விழாக்கோலம் கொண்ட நியூஜெர்சி
தமிழர் விழாக்கோலம் கொண்டு விட்டது நியூஜெர்சி!

சூலை 4,5,6 பேரவையின் தமிழர் பெருவிழா நியூஜெர்சியில்...

'இன நலம் எல்லாப் புகழும் தரும்!' - எவ்வளவு உண்மை! அமெரிக்க மண்ணில் கடந்த 15 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் 'தமிழர் விழா' யாவும் ஒன்றை ஒன்று மிஞ்சுவதாக இருந்தன என்பது உண்மைதான். இவ்வாண்டு ஈரெட்டு பதினாறு தமிழர் விழா - பதமான பருவம் தமிழ்ச் சங்கப்பேரவைக்கு, என்றாலும் அதுவும் பொருத்தமானதே.

இதுநாள் வரையும் இல்லாத அளவில், தமிழர்விழாவிற்கு முன்நின்று போட்டி போட்டுக் கொண்டு ஏற்பாடுகளைச் செய்து வரும் இளைஞர்கள் குழு பேரவைக்கு , விழா அனுபவம் மிகுந்த முன்னாள் 'பேரவைத் தலைவர்கள்' பலரும் உடன் சேர்ந்து 'கலங்கரை விளக்கங்களாக ஒளி தந்து வழி காட்டி வருகின்றனர். விழா நாட்கள் நெருங்க, நெருங்க விழா முன்னேற்பாட்டுக்குழு பம்பரமாகச் சுழலுவதில் ஒரு சுணுக்கமில்லா சுறுசுறுப்பு அமைகின்றது. 1800 தமிழ் அன்பர்கள் கூடி, விழா களிப்பில் மூழ்கித் திளைக்க வசதியான அரங்கம்! ஒலியும் ஒளியும் நிறைவாக அமைந்த அரங்கம். பெயரென்னவோ 'PATRIOTS' அரங்கம். 'WAR MEMORIAL அலங்கார மாளிகையில்! நடப்புகள் என்னமோ, மெல்லிசையால், நுண்கலைகளால் மனமகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் ஒத்துழைக்கும் அரங்கம்! 'பொன்னான பூங்கா' என அழைக்கப்படும் நியூஜெர்சி மாநிலத்துத் தலைநகரம் டிரண்டனில் அமைந்த இந்த அரங்கம் தமிழ் அற்புதத்தை 4, 5, 6 நாட்களில் தன் உள்ளடக்கக் காத்துள்ளது.

அரங்கம் அருகே நளின நடைபோடும் அழகில் அமைந்துள்ளன விடுதிகள். நாள் முழுமையும் விழாவில் திளைத்து வரும் விருந்தினர்க்கு நல்ஓய்வு பெற, தர வசதியான நல்லறைகள் பல கொண்டன. வடகிழக்கு மாநிலத் தமிழர்களின் விருந்தோம்பலுடன் நண்பகலும், முன்இரவும் தமிழ்நாட்டின் இணையென உணவு படைக்கவிருக்கும் தமிழ்நாட்டு உணவகங்கள்.

