குழந்தைகளுக்காக நடைபயணம்!
கடந்த வருடம் டிசம்பர் மாதம் நானும் என்னோடு சேர்ந்து மொத்தம் ஏழுபேர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண் டிருந்தோம். மனிதர்களே இல்லாத வன்னியை வந்தடைந்த போது எங்கள் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. போர் நடைபெற்ற இடங்களில், இடிந்து கிடக்கும் வீடுகளையும், பிளந்த நிலத்தையும், பாதியாக நிற்கும் கமுகு மரங்களையும், மனவேதனையோடு பார்த்தோம்.

Tamil Youths for Human Rights(TYHR)என்ற அமைப்பின் உறுப்பினர்கள் என்கிற முறை யில்,வடகிழக்குப் பகுதியின் மீட்சிக்கு நாங்கள் எந்த விதத்தில் எங்கள் அமைப்பின் மூலமாக உதவமுடியும் என்பதைப் பற்றிச் சிந்தித்தோம். TYHR 1998ல் கலி·போர்னியாவிலுள்ள லான்காஸ்டரில் நிறுவப்பட்டு, ஸ்ரீலங்கா தமிழர்களின் மறுவாழ்வுக்கு எந்தெந்த வகைகளிலெல்லாம் செயலாற்றமுடியும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவருகிறது.

அங்கே நிறைய ஆதரவற்றவர்களுக்கான விடுதிகளையும், உள்ளூருக்குள்ளேயே இடம் பெயர்ந்தவர்கள் வசிக்கும் முகாம்களையும் (Internally Displaced Persons camps, IDP) பார்வையிட்டோம். ஒரு முகாமில் சில பெண்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களது குழந்தைகள் கல்வி கிடைக்காமல் திணறி வருவதைக் கேள்விப்பட்ட நாங்கள் எல்லோருமே கையிலிருந்த பணத்தை எடுத்து, ஏற்கனவே அந்த இடத்தில் இருந்த நர்சரி பள்ளி ஆசிரியைக்கு ஒரு வருடத்திற்கான சம்பளத்தைக் கொடுத்து உடனடியாகப் பள்ளியைத் தொடங்கச் சொன்னோம்.

இந்தப் பயணத்தை முடித்துத் திரும்பியதும், வடகிழக்குப் பகுதியிலுள்ள குழந்தைகளுக்குக் கல்வி வசதி செய்துதரவேண்டிதுதான் எங்களது (TYHR) முதல் பணி என்று தீர்மானித்தோம். அதன் படி VISIONS (Volunteers Inspire Students In Orphanages of Northeast Sri Lanka) என்ற பெயரில் தன்னார்வத் திட்டம் ஒன்றைத் தொடங்கினோம். ஆங்கிலம், கணிப்பொறி, யோகா, கலைகள், விளையாட்டு, நடனம், மற்றும் சுய மேம்பாடு போன்றவைகள் இந்தத் திட்டத்தில் அடங்கும். இந்தக் கோடையின் போது அமெரிக்கா, கனடாவைச் சேர்ந்த ஆறு தன்னார்வத் தொண்டர்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். ஜூலை 13ல் தொடங்கி ஜூலை 27 வரை நடக்கும் இந்தப் பயிற்சியில் 13-15 வயதுக்குட்பட்ட 24 குழந்தைகள் அடங்கிய குழுவைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்தத் திட்டம் உருவாவதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்த St. John's Churchயைச் சேர்ந்த Rev. ஜெயநேசன் அவர்கள், இந்தப் பயிற்சி ஸ்ரீலங்கா பாடிகாலோவிலுள்ள St. John’s Churchல் நடைபெற இடமளித்திருக்கிறார்.

ஏப்ரல் 13,2003 அன்று TYHRன் ஆதரவோடு VISIONSதிட்டத்திற்காக ''Walk for Children” நிதி திரட்டும் நிகழ்ச்சி லான்காஸ்டர் சிட்டி பார்க்கில்,CA நடைபெற்றது. இதில் ஐம்பது பேர் கலந்து கொண்டார்கள். போரில் வாழ்க்கையை இழந்த கிட்டத்தட்ட 35,000 குழந்தைகளுக்காக இது அர்ப்பணிக்கப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள், குழந்தைகளிடத்தில் ஒருமைப்பாடையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுவதற்காக மஞ்சள் நிறத்தில் ஒரு ரிப்பன் அணிந்து கொண்டு தொடர்ச்சியாக கால் மைல் தூரம் நடந்தார்கள். இந்தப் பாதை நினைவுச் சின்னங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து TYHR உறுப்பினர்கள், இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் விதமான செய்திகளையும் வாழ்த்துகளையும் சொன்னார்கள். முழுமனதோடு ஆதரவு தந்த அமெரிக்காவிலுள்ள நண்பர்கள் மற்றும் குடும்பங்களால் இந்தத்திட்டததிற்காக எதிர்பார்த்திருந்த தொகையை விடவும் அதிகமான அளவில் பணம் சேர்ந்தது. அந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நாங்கள் ஆரம்பத்தில் நினைத்ததை விடவும் இன்னும் நிறைய ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முடியும் என்ற துணிச்சல் எங்களுக்கு இப்போது உருவாகியுள்ளது.

இந்தத்திட்டத்தை இன்னும் என்னென்ன வகைகளில் செம்மைப்படுத்தலாம் என்பதற்கு இந்தப் பயிற்சியில் அங்கே நிறைய யோசனைகள் கிடைக்கும் என்று நினைக்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு: www.tamilyouths.org

மீரா பத்மராஜா

© TamilOnline.com