்கிறேன். மற்றும் எனக்கு பாரதி, பாரதிதாசன் ஆகியோர் கவிதைகளில் ஈடுபாடு உண்டு. இவையெல்லாம் சேர்ந்து என்னைக் கவிதை எழுத வைத்தது. ஏறத்தாழ ஒன்பது வயதிலேயே சந்த ஒழுங்குடன் கவிதையென்ற பெயரில் ஏதோ ஒன்றை எழுதத் தொடங்கிவிட்டேன். எனக்குப் பதினாறு வயதாகையில் என் கவிதையும் பருவத்துக்கு வந்தது. முழுமையான வடிவிலே பத்திரிகைகளில் பிரசுரமாகவும் தொடங்கி விட்டது.

கே: என்னென்ன மொழிகள் உங்களுக் குத் தெரியும்? பன்மொழிப் புலமை கவியாற்றலைச் செம்மைப்படுத்துகிறதா?

ப: மிக அதிக வெளிச்சம் கண்களைக் கூச வைத்து, எதையும் சரியாகப் பார்க்க விடாமல் செய்துவிடும். அளவான வெளிச்சம்தான் பார்க்க உதவும். எனக்கும் மொழிகளைப் பொறுத்த அளவில் அளவான வெளிச்சம் தான் உண்டு. அறிவு என்பது கவிதைக்கு எதிரானது என்பது என் கருத்து. கவிதை இதயத்தோடும், அறிவு மூளையோடும் சம்பந்தப்பட்டது. மொழி என்று சொன்னால் தமிழ் எனக்குத்தெரியும்; தமிழுக்கும் என்னைத்தெரியும். ஆங்கிலம் ஓரளவு தெரியும்; ஆங்கிலத்துக்கு என்னைத் தெரியாது. வேறு எந்த மொழியும் எனக்குத் தெரியாது.

கே: புதுக்கவிதை எழுதத் தொடங்கி, திரைப்படப் பாடலாசிரியராக வளர்ந்து இன்று சாஹித்ய அகாடமி விருதென்று விரிந்திருக்கும் அந்த அனுபவத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

ப: நான் எப்போதும் தெருப்பாடகன்தான்; சில சமயங்களில் கிரீடங்கள் சூட்டப் படுகின்றன. சில சமயங்களில் நான் உடுத்தி யிருக்கும் உடை உருவப்படுகிறது. இவை என்னைப் பாதிக்கா வண்ணம் நான் என் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். நான் மனிதர்களை நேசிக்கிறவன். அவர்கள் மேன்மையுற வேண்டும் என விரும்புகிறவன். அவர்கள் படும் இன்னல்களை அல்லது அவர்களது வெற்றிகளை, அவர்களது உள்ளத்தின் உணர்வுகளைச் சொல்ல ஆசைப்படுகிறவன். எனக்குத் தெரிந்த மொழியில், தெரிந்த வார்த்தைகளில் சொல்கிறேன். அன்றும் சரி. இன்றும் சரி நான் நானாகத்தான் இருக்கிறேன். சில சமயங்களில் மாலைகள் சூட்டப்படுகின்றன. சில சமயங்களில் கற்கள் எறியப்படுகின்றன. நான் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. நான் என் பயணத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறேன்

கே: கவிதையின் கதையை உள்ளடக்கிய 'ஆகாயத்திற்கு அடுத்த வீடு' என்ற தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. அதில் உள்ள 'கவிதையின் கதை'யில் 'உட்கார இடமில்லாமல் வெளியேறிய கவிதை' குறித்து எழுதியிருக்கிறீர்கள். அந்தக் கவிதைக்கு இப்போது ஆசனம் கிடைத்து விட்டதா?

ப: கவிதை என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன் என நீங்கள் எண்ணக்கூடும். கவிதையென்று நான் குறிப்பிடுவது என்னை அல்ல. எனக்கென்று ஓர் ஆசனம் உண்டு. அந்த ஆசனத்தில் இருந்து என்னை எவனும் அப்புறப்படுத்த முடியாது. அந்த ஆசனத்துக்கு வேறு எவரும் உரிமை கொண்டாடவும் முடியாது. சாகித்ய அகாடமி என்பது நடுவர்களால் தரப்படும் விருது மட்டுமே. இத்தனை காலமாக எழுதிவரும் எனக்கு இந்த சாஹித்ய அகாடமி விருதைவிடப் பெரிய விருதை வாசகர்கள் கொடுத்திருக் கிறார்கள்.