''எதையுமே குறையென்று எண்ணிவிட வைக்க மாட்டோம்'' என்ற தளராத உள்ளத்துடனும், உறுதியுடனும் உழைப்புடனும் ஈடுபட்டுள்ள விழாக்குழுவின் தலைமைப் பொறுப்பேற்று பம்பரமாய் சுழன்று வருபவர் பேரவையின் தலைவர் நண்பர் சிவராமன் குறிப்பிட்டது, ''சிந்தைக்கு விருந்து அளிப்பதாகவும், கண்ணுக்குக் காட்சி அழகுள்ளதாகவும், செவிக்குத் தேனாகவும் நிகழ்ச்சிகளைக் காலத்தோடு தர எண்ணியுள்ளோம் நாங்கள்'', திரளாகத் தமிழ் அமெரிக்கர்கள் யாவருமே திரண்டு வரினும் எம்மால் சாதனை படைக்க முடியும்'' என்பதுதான். அவருடன் தம் உழைப்பை நல்கிவரும் இளையவர் திரு. சிவக்குமார் அவர்கள் தம் பணி ஆரம்பித்து பல தினங்கள் கடந்துவிட்டன. செய்தித் தொடர்புகள், விழா பற்றிய விளக்கங்கள், விவரங்கள் யாவும் தமிழ் அமெரிக்கர்கள் யாவரையும் அடையும் வண்ணம் பொறுப்போடு பணியாற்றி வருகின்றார். பேரவையின் இணையப் பக்கங்கள் இந்நாடு வாழ் தமிழரோடு, உலக வாழ் தமிழரெல்லாம் கண்டு, காண வலம் வரச் செய்பவர்கள் திரு. மணிவண்ணனும், இராசா பெரியசாமியும். விழா நடத்துவோம் என்றதுமே, விரைவில் நிதி சேர்த்திடுவோம் என்ற துடிப்பில் முனைந்து நிற்பவர் நண்பர் திரு. நாகப்பன் அவர்கள். விழா விவரம் தந்தீர், விளக்கம் தந்தீர், மின்னஞ்சல் வழிதந்தீர், விஞ்சி நிற்கும் இணையம் கண்டீர், நிதியும் திரட்டினீர், திறம்படத் திகட்டாத நிகழ்ச்சி அமைத்துத் தர வரும் விருந்தினர் தம்மை வரவேற்று, மனநிறைவோடு அவர்களை அனுப்ப நாங்கள் தயார் என்கிறார் விருந்தோம்பல் குழுத் தலைவர் திரு இராவணன். அமெரிக்க வாழ் உடன்பிறவா எம் தமிழ் உறவுகளை ஒன்றுகூட்டச் செம்மையுடனே செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்கங்களோடு தொடர்புள்ளவர் களாக நாங்கள் உள்ளோம் என்கின்றனர் திரு வாட்டிகன் மீனாட்சி செல்லையா, ஆனந்தி வெங்கட், தேவி நாகப்பன், சந்திர இராசராம்.

இறையோர் போற்றுவோம். இனம் காப்போம் என்பதைத் தம் பெருங்கடமையாகக் கொண்டு தமிழ் அமெரிக்க இளைஞர்களோடு வழிகாட்டி, வரவேற்க, கருத்தோடு முனைந்துள்ளார் பேரவையின் (1990) முன்னாள் தலைவர் திரு தயாநிதி அவர்கள். உண்டிகொடுத்தார் உயிர்கொடுத்தார், உண்மை விருந்தோம்பலை பொறுப்போடு பங்கிட்டுப் பறிமாறி வகை செய்ய இருப்பவர்கள் 'திருவாட்டிகள் நிர்மலா சுந்தரம், கோபி சுப்பிரமணியன். செவிக்குணவு இல்லாத போது சிறிது உணவளிக்க இவர்கள் தயார் என்றால் இவையிரண்டும் பெற்ற பின்னர் விழா நினைவுகள் பின் தொடர்ந்து செல்ல அழகு விழா மலரைத் தரமாகத் தயாரித்து உங்கள் உடன் அனுப்பத் தயாராக உள்ளனர் திரு கிரியும், சுந்தரபாண்டியனும், காயம்புவும், இராச இராமும், சிவாவும்.

ஆனாலும் இவையெல்லாம் ஒருங்கிணைந்து நடந்திட, பேரவையின் தலைவர் சிவராமனையும் பின்நின்று இயக்கி வருகின்றார் திருவாட்டி சிவா சிவராமன். இத்தோடு நின்றதா இன்னும் பலருண்டு. தம் இதயத்தில் பேரவையை தமிழர் அமெரிக்கரை இணைக்கும் ஒர் இணைப்புப் பாலமாகவே போற்றி வரும் நண்பர் பலர்.

ஆம்! விழா முயற்சி கூறிவிட்டீர்! விழா விருந்தை இன்னும் படைக்கவில்லையே என்போருக்கு இதோ காத்துள்ளது சூலை 4, 5, 6 நாட்கள்.

கண்ணிமையென காத்துவரும் தமிழ் வளர்ந்திட கருத்தோடு, காலத்தோடு செயல் புரிந்து தமிழ் இணையக் கல்லூரி கண்டவர் அண்ணா பல்கலைக்கழக முனைவர் துணைவேந்தர் வ.செ. குழந்தைசாமி. தம் வாழ்நாளில் கண்டு உணர்ந்த, சுவைத்த தமிழ் அமுதை நம்மோடு பகிர்ந்து கொள்ள வருகின்றார்.

