ஸ்ரீ ஸ்ரீ சொற்பொழிவில் 'அன்பு'
சென்ற மாதம் பதினோறாம் தேதி ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்கள் தனது எளிமையான அறிவாற்றல் மிக்க இனிமையான உரையில் அன்பின் மகத்துவத்தை எடுத்துரைத்தார். அன்பு, அதன் வெளிப்பாடான, புன்னகை, தன்னலமற்ற சேவை, இவற்றை மறந்து கொண்டிருக்கும் அவசர யுகத்தில், ஸ்ரீ ஸ்ரீ-இன் 'ஆர்ட் ஆ·ப் லிவ்விங்' என்னும் பொதுநல அமைப்பு, நூற்றுக்கும் மேலான நாடுகளில் மனித நேயத்தையும் அடிப்படை வாழ்க்கைத் தத்துவத்தையும் உணர வைத்து, இருபது லட்சங்களுக்கு மேலான உள்ளங்களைத் தனது ''சுதர்ஷன் கிரியா'' என்னும் பிராணாயாம பயிற்சி மூலம் மலர வைத்திருக்கிறது.

நமது அன்றாட வாழ்க்கையின் எரிச்சல்கள், மன அழுத்தங்கள், சோர்வு, கவலைகள் அனைத்தையும் இருந்த இடம் தெரியாமல் செய்வது தியானம் என்பதை சொற்பொழிவில் உணர்த்தினார் ஸ்ரீ ஸ்ரீ. சொற்பொழிவுக்கு முன்னால் அங்கு இதமான பக்திப் பாடல்கள் ஒலித்தன. ஆன்மீக சொற்பொழிவுக்கு வந்த அனைவரையும், ஒன்றுபட்ட அமைதியான நிலைக்குத் இழுத்துச் சென்றது அங்கு ஒலித்த பஜன்கள். தியானம் முடித்து, கண் திறந்து, ''அன்பைப் பற்றிப் பேச ஒரு ஒற்றுமை உணர்வுடைய சூழல் தேவை, அதனை அரசியல் போன்று சாதாரணமாக விமர்சிக்க இயலாது'' என்று கூறி, அனைவரையும் தத்தம் அருகிலிருப்பர்களுடன் அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு கூறினார்.

தொடர்ந்து ''வாழ்க்கையின் பொருள் என்ன என்று வினவுவது நம் அறிவு முதிர்ச்சியின் தொடக்கம். மனிதனின் தீராத தாகம், அளவற்ற, அப்பழுக்கற்ற, உன்னதமான அன்பைத் தேடுவதில் இருக்கிறது. அன்பு வெளிப்படுத்துவதற்கு அரியது. எத்தனை அளவு வெளிப்பட்டாலும் அத்தனை ஈடாக அமையாது. அன்பு கொடுப்பதிலேயன்றி எதிர்பார்ப்பதில் இல்லை.

இரவு முழுவதும் ஒருவன் படுக்கையைத் தயார்செய்து, உறங்க நேரம் கிடைக்காமல் போவது போன்ற வாழ்க்கை இது. இதை உணர வேண்டும். நமக்கு விழிப்புணர்ச்சி மிகவும் அவசியம். உடல் ஏழு தாதுக்கள், ஐந்து பூதங்களால் ஆனது. ஆனால் ஆன்மாவோ அன்பு அழகு, சத்யம், மகிழ்ச்சி, கனிவு போன்ற பண்புகளால் ஆனது. அதனை வலுப்படுத்துவதே ஆன்மீகம். பல்வேறு கல்வி கற்க முயலும் நாம் ஆன்மீகம் கற்கவில்லை. மனம் தெளிவாக இருக்கும்போது பாதை விளங்கும். பிராணா யாமம், தியானம் போன்றவை நம்மைத் தெளிவாகவும் அமைதியாகவும் வைத்துக் கொண்டு ஞானம் பெறும் பாதையில் செல்ல ஒளி கொடுக்கும்''. என்ற அவரின் சொற் பொழிவைக் கேட்டு அங்கிருந்த அனைவரின் மனமுமே அமைதி நிலைக்குத் திரும்பியது என்பது நூற்றுக்குநூறு உண்மை.

ராஜேஸ்வரி

© TamilOnline.com