கே: கடந்த 25 ஆண்டுகளில் தமிழக கவிதைச்சூழல் எவ்வாறு மாற்றம் அடைந்திருக்கிறது?

ப: நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 1970-களில் புவியரசு, மீரா, சிற்பி, அக்னிபுத்திரன், கங்கை கொண்டான், முல்லை ஆதவன், தமிழ்நாடன், பாலா, நான் உள்ளிட்ட பல கவிஞர்களும் சிந்தனை யாளர்களும் சேர்ந்து உருவாக்கிய வானம் பாடி இயக்கமானது, தமிழக இலக்கியச் சூழலில் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. வானம்பாடி இதழின் தாக்கத்தால் வானம்பாடியைத் தொடர்ந்து நாற்பது சிற்றிதழ்கள் வெளிவந்து பெரிய மாற்றத்தை உண்டுபண்ணின. கவிதை யென்பது கனவு காண்பதல்ல, கவிதை யென்பது கண்ணெதிரே இருப்பவனைக் காண்பது, அவ்வாறு காண்பவனைப் பிறர் காண வைப்பது என்ற உணர்வை நாங்கள் தோற்றுவித்தோம். மானுடம் பாடும் வானம்பாடி என்றுதான் அதற்குப் பெயரே வைத்தோம். மக்கள் இயக்கமாகக் கவிதையை நாங்கள் மாற்றினோம். மரபுக்கவிதையின் சில வேலிகளைத் தகர்த்துத்தான் நாங்கள் புதுக்கவிதையைக் கொண்டு வர முடிந்தது. என்மீது கூட ஒரு குற்றச்சாட்டைச் சொல்வார்கள்: 'மு. மேத்தா புதுக்கவிதையை எளிமைப்படுத்தியது மட்டுமல்லாமல், வெறுமைப்படுத்தியும் விட்டார்' என்று. புதுக்கவிதை என்பது ஒரு வீரியம் மிக்க விதை; ஒரு வனப்பு மிக்க வாள். அதைக் கொண்டு வந்தவர்களின் நோக்கம் இந்தச் சமூகத்தின் கையில் அதை ஆயுதமாக வைத்திருப்பது. அதை வெறும் காகிதமாக மாற்றுவதற்குச் சம்மதமில்லை எங்களுக்கு. பல கவிஞர்களுக்கும் அந்தக் கருத்து இருந்தது; ஆனால், எழுதுபவனை எழுதாதே என்று எப்படிச் சொல்வது? எல்லாரையும் எழுது என்று சொன்ன நானே ஒரு கட்டத்தில் சொன்னேன்:
"போதுமையா போதும் இனி
புதுக்கவிதை எழுதாதீர்
பாவம் அதை விட்டுவிடும்
பழி வந்து சேருமுன்னே"
புதுக்கவிதை அந்த அளவுக்கு ஒரு கட்டத்தில் மலினப்பட்டது. பின்னர் ஒரு விழிப்புணர்வு வந்தது. ஆனாலும், புதுக் கவிதை ஒரு சமூகத்தின் சக்தியாவதைப் பலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் அதிகம் படித்தவர்கள், கொஞ்சம் வசதியும் உடையவர்கள். அவர்கள் உயரத்தில் நின்றுகொண்டே வாழ்கையை நடத்து பவர்கள். அவர்களுக்குச் சிறகுகள் இல்லை, ஆனால் ஆகாயம் அவர்களுக்கு இடம் கொடுக்கும். அப்படிப்பட்டவர்களால் புதுக்கவிதை திசை திருப்பபட்டு, இன்று அதன் பாதை சரியாக இல்லை என்பது என் கருத்து.