தீர்க்கமான விவாதம், தரமான விளக்கம் என ஆண்டுகள் பல தமிழ்நாட்டுப் பட்டிமன்றங்களில் முடிசூடா மன்னராகவுள்ள திரு. சாலமன் பாப்பையா இயல்பாகக் கதிரவன் ஒளிகாட்சியில் தினம் மிளிரும் இவர் நம்மோடு மலர்வார் 4,5,6 நாட்களில்.

''கருத்தும், தரமும் சரிதான். சிந்தனையோடு சிரித்து மகிழ்ந்து, சிந்தையை பறிகொடுத்திடுவீர் என வேண்டிட வர இருக்கின்றார் சங்கம் கண்ட மதுரை நாயகர் - பேராசிரியர் திரு ஞான சம்பந்தன். வாழும் தமிழை, வளர்ந்து வரும் நம் இளையோருக்கு இதமாய், நயமாய் நல்கிச் சொல்லிட வாஷிங்டன் நகர் பேரவையின் தமிழ்ப் பயிற்சி முகாம் வரும் பாண்டிச்சேரி நல்லாசிரியர் பேராசிரியர் திரு. திருமுருகன் தமிழ்மொழி பகிர்ந்திட பயணமாகிறார் நியூஜெர்சி நோக்கி. 'பாவை நல்லாள் ஒருவர் போதும் நற்றமிழர் நால்வரையும் மிஞ்சிட என்ற போக்கிலே நம் நலம் கேட்டிட, நாதமாய் மீட்டிட வருகின்றார் சிங்கப்பூர் சிறப்பு விருந்தினர் திருவாட்டி மீனாட்சி சபாபதி அவர்கள்.

நிலையான தமிழ் கேட்போம் என்பவர்களே சுவையான தமிழ் காணவும் வேண்டுமல்லவா?

தஞ்சைத் தரணி தாங்கி வந்திடும் தமிழ்க் கலைஞர்களின் தரமான நுண்கலைகள், பழங்கலைகள், வில்லுப்பாட்டும், கரகாட்டமும், பொய்க்கால் குதிரையாட்டமும், நாட்டுப் பாடல்களும் நம்மை மகிழ்விக்க, மறுமலர்ச்சியில் இணைக்க வரும். வெள்ளி இரவு திகைப்புடனே அமையும். திரையுலகத்து மணியான, முத்தான, நகைச்சுவையாளர் மணிவண்ணனும், கோவை கொஞ்சுமொழி மிஞ்சி வரும் திருவாட்டி கோவை சரளாவும் கூவிடுமோ இந்த மயில் ஆண்மயிலே என திரு. மயில்சாமியும் நம் மனம் குளிர தம் திறம் காட்டுவர்.

இவரைப் பார்க்காத நாளும் ஒருநாளோ என மதிமயங்கும் மங்கையர்க்கு ஒரு திரைப்பட கதாநாயகன் திரு மாதவன் கொள்ளையோ, கொள்ளை கொஞ்சு மொழியாள் கொள்ளை என ஒரு திரைப்பட கதாநாயகி செல்வி சிநேகாவும் அலங்கரிப்பர் விழாக் கூடத்தை. எதைவிட்டாலும் இதை விட முடியுமா?

இசைக்குயில்களுடன் இனிய இனிமையும் இணைந்திழைக்கும் இன்பம் இதனை மறக்க முடியுமா எனக் காத்திருப்போருக்குக் காத்து உள்ளது திரு மகாதேவனுடன், செல்வி இலட்சுமியும் இணைந்து இனிய மொழி பாடிட ''அக்னி இசை இளையோர் குழு நாதமும், ஆனந்தமே அகிலமெல்லாம் ஆனாலும் நம் NTYO இளையோர் தரும் கருத்தாழ்ந்த உரையாடல்களும், இதமான கலைநிகழ்ச்சியும், நமக்கென்றே தோன்றிய தமிழ்ச்சங்கங்கள் படைத்திடும் பண்பாட்டுப் படையலும் பார்த்து மகிழவே நீவிர் வருவீர்! திரண்டு வருவீர்! நலம் பல சேர, நல்வாழ்த்து வழங்கிடுவீர்! எம் உறவே! நம் உறவில் உள்ளம் பூரிப்போம்!

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

2003 தமிழ்ச் சங்கப் பேரவை தமிழர்த் திருநாள் விழாக்குழு.

பாபு

© TamilOnline.com