சிகாகோவில் ப. சிதம்பரம்!
சிகாகோ தமிழ்ச்சங்கம் AIMS India foundationனுடன் இணைந்து முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரத்தின் சொற் பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சி மே 16, 2003 அன்று பாலாஜி கோயில் அரங்கில் நடைபெற்றது.

பா. சிதம்பரம் புகழ்பெற்ற அரசியல்வாதி; நீண்டகாலமாக மிகச் சிறப்புடன் அரசியலில் பணியாற்றிருப்பவர். தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ணராஜ், சிதம்பரம் அவர்களை அறிமுகப்படுத்திப் பேசிய போது,

''சிதம்பரம் அவர்கள் எல்லோருடைய மதிப்பையும் மரியாதையையும் பெற்றவர்; உயர்கல்வி பயின்றவர்; இந்தியா அதுவும் குறிப்பாகத் தமிழ்நாடு சம்மந்தப்பட்ட நிதிநிலைமை, பொருளாதாரம், சமூகவியல் பற்றிய இவருடைய சிந்தனைகளும், கருத்துகளும் எல்லோராலும் மெச்சப்படுபவை'' என்றார்.

திரு. சிதம்பரம் எடுத்துப் பேசிய தலைப்பு ''தமிழகத்தில் சமூகப் பொருளாதார நிலை''. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சரளமாகப் பேசி சபையோர்களின் பாராட்டைப் பெற்றார். குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவென்றால் மிகச் சுலபமாகத் தங்கு தடையின்றி அவர் அள்ளிவீசிய புள்ளிவிவரங்கள், தமிழ்நாடு பட்ஜெட்டில் கல்விக்கான நிதிஒதுக்கீடு, பீஹாரில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை.... போன்ற தகவல்கள்.

இவருடைய கருத்தின்படி தமிழ்நாட்டில் பொருளாதார முன்னேற்றம் 'நேரடி அரசியல் செயல்பாடு' மூலம் சாத்தியமாகும். மேலும் தமிழகம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நிலையிலிருந்து, தொழிற்சாலைகள் மற்றும் சேவை நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நிலைக்கு மாறவேண்டும்'' என்றார்.

பொதுமக்கள் விஷயம் தெரிந்த வேட் பாளர்களை அந்தந்தத் துறைக்குத் தேர்வு செய்ய வேண்டிய அவசியத்தையும், அவசரத்தையும் வலியுறுத்தினார்.

அடுத்துத் தமிழ்சங்க உறுப்பினர்கள் சிலரின் ஏற்பாட்டினால் மிகச் சிறப்பான விருந்து வழங்கப்பட்டது. AMSன் இந்தியப் பிரதிநிதி விஜய்ஆனந்த் அவர்கள் AIMS தமிழகத்தில் செய்து வரும் சேவைகள் என்னவென்று ஒலி,ஒளி வடிவமைப்புடன் எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியின் வாயிலாக சிகாகோவில் உள்ள அமெரிக்கத் தமிழர்கள் தமிழ்நாட்டின் பொருளாதார நிலை, சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிய இன்றைய நிலையை அறிந்து கொண்டனர்.

கடலூர் எஸ். குமார்.

© TamilOnline.com