கே: பாரதி காலத்தில் வசனகவிதையாக இருந்தது. எழுத்து, கசடதபற, வானம் பாடி, தாமரை, கணையாழி போன்ற பத்திரிகைகளால் வெவ்வேறு விதமாக வளர்த்தெடுக்கப்பட்டு, ஹைக்கூ வடிவம் அறிமுகமாகி இன்று வெகுஜனப் பத்திரிகைகளில் துணுக்குகளாக வெளிவரும் அளவுக்குத் தமிழில் புதுக்கவிதையின் தளம் பரவலாகியிருக் கின்றது; இதுவே இன்றைய கவிதை களை ஒருவிதத்தில் நீர்த்துப்போகவும் செய்து விட்டதோ?

ப: இது குறித்து ஆனந்த விகடனில் ஒரு கவிதையில் நான் எழுதியிருந்தேன். அந்தக்கவிதைக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்தன, போகும் கூடத்தில் எல்லாம் எந்த இளைஞர்கள் என்னைத் தங்கள் அடையாள மாகக் கருதிக்கொண்டு இருந்தார்களோ அவர்களே என்னை எதிர்த்து 'மேத்தா ஒழிக' என்று கோஷம் போட்டார்கள். ஆனந்த விகடன் 'மேத்தாவின் கருத்தை ஆதரிப் பவர்கள், எதிர்ப்பவர்கள்' என்று ஓட்டெடுப்பு நடத்தியது. அதில் ஏராளமான ஓட்டுகள் வித்தியாசத்தில் நான் தோற்கடிக்கப்பட்டேன். ஆனாலும் அந்தத் தோல்வியையே நான் விரும்பினேன். ஏனெனில் என் ஆதரவாளர் களை ஒன்று சேர்க்க வேண்டுமென்ற என் ஆசை இதன்மூலம் நிறைவேறியது. அந்தக் கவிதையில் நான் சொல்லியிருந்தேன்:

"ஜோக்குகளைக் கவிதையென சொல்லித் திரிகின்ற
நாக்குகளை அறுக்காமல் நவகவிதை பிழைக்காது"

மேடைப்பேச்சுகளிலும் பட்டிமன்றங்களிலும் கலகலப்பூட்டுவதற்குச் சொல்லப்படுவதை யெல்லாம் அறியாமையினால் கவிதையென்று வெளியிடுகிறார்கள். அதைவிடப் பெரிய அறியாமையில் இருப்பவர்கள் பத்திரிகைக் காரர்கள். இதுபோன்ற கவிதைகளைப் பத்திரிகைக்காரர்கள் ஜோக்காக வெளி யிடாமல் கவிதையாக வெளியிடுவது சமூகத்துக்கும், தமிழ் மொழிக்கும் செய்யும் அநீதி. அந்த அநீதியை வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

கே: பாடும் பொருளாக கவிஞன் உருமாறுகிறான் என்று சொன்னீர்கள். அந்த வகையில், பெண்ணியம் பற்றிப் பெண்கள்தான் எழுத வேண்டுமென்றும் தலித்தியம் குறித்து தலித்துகள்தான் எழுத வேண்டுமென்றும் சொல்லப் படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

ப: தலைவர்களாக ஆசைப்படுகிறவர்கள் தனிக்கட்சி தொடங்கிவிடுவதுபோலத்தான் இது. தானும் ஓர் முக்கிய ஆளாக வேண்டுமென்பவன் புதுக்கடையைத் தொடங்கி விடுகிறான். இதுபோலத் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காகச் செய்யப்படுகின்ற முயற்சிகள் இவையெல்லாம். பெண்களைப்பற்றி பெண்கள்தான் பேச வேண்டும் என்பதற்கு என்ன நியாயம் இருக்கிறது. கவிமணியும் பாரதியும் பாரதிதாசனும் இவர்களிடத்தில் அனுமதி கேட்டுக்கொண்டா பாடினார்கள்? ஒன்று வேண்டுமானால் ஒப்புக்கொள்கிறேன். தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஒரு தலித் உணர்வதுபோல நான் உணர முடியாது. தனக்கு இழைக்கப்படும் கொடுமை களை ஒரு பெண் உணர்வது போல நான் உணர முடியாது. அதற்காக பெண்ணியம் என்றும் தலித்தியம் என்றும் இலக்கியத்தில் சாதி பிரிப்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. தலித்தியம் பற்றி நான் எழுதியிருக்கிறேன். பண்ணையார் ஒருவர் பள்ளி ஆசிரியரிடத்தில் சொல்கிறார்:

"எலே வாத்தி
இழிந்த சாதி மகன் பேருக்கிகீழே
என்மகன் பெயரை எப்படி எழுதலாம்"
என்று கேட்க ஆசிரியர் சொல்கிறார்:
"அய்யா சாமி
அகர வரிசைப்படி
அப்படித்தாங்க வருது"


பண்ணையாரின் மறு மொழி:

"அது என்ன வரிசை
அகர வரிசை
மாத்திப்புடுவோம்,
நான்
மந்திரிகிட்ட பேசறேன்"


நான் எழுதவில்லையா? என்னைப்போல் ஆயிரம் கவிஞர்கள் எழுதுகிறார்கள். தலித் நண்பர்கள் எழுதுவது குறித்து எனக்கு மகிழ்ச்சி. ஆனால் இலக்கியத்துக்குள் சாதிகள் பிரிக்கக்கூடாதென்பது என் கருத்து. அதுபோல, பெண்கள் எழுதுவதுதான் பெண்ணியம் என்பதையும் என்னால் ஏற்க இயலாது. அது மட்டுமன்றி பெண்ணியக் கவிஞர்கள் கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் பண்ணுகிறார்களோ என்ற எண்ணமும் எனக்கு உண்டு.

கே: இது தொடர்பான ஒரு கேள்வி: வெளிப்படையாக உடல் உறுப்புகளைப் பெயர் குறிப்பிட்டு கவிதையில் எழுதுவது கவிதைக்கு அழகென்று சொல்வீர்களா?

ப: தெருவில் சாதாரணமாக நடந்து போகையில் யாரும் கவனிக்க மாட்டார்கள்; திடீரென்று மோசமான ஒரு ஓசையெழுப் பினால் எல்லாரும் அவரைத் திரும்பிப் பார்ப்பார்கள். அப்படி மோசமாக எழுப்பும் குரல்தான் அவர்கள் வைக்கும் பெயர்களும், வெளியிடும் முறைகளும். பெண்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக தங்களைத்தாங்களே அவமானப்படுத்திக் கொள்ளும் படைப்புகளை வெளியிடுவதைச் சகிக்க முடியவில்லை. வெளியில் சொல்லத் தயங்கும் ஒரு சொல்லைப் புத்தகத்துக்கே தலைப்பாக வைக்கிறார்கள். எங்கள் கவிதைத் தோட்டத்தில் புதிதாய்ப் பூக்கும் பூக்கள் இவர்கள்; அறியாமையால் இவ்வாறு தங்கள் முள்முகத்தைக் காட்டுகிறார்கள்.

கே: தலித்தியம் என்ற பெயரில் பொதுவில் சொல்லத்தயங்கும் வார்த்தைகளை வைத்து எழுதப்படும் கவிதைகள் பற்றி...

ப: எதுபற்றி வேண்டுமானாலும் எழுதலாம், எப்படிச் சொல்லப்படுகிறது என்பதை வைத்து அது இலக்கியத்தில் வகைப்படுத்தப் படுகிறது. உரைநடையா, மேடைப்பேச்சா, கவியரங்கத் தில் சொல்லப்படும் கவிதையா, எழுதப்படுகிற கவிதையா, திரைப்படப் பாடலா என்றவாறு, எழுதும் விதத்தை வைத்து அது வகைப் படுத்தப் படுகிறது. கவிதையாக வேண்டு மானால் அது கவிதையாக இருக்க வேண்டும்.

கே: மரபுக்கும் புதுக்கவிதைக்கும் பாலமாக இருப்பதாக நீங்கள் சொல்லி யிருக்கிறீர்கள். புதுக்கவிதை எழுதும் பலர் மரபுக்கவிதைகள் குறித்த அறிவும், தெளிவும் உடையவர்கள் தானா? மரபு குறித்த அறிவு ஏன் வேண்டும்?

ப: சொற்களை எழுதுகையில் அதற்குரிய அமைப்பு முறை என்று உண்டு. சுதந்திரம் என்பது எல்லாவற்றையும் உதறுவது அல்ல. வேண்டாததை உதறுவது, வேண்டியதை அணிவது. மரபு என்பது ஏற்கனவே போட்ட பாதை. கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகிய இவர்கள் காலத்துக்கு முன்னதாகவே பல காலமாகப் பலரும் எழுதி எழுதி அதனால் வாக்கிய அமைப்பு, சொற்சேர்க்கை, ஓசைநயம் ஆகியவை பல காலம் செம்மைப்பட்டு, இப்படி லட்சோப லட்சம் பேர் செய்த முயற்சியில் எமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் இது. திடீரென்று 'இதில் ஒன்றுமில்லை' என்று சொல்லி நான் ஒதுக்குவேனானால், அது நான் என் முன்னோர்களுக்குச் செய்யும் வஞ்சனை. அது நியாயமல்ல. எத்தனையோ பேரின் உழைப்பை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குக் கிடைக்கும் மரியாதைகள் என் வழியாக என் முன்னோர்களுக்கே போய்ச் சேருகின்றன. என் முன்னோர்கள் செய்துவைத்த வகைமை களை, முறைமைகளை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு உள்ளது? அவர்கள் போட்டு வைத்த பாதையில் போகமாட்டேன் என்று சொல்லிப் புதியதாக ஏன் ஓர் ஒற்றையடிப் பாதை போட வேண்டும்? இல்லாத இடத்தில் புதுப்பாதை உண்டாக்கலாம். நன்றாகப் போடப்பட்டு சரியான முறையில் நெறிப் படுத்தப் பட்டிருக்கும் சாலையில் ஒற்றையடிப் பாதை போடுவதென்பது நகைச்சுவையே.

கே: ஆக, மரபு என்பது மாட்டு வண்டி என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வ தில்லை.

ப: இல்லை. மரபு வேண்டும். மனச்சிறகு என்ற கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் சொல்லி இருக்கிறேன். எங்கே மரபு எனக்குக் கைவிலங்காகுமோ அங்கே அதைநான் தூக்கி எறிகிறேன். எங்கே அது எனக்குக் கணையாழியாக மாறுமோ அங்கே அதை நான் அணிந்து கொள்கிறேன். புதுக் கவிதையில் வெற்றி பெற்ற பல கவிஞர்களும் இலக்கியத்தில் புலமை பெற்றவர்கள். பலர் தமிழ் எம்.ஏ. படித்தவர்கள், நான் உள்பட. இந்த அறிவானது, என் மொழியை, அதன் மரபுகளை, அதன் அழகுகளை எங்களுக்கு அறிமுகம் செய்கிறது. ஒன்றைச் சொல்கையில் எவ்வாறு சொன்னால் அழகு வெளிப்படும் என்பதை ஏற்கனவே சொல்லிச் சென்றிருக் கிறார்கள். அதில் எதை வேண்டு மானாலும் நான் தெரிந்தெடுத்துக் கொள்ளலாம். புதிய முறை ஒன்றையும் உருவாக்க, ஏற்கனவே உள்ள முறைமை களின் பரிசீலனை எனக்கு உதவலாம். மற்றோர் உண்மையையும் பார்க்கலாம். நாட்டுப்பாடல் என்பது இலக்கியத்திற்கு ஊற்று. ஆனால் அதனைப் பெரிதாக இலக்கியத்தில் சொல்வதில்லை, பாடத் திட்டத்தில் இலக்கியமாக வைக்கவில்லை. நதியின் ஊற்று எங்கு வேண்டுமானால் தோன்றிவிடலாம். ஆனால் நதிகளைத்தான் நாம் பார்க்கிறோம். ஏனெனில் நதிதான் நம்மிடத்தில் வருகிறது. ஊற்று, நதியாக நடந்து பழகும் அழகைப்பார்த்தபின் நான் ஊற்றில்தான் போய்க்குளிப்பேன் என்று ஏன் சொல்ல வேண்டும்? நதியில் குளித்து மகிழலாம் அல்லவா? அதுபோல மரபை நாம் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

கே: 'இந்தப் பூமி உருண்டையைப் புரட்டிவிடக் கூடிய நெம்புகோல் கவிதையை உங்களில் யார் பாடப் போகிறீர்கள்' என்று கேட்டுத்தான் வானம்பாடியில் கவிதை தொடங்கினீர்கள். நீங்கள் தேடிக்கொண்டிருந்த 'நெம்புக் கோல் கவிதை' இப்போது கிடைத்து விட்டதா?

ப: நெம்புகோல்கள் தங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன. இன்றைக்கு அபூர்வ மான திறமைகள் உள்ளவர்கள் இருக் கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அவர் களை உணர்த்த ஆள் தேவையாக உள்ளது. முடிந்தவரை எங்களைப் போன்றவர்கள் அந்த முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். நெம்பு கோல்கள் இருக்கின்றன, ஆனால் நெம்பு கோல்கள் நெம்புகோல்களுக்கே கிடைக்க வில்லை, அதனால் சமூகத்துக்கும் இன்னும் கிடைக்கவில்லை.

கே: வானம்பாடி கவிஞர்கள் கம்யூனிஸ்டு சித்தாந்தச் சார்புடனும் திராவிடக் கட்சிகளின் வளர்ச்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டு பிரச்சாரக் கவிகளாக வளர்ந்ததாக உள்ள விமர்சனம் குறித்து உங்கள் கருத்து என்ன?

ப: பிரசாரக்கவிகள் என்று சொல்வது வெற்றி பெறாதவர்களின் வெளிப்பாடு. ஜெயித்தவனைப் பார்த்து ஜெயிக்காதவர்கள் 'இவன் தப்பாட்டம் ஆடினான்' என்று சொல்வது போலத்தான் இது. அவன் சரியாகத்தான் ஆடி வெற்றி பெற்றிருக்கிறான். புதுக்கவிதையில் இதுதான் இன்று நடந்து வருகிறது. இதனைக் கவலையோடு கவனித்துக்கொண்டு இருக்கிறோம்.

கே: 80களில் இலங்கைப் பிரச்னைகள் குறித்து எழுதியிருக்கிறீர்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து இன்றைய நிலையில் இப்பிரச்னை தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக நினைக்கிறீர்களா?
ப: தீர்வை நோக்கிப் போகவேண்டும் என்று கருதுகிறேன்.

கே: போகிறதாகத் தெரியவில்லையா?

ப: போகவேண்டும் என்று கருதுகிறேன்; விரும்புகிறேன்.

கே: திரைப்படப் பாடல்களிலேயே அழகான கற்பனைகளைக் காட்டியிருக் கிறீர்கள். 'மயில் போல பொண்ணு ஒண்ணு' என்ற உங்களது பாரதி படப்பாடலைப் பாடிய பவதாரணிக்கு தேசிய விருது கிடைத்தது.
"தேகமழை நானாகும்
தேதியைத் தேடுவேன்
ஈரவயல் நீயாக
மேனியை மூடுவேன்".
"வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே".

இப்படிப்பட்ட ரசிக்கத்தகும் கற்பனை களை அழகான வார்த்தைகளில் சரியான அளவில் போட்டு இசையுடன் இழைத்துக் கேட்போர் ருசிக்கத் தருவது தேர்ந்த கவிஞர்களுக்குக் கைகூடும் விஷயம்தான். ஆனால் இப்போது 'டைலாமோ டைலாமோ, சப்போஸ் உன்னைக் காதலித்து' என்றெல்லாம் எழுதப்படும் பாடல் வரிகளைப் பார்க்கையில் திரைப்படக் கவிஞர்கள் மிக்ஸியாகவும், கிரைண்டராகவும் அவசர கதி மிஷின்களாக ஆகிவிட்டார் களோ என்ற விமர்சனம் உள்ளது. திரைப்படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்கள் எழுதியவர் என்ற முறையில் இது குறித்து உங்கள் கருத்து என்ன?


ப: சில காலகட்டங்களில் சில இடங்களில் நாம் சிக்கிக்கொள்வோம்; சிக்கிக்கொண்ட அதுதான் நாம் என்பது இல்லை. அங்கிருந்து வெளிவருவோம். சிறகடிப்போம். அது முடியும். சன் டிவியில் என்னை "தற்போது எழுதும் திரைப்படப் பாடலாசிரியர்கள் குறித்து உங்கள் கருத்தென்ன?" என்று கேட்டார்கள்; நான் சிறிது நேரம் பேசாமல் இருந்தேன். எல்லோரும் திகைத்துப் பார்த்துக்கொண்டு இருக்கையில் நான் சொன்னேன்: "மிகவும் யோசித்து பதில் சொல்ல வேண்டியிருக்கிறது; ஏனென்றால் அவர்கள் யோசிக்காமல் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்". அது மாதிரி சூழல் இன்று இருக்கிறது. அது மாறும், நல்ல பாடல் எழுத வேண்டுமென்றால் பாச மலர் போல பாவ மன்னிப்பு போல கதைகள், பாடல் எழுத வேண்டிய சூழல் மற்றும் அதற்கான ரசிகர்கள் அமைய வேண்டும். இன்றிருக்கும் இது போன்ற பாடல்களை ரசிப்பதுகூட ஒரு சமூகத்தின் குற்றம் என்ற எண்ணத்தை ஊடகங்கள் ஏற்படுத்த வேண்டும். அயோக்கியத்தனம் செய்வது ஊடகங்களே; ஊடகங்களின் ஒழுங்கின்மை என் சமூகத் தைச் சீர்குலைக்கிறது. இந்த ஊடகங்களை ஒருநாள் அடித்து நொறுக்குகின்ற ஆத்திரம் கொண்ட இளைஞர்கள் வருவார்கள், அதற்கு முன்னால் ஊடகங்கள் திருந்தி விடுவது நல்லது.

கே: 'சோழ நிலா' எழுத உங்களுக்குத் தூண்டுதலாக இருந்தது எது? அது போன்று தொடர்ந்து ஆக்கங்கள் செய்யாதது ஏன்?

ப: சரித்திர நாவல் செய்யும் கால வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அடிப்படையில் நான் கவிஞன். எந்த வடிவத்தில் சொல்ல வேண்டுமென்பதைச் சொல்ல வேண்டிய செய்தியும், உணர்வும் தீர்மானிக்கின்றன. 1980-இல் சோழநிலா பரிசு பெற்றது. அதன் பின் பல பத்திரிகைகள் கேட்டன, ஆனால் நான் எழுதவில்லை. எனக்குப்பரிசு கொடுத்த விகடனுக்குத்தான் அடுத்ததாக எழுதுவேன் என்றிருந்தேன். பத்தாண்டுகள் கழித்து விகடனில் மகுட நிலா என்ற இன்னொரு சரித்திர நாவலை எழுதினேன். அதற்குப்பிறகு சரித்திர நாவல் எழுதவில்லை. காரணம், எது எழுதவேண்டுமென்பதை அப்போதுள்ள அந்த மனநிலை தீர்மானிக்கின்றது.

கே: தென்றலின் கவிதை ஆர்வலர்களுக் காக உங்களது பொங்கல் செய்தி என்ன?

ப: தென்றல் குளிர வைப்பதாக மட்டும் இருக்கக்கூடாது. கொதிக்க வைப்பதாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் கொதிக் கின்ற சூரியனுக்கு வணக்கம் சொல்லும் விழாதான் பொங்கல் விழா. ஆகையினால் சமூகத்தினுடைய அநீதிகளை எதிர்த்து கொதிக்கின்ற உணர்வையும் தென்றல் உண்டாக்கட்டும். சமூகத்தினுடைய மேன்மை களைப் பார்த்து குளிர்கின்ற மனநிலையையும் தென்றல் உண்டாக்கட்டும்.
தென்றல் வாசகர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

சந்திப்பு: திருமலைராஜன், சுந்தரேஷ்

© TamilOnline